கூகுள் சர்ச்சில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட டிரெண்டிங் வார்த்தை ‘பாகுபலி 2’ என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் நடிப்பில் வெளியான படம் ‘பாகுபலி’. இதன் முதல் பாகம், 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதியும், இரண்டாம் பாகம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதியும் ரிலீஸானது.
வரலாற்றுப் படமான இது, மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம், பல மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. அதுவும் ‘பாகுபலி’ முதல் பாகம் ஏற்படுத்திய பிரம்மிப்பால், ‘பாகுபலி 2’க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை சரியாகப் பூர்த்தி செய்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி.
தென்னிந்திய சினிமா, பாலிவுட் நடிகர்களின் வசூல் சாதனையை முதன்முறையாக முறியடித்து, இந்திய அளவில் சிறப்பு பெற்றது. இதனால், கான் நடிகர்கள் கூட கடுப்பாகினர். இந்தியா மட்டுமின்றி, உலக அளவிலும் இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. ஆயிரத்து ஐநூறு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ‘பாகுபலி 2’.
இந்த ஆண்டு கூகுள் சர்ச்சில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்னென்ன என்பதை கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது. அதில், ‘பாகுபலி 2’ தான் அதிகளவில் தேடப்பட்டு டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாகத்தான் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் இடம்பிடித்துள்ளது. ஐபில் இரண்டாம் இடத்திலும், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் மூன்றாம் இடத்திலும் உள்ளன.