நடிகர் குமரிமுத்து தனது மகள் திருமணத்துக்காக நடிகர் விவேக் செய்த உதவியைக் கூறி, கலைவாணருக்குப் பிறகு அவன் ஒருவன் தான் நடிகன் என்று கண்ணீர் மல்க கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் திவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 17) அதிகாலை 5 மணி அளவில் காலமானார். நடிகர் விவேக்கின் மறைவு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
நடிகர் விவேக்கின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். நேற்று மாலை நடிகர் விவேக்கின் உடல் அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக் வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் நடுதல், சமூக மாற்றம் என பல வற்றில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வந்த பல இளைஞர்களை ஊக்குவித்தார். அவருடைய மறைவையொட்டி, அவர் சமூக ஊடகங்களில் ட்வீட் செய்த ட்வீட்கள், விவேக்கின் நகைச்சுவை காட்சிகள், விவேக்கின் நிகழ்ச்சிகள் என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில், 2016ம் ஆண்டு மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர் இறப்பதற்கு முன்பு ஒரு பேட்டியில், தனது மகள் திருமணத்துக்காக நடிகர் விவேக் செய்த உதவியைக் கூறி கண்ணீர் மல்க பேசிய பழைய வீடியோ ஒன்றை பலரும் பகிர்ந்து விவேக்கின் உதவும் மனப்பான்மையை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தனர்.
நடிகர் குமரிமுத்து 2016ம் ஆண்டு இறப்பதற்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “நகைச்சுவை நடிகர்களிலேயே கலைவாணருக்குப் பிறகு நான் துணிந்து சொல்வேன், யாரு என் மேல கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. எந்த நகைச்சுவை நடிகர் கோவிச்சுகிட்டாலும் பரவாயில்லை. தம்பி செந்தில்கிட்ட நானே சொல்லியிருக்கிறேன். எனக்கு கடைசி பொண்ணுக்கு கல்யாணம். என்கிட்ட காசு கிடையாது, ரொம்ப சிரமம். தம்பி விவேக் கிட்ட போய் சிலோன்ல ஒரு நாடகத்துக்கு கூப்பிடறாங்க. அதுக்கு போனால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் என் பொண்ணு கல்யாணத்துக்கு கிடைக்கும் என்று சொன்னேன். உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்னு கேட்டார். ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று சொன்னேன். எனக்கு என்ன கொடுப்பீங்க என்று கேட்டார். ஒரு 2 லட்சம் ரூபாய் வாங்கி கொடுக்கிறேன் என்று சொன்னேன். சரிண்ணா வரன்னுட்டார். ஃபிளைட் டிக்கெட் போட்டுட்டேன். அங்கே பைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் எல்லாம் போட்டுட்டேன். நாடகமும் முடிஞ்சு போச்சு. மறு நாள் காலையில சாயங்காலம் எனக்கு கரேக்ட்டா ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நான் ரொம்ப சந்தோஷம். அவர் ரூம் காட்டுங்கன்னாங்க. நானும் கூட்டிப்போனேன். நான் அழுதுட்டேன் சார். என் வாழ்க்கையிலயே சந்தோஷத்தில் அழுதது நான் அன்னைக்குதான். அந்த பிரசாத் வந்து 2 லட்சம் ரூபாயை விவேக் கையில அப்படி கொடுக்கிறாரு. நான் அந்த பக்கம் நிற்கிறேன். அந்த 2 லட்சம் ரூபாயை பிரசாத்துகிட்ட வாங்கி அண்ணே இந்தாங்கண்ணே இந்த 2 லட்சம் ரூபாயை வச்சுக்கோங்க. உங்க பொண்ணு கல்யாணத்துகாக நீங்க கஷ்டப்படறேன்னு சொன்னிங்களே. உங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்துட்டாங்களா? இந்த 2 லட்சம் ரூபாயை வச்சுக்கோங்க. உங்க பொண்ணு கல்யாணத்தை நல்லா நடத்துங்கண்ணே.” என்று கூறியதை நினைவுகூர்ந்து குமரிமுத்து அழுதுகொண்டே கூறுகிறார். தொடர்ந்து பேசும் குமரிமுத்து என் வாழ்க்கையிலே கலைவாணருக்குப் பிறகு அவன்தான் சார் ஆக்டர். அவன்தான் சார் மனுஷன்.” என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
மறைந்த நடிகர் குமரிமுத்து இறப்பதற்கு முன்பு அளித்த அந்த பேட்டியில், தனது மகள் திருமணத்திற்கு நடிகர் விவேக் வெளியே தெரியாமல் செய்த உதவியைக் கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“