சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநராகவும் இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அண்மையில் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இந்தப் படம் கலவையான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவரின் சமீபத்திய நற்செயல் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள குழந்தைகளின் கல்விச் செலவுக்கு ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.
இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், "நான் படம் எடுத்து முடித்த பின் என்னுடைய துணை இயக்குநர்களின் குடும்பத்திற்கு உதவி செய்தேன். வெளியில் தெரிந்ததா என்று தெரியவில்லை. நான் இதை செய்த பின் பிற துணை இயக்குநர்களின் குடும்பத்தில் இருந்து அழைப்பு வந்தது. எங்களால் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. உதவி செய்யுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.
திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளது. இங்கு பலப் பேர் பணியாற்றுகிறார்கள். நான் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தொடர்ந்து உதவ வேண்டும் என்று நினைத்தேன். இதுகுறித்து சங்கத்தில் உள்ளவர்களிடம் பேசினேன். துணை இயக்குநர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய உள்ளேன். எனது உதவியின் மூலம் ஏதோ ஒரு குழந்தை, தாய்மார் பயனடைந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களது குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் வழங்க உள்ளேன். முதற்கட்டமாக ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“