ஏ படத்துக்கு எதிரான பாரதிராஜாவின் கண்டனமும், காரணங்களும்

இருட்டு அறையில் முரட்டு குத்து பட விமர்சனம், நடிகர் சங்க பெயர் மாற்றம் வரையில் நீடித்துள்ளது.

பாபு

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அது அடல்ட் காமெடி படமல்ல ஆபாசப்படம் என்ற வசை தொடர்ந்து அதற்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில் பாரதிராஜா இந்தப் படத்தை பெயர் குறிப்பிடாமல் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்று சொன்னார்கள். சமீபகாலமாக, சில தரம்கெட்ட திரைப்படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியம், இதிகாசம், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள், இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள், இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்துபோய்க் கிடக்கின்றன. கொண்டாட வேண்டிய திரைப்படங்கள், இன்று கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறை காயாக சொல்லப்பட்ட விஷயங்களை, இன்று இலைபோட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத்துறை.

தமிழ் மக்களே… ரசனை மாற்றமென்று தரம்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதைப் புறக்கணியுங்கள். சமீபத்தில் வெளியான முடை நாற்றமடிக்கும் ஒரு திரைப்படம், நம் தமிழ்நாட்டு இளைஞர்களைத் திசை திருப்பி, நம்முடைய ரசனையை மழுங்கடித்து, தற்போதைய தமிழகத்தின் பிரச்சினைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இவர்களுக்குத் துணை போவதால் தான், ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கிறது. காரணம், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும். ஏன்… இதற்கு மேலேயும் நடக்கும். இதற்கு ஒரு முடிவுகட்ட நாள் குறிக்க வேண்டும்.

இது ஒருபக்கம் இருக்கட்டும்… மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்சார் போர்டு என்ன செய்து கொண்டிருக்கிறது? சரியான விஷயங்களுக்குக் கூட கத்திரி போட்ட நீங்கள், சமீப காலமாக ஆபாசப் படங்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? எவ்வளவோ காலங்களாய் அடங்கிக் கிடந்த தமிழ் இனம், தற்போது பிரச்சினைகளைக் கண்டு வீறுகொண்டு நிமிர்ந்து நிற்க முயற்சி செய்யும்போது, எங்களை பலவீனப்படுத்த நீங்கள் செய்யும் சூழ்ச்சியோ என்றுகூட சந்தேகப்படுகிறேன்.

ஆபாசத் திரைப்படங்களைப் படைக்கும் படைப்பாளர்களே… நீங்கள் எடுக்கும் திரைப்படங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? சற்று சிந்திப்பீர். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கு திரை ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது எழுதப்பட்ட வாழ்க்கை என்பதை உணருங்கள். மத்திய தணிக்கைக்குழு அதிகாரிகளே… இரண்டாம் தரமான படைப்புகளை மறு பரிசீலனை செய்யுங்கள். இல்லையென்றால், சென்சாரையே சென்சார் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.”

இந்த அறிக்கையில் அவர் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறார். தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும் தெரியாதவர்கள் பதவியில் இருப்பதால்தான் இவ்வளவும் நடக்கின்றன என்கிறார்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருப்பவர் நடிகர் விஷால். அவர் தெலுங்கர் என்ற விமர்சனம் வலுவாக உள்ளது. அவரை ஆதரிப்பவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை எடுத்த ஞானவேல்ராஜா. இதைத்தான் பாரதிராஜா பூடகமாக சுட்டிக் காட்டுகிறார்.

தமிழ்த்தேசிய பார்வையிலான விமர்சனங்களை சீமானுடன் சேர்ந்த பிறகு அதிகமாக வைக்கிறார் பாரதிராஜா. அதேநேரம் அவரது இந்த விமர்சனம் முன்பிருந்தே இருக்கிறது. உதாரணமாக, அவரது மகன் மனோஜ் நடிகராக இருந்தும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கிடையாது. என்றைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுகிறார்களோ அன்றுதான் என்னுடைய மகன் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகச் சேருவான் என்று அறிவித்து இன்றுவரை அதை கடைபிடித்து வருகிறார் பாரதிராஜா.

பாரதிராஜாவின் இந்தப் பார்வை சரியா?

ஒருகாலத்தில் மதராசப்பட்டணம்தான் தென்னிந்திய மொழி சினிமாக்கள் அனைத்திற்கும் தலைநகரமாக இருந்தது. சென்னையில்தான் அனைத்துமொழிப் படங்களும் தயாராயின. அதனால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் வைக்கப்பட்டது.

ஆனால், விரைவில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப் படங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களிலேயே எடுக்கப்பட்டன. அவர்களும் தெலுங்கு நடிகர் சங்கம், கன்னட நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கம் என தனித்தனி நடிகர் சங்கங்களை ஏற்படுத்தினர். ஆனாலும், தமிழ்நாட்டில் மட்டும் நடிகர் சங்கம் தென்னிந்திய என்ற பெயரில் இயங்குகிறது. அதை தமிழ்நாடு என மாற்றுங்கள் என்பது பாரதிராஜா உள்ளிட்டவர்களின் வாதம். இதற்கு சில காரணங்களை அவர்கள் முன் வைக்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் வைத்தாலும் இந்த சங்கத்தின் முடிவுகள் மலையாள, கன்னட, தெலுங்கு நடிகர்களை கட்டுப்படுத்தாது. அவர்கள் மாநிலத்தில் அமைந்துள்ள சங்கத்துக்கு மட்டுமே அவர்கள் கட்டுப்படுவார்கள். அப்படியிருக்கையில் தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயரை மாற்றாமல் தென்னிந்திய நடிகர் சங்கம் என தொடர்வதில் என்ன அர்த்தம் உள்ளது?

தமிழ் சினிமாவில் தமிழர்கள் மட்டுமில்லை, தெலுங்கு, மலையாள, கன்னட நடிகர்களும் நடிக்கிறார்கள், அதனால் தென்னிந்திய என்ற பெயர் சரியே என்பது சிலரது வாதம்.

மலையாள, கன்னட, தெலுங்கு சினிமாவிலும் பிற நடிகர்கள் நடிக்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் மாநிலத்தில் இயங்கும் சங்கத்துக்கு தென்னிந்திய என்ற பெயரையா வைத்திருக்கிறார்கள் என்பது பாரதிராஜா தரப்பினரின் வாதம். கடந்த நடிகர் சங்க தேர்தலின் போதும் இந்தச் சர்ச்சை எழுந்தது. ரஜினி தமிழ்நாடு என்று பெயர் மாற்றலாம் என்றார். கமல் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும் என்றார்.

இந்த மொழி, இனப்பற்றின் தொடர்ச்சியைத்தான் பாரதிராஜாவின் கண்டனத்தில் பார்க்கிறோம். தமிழ் சினிமாவில் பிறமாநிலத்தவர்களின் ஆதிக்கமே இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் வருவதற்கு காரணம் என்கிறார்.

அவரது குற்றச்சாட்டு சரியா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

×Close
×Close