ஐந்து தயாரிப்பாளர்கள் என்னை பகிர்ந்து கொள்ள கேட்டனர்: பிரபல நடிகை மேடையில் வாக்குமூலம்!

இந்தியா டுடே குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ‘சௌத் இந்தியன் கான்க்லேவ் 2018’ நிகழ்ச்சி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்தது. அதில், ‘செக்ஸிசம் இன் சினிமா – ஆணாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நேரம்’ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், படத்தொகுப்பாளர் பீனா பால், நடிகைகள் ப்ரணீதா சுபாஷ் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய ஸ்ருதி ஹரிஹரன், “அன்று எனக்கு 18 வயது. என்னுடைய முதல் கன்னட படத்திலேயே எனக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டது. அது மிகப்பெரிய வேதனையையும் வலியையும் ஏற்படுத்தியது. நான் அழுதுகொண்டிருந்தேன். இது பற்றி என்னுடைய டான்ஸ் மாஸ்டரிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘இந்த பிரச்னையை உன்னால் சமாளிக்க முடியாவிட்டால் இதில் இருந்து வெளியேறிவிடு’ என்றார்.

பின், நான் நடித்த கன்னட படம் ஒன்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் தமிழ் தயாரிப்பு உரிமையை ஒரு தயாரிப்பாளர் வாங்கினார். கன்னடத்தில் நான் நடித்த அதே பாத்திரத்தில் எனக்கு வாய்ப்பு வழங்குவதாக அந்த தயாரிப்பாளர் கூறினார். படத்தை இன்னும் நான்கு பேர் சேர்ந்து தயாரிக்க உள்ளதாகவும், அவர்களுக்கு தேவைப்படும்போது என்னை பறிமாறிக்கொள்ள சம்மதித்தால் வாய்ப்பு தருவதாக கூறினார். உடனே, நான் என்னுடைய செருப்பை எடுத்து அவரிடம் காண்பித்தேன்.

இந்த நிகழ்ச்சி திரை உலகில் மிக வேகமாக பரவியது. பல தயாரிப்பாளர்கள் அந்த தயாரிப்பாளரிடம் போன் செய்தும், நேரில் சென்றும் சம்பவத்தைப் பற்றி கேட்டுள்ளனர். என்னிடமும் நடந்த சம்பவத்தைப் பற்றி கேட்டார்கள். அவரிடம் சொன்னதை அப்படியே நான் சொன்னேன். இதனால் எனக்கு தமிழில் நல்ல வாய்ப்பு கிடைக்கவே இல்லை” என்றார் ஸ்ருதி ஹரிஹரன்.

இந்த கருத்து அமர்வில் சினிமா படத் தொகுப்பாளர் பீனா பால் பேசுகையில், “சினிமா உலகில் பெண்களுக்கு தொடர்ந்து சம உரிமை மறுக்கப்படுகிறது. பல திரைப்பட செட்களில் பெண்களுக்கு கழிப்பறை வசதி கூட செய்ய மறுக்கின்றனர்.

பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் எதையும் திரைத்துறையினர் பின்பற்ற மறுக்கின்றனர். இது பற்றி யாரிடம் புகார் செய்வது? இதற்கான விடை கிடைக்கும்பட்சத்தில் எடிட்டிங், மேக்அப், காஸ்டியூம் டிசைன் என பல துறைகளில் பெண்கள் இன்னும் அதிக அளவில் நுழைவார்கள்” என்றார்.

×Close
×Close