கோடீஸ்வரன் வீட்டில் கூட இதை பார்க்க முடியாது : விஷால் புகழாரம்

இளையராஜா 75 விழாவிற்கு பிறகு, சென்னையில் இன்று முதல்வர் பழனிசாமி சந்தித்தார் நடிகர் விஷால். பின்னர் இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபனை பாராட்டினார்.

நடிகர் சங்க செயலாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து, இளையராஜா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் திரையுலகத்துக்கு ஆற்றியுள்ள சேவையை போற்றும் வகையில் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னையில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பார்த்திபன் குறித்து நடிகர் விஷால் புகழாரம்

இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதன் மூலம் திரட்டப்படும் நிதியை நலிந்த தயாரிப்பாளர்களின் நலனுக்கு பயன்படுத்த இருப்பதாக விஷால் முன்பே அறிவித்திருந்தார். இன்று முதல்வரை சந்தித்து முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,

“இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளித்த காவல்துறை மற்றும் தமிழக முதல்வருக்கு நேரில் சந்தித்து நன்றி கூறினேன். இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜாவையும் ரகுமானையும் ஒரே மேடையில் பார்க்க முடிந்தது. இயக்குநர் பார்த்திபனால் தான் அது சாத்தியமானது.

ஒரே மேடையில் இளையராஜா பாட, ரகுமான் இசை அமைக்க, இந்த காட்சியெல்லாம் வேறு எங்கும் பார்க்க முடியாது, கோடீஸ்வரன் வீட்டில் கூட நடக்காது. எவ்வளவு கோடி கொடுத்தாலும் பார்க்க முடியாது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் மேடையில் இளையராஜாவும், ரகுமானும் தோன்றினால் நன்றாக இருக்கும் என்பது இயக்குநர் பார்த்திபனின் யோசனை தான். அவர் நினைத்து செய்த விஷயம் இது.” எனத் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close