பல படங்களை கையில் வைத்திருக்கும் அமலா பால்... மீண்டு வந்தது எப்படி?

அமலா பாலுக்கு மைனா படத்தின் மூலம் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியிலும் நல்ல வெற்றியை பெற்று தந்தது.

அமலா பால், இயக்குநர் ஏ.எல்.விஜய் இருவரும் திருமணம் செய்துகொண்டு இரண்டே ஆண்டுகளில் விவகாரத்தும் செய்து கொண்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீப காலமாக அதிக அளவில் கிசுகிசுக்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் அமலா பால். இந்தக் கிசுகிசுக்களும் சர்ச்சைகளும் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

அது அவர்களுடைய தனிப்பட்ட விவகாரம் என்பதால் அதற்குள் நாம் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால் இவ்வளவு சர்ச்சைகளும், பிரச்னைகளும் இருந்தாலும் தமிழில் மட்டுமே ஐந்து படங்களில் புக் ஆகி நடித்தும் கொண்டிருக்கிறார். இது எப்படி முடிந்தது என்பதுதான் ஆச்சரியம்.

வழக்கமாக நடிகைகளுக்குத் திருமணம் ஆனாலே அவர்களுடைய மார்க்கெட் குறைய ஆரம்பித்துவிடும். அதுவும் கிசுகிசுக்களும், சர்ச்சைக்குரிய தகவல்களும் வெளியானால் அவ்வளவுதான். ஆளே காணாமல் போய்விடுவார்கள். ஆனால் அமலா பாலுக்கு திருமணமும் ஆகி, விவகாரத்தும் ஆகிய நிலையில் இவ்வளவு சர்ச்சைகள், கிசுகிசுக்கள் உள்ள போதிலும் தொடர்ந்து பட வாய்ப்பும் கிடைத்து உற்சாகமாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது சினிமா நடிகைகள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்.

அமலா பால் சினிமா வாழ்க்கையைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். அவர் தமிழில் அறிமுகமான முதல் படம் சிந்து சமவெளி. சிந்து சமவெளியில் நடித்த அமலா பாலுக்கு பிரபு சாலமனின் மைனா படம் மட்டும் பிரேக் கொடுக்கவில்லை என்றால் எப்போதோ காணாமல் போயிருப்பார். ஏனெனில் சிந்து சமவெளி படத்தில் அவர் நடித்தது போன்ற கதாபாத்திரங்களில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு அப்படிப்பட்ட படங்கள்தான் என முத்திரை குத்தப்படுவது வழக்கம்.

அப்படி முத்திரை குத்தப்பட்டு காணாமல் போனவர்கள் ஏராளம். ஆனால் அப்படி ஒரு விஷயம் அமலா பால் விஷயத்தில் நடக்காமல் போனது அவரது அதிர்ஷ்டம். மைனா படத்தின் மூலம் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியிலும் நல்ல வெற்றியை பெற்று தந்தது.

அதனால் அடுத்தடுத்துப் படங்கள் கிடைத்தன. அதன் பிறகு முன்னணி ஹீரோக்களின் படங்களான தெய்வத் திருமகள், முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் வளர்ந்தார். அம்மா கணக்கு படத்தில் அவருடைய கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டன.


சமீபத்தில் கன்னடத்தில் இயக்குனர் கிருஷ்ணாவின் ‘ஹெப்புலி’படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வெளியாகித் திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் சொல்கின்றன. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்து பெரிய அளவில் வரவேற்கப்பட்ட படமான ‘குயின்’ மலையாள ரீமேக்கிலும் அமலா பால் நடிக்கிறார். மலையாளத்தில் மேலும் இரண்டு படங்களில் நடித்துவருகிறார். அதில் ஒன்று த்ரில்லர் வகைக் கதையாம். தமிழில் மட்டுமே தற்போது திருட்டு பயலே 2, வேலை இல்லா பட்டதாரி 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், மின்மினி மற்றும் பெயரிடப்படாத மற்றுமொரு படம் என பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். எவ்வளவு சர்ச்சைகள், பிரச்னைகள் வந்தாலும் தொடர்ந்து தன் சினிமா வாழ்க்கையில் உற்சாகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமலா பால், பிற நடிகைகளுக்கு முன்னுதாராணமாக இருக்கிறார் என்றால் மிகையில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close