ஓவியா எனும் அழகிய திமிர் 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரின் கேரக்டரையும், அவர்கள் மூலம் கமல் சந்தித்த பிரச்னைகளையும், தமிழர்களின் குணத்தையும் விவரிக்கிறது, கட்டுரை.

அபி அப்பா என்ற தொல்காப்பியன்

எந்த சுபயோக சுபதினத்தில் அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட விஜய் தொலைக்காட்சி “பிக்பாஸ்” தொடங்கினார்கள் என தெரியவில்லை. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தவைகளுக்கும் மேலாக அரசியல் யுத்தம் ஆரம்பித்து அது தொடர்ந்து கொண்டும் இருக்கின்றது. இப்போது பிக்பாஸ் குடும்பத்துக்குள் நுழைவோம்…

ஸ்ரீ. வந்த இரண்டாம் நாளே துண்டைக்காணோம் துணியைக்காணோம் என ஓடிவிட்டார். அனுயா. நடிகை. வந்தார்… போனார். அவ்வளவே.

கஞ்சா கருப்பு – மண் வாசனை மாறாத குணம். கோபம் வந்து பரணியை ஃபயர் எக்ஸ்டிங்கியூஷரை எடுத்து அடிக்கப்போகும் அளவுக்கான அறிவு மட்டுமே. கொஞ்சம் சிந்தித்து இருந்தால் அந்த பரணி தன் உடல் வலிவு கொண்டு கட்டி பிடித்து இருப்பாரேயாகின் அன்றைக்கே பிக்பாஸ் நிகழ்வுக்கு “பாடை” கட்டப்பட்டிருக்கும். பரணியின் சமயோஜிதம் தான் இன்றைக்கு வரை பிக்பாஸ்.

ஆர்த்தி. தான் குண்டாக இருக்கின்றோம் என்கிற தாழ்வு மனோபாவம் அவரிடம் அதிகம். குரூப் சேர்த்தல். அதிலே அரசியல் செய்தல்… எல்லாம் அவர் கற்றுக்கொண்டு அரசியலுக்கு வந்தாரா அல்லது அவை எல்லாம் தன்னோடு கூடப்பிறந்ததா என்பது தெரியவில்லை. ஜூலியை அவர் நசுக்கி எடுத்த காரணம் “அவர் நடிக்கின்றார்” என்பதாகும். அது உண்மை தான் என்பது எல்லோருக்கும் தெரியும் காயத்ரி உட்பட. ஆனால் அந்த நடிப்பை வெளிப்படுத்தியது காயத்ரி, சக்தி, சினேகன் என ஒரு குழு மிக வசதியாக ஆர்த்தியை அந்த யாக குண்டத்தில் போட்டது தான் உச்ச பட்ச தந்திரம்.

கனேஷ்.. முட்டை திருடுகிறார் என்பது அவர் மீது இருக்கும் அல்பை குற்றச்சாட்டு. ஆறு அடி இரண்டு அங்குலம் மற்றும் இந்திய பிரதமர் அளவுக்கு இல்லாவிடினும் அதை விட ஒரு இன்ச் சின்ன மார்பை வைத்து இருப்பவருக்கு முட்டை போடாதது பிக்பாஸின் குற்றமே. எந்த டாஸ்க் கொடுத்தாலும் சிறப்பாக முயல்கின்றார்.  இனி  வரும் சண்டைகளில் கம்புசுத்துவதை பார்க்க ஆவல். ஆனால் அது சிவகார்த்திகேயனுக்கு முன்னால் பரோட்டா சூரி பஞ்ச் பேசுவது போல சிரிப்பாகத்தான் இருக்கும்.

இயக்குனர் பி . வாசுவின் மகன் சக்தி பேசும் போது மிக அழகான தெளிவான பேச்சு. அந்த உடல்மொழிக்கும், அந்த குரலுக்கும், சினேகனை அவர் மதிக்கும் விஷயத்திலும், காயத்ரியிடம் ஒரே படுக்கையில் போர்த்திக்கொண்டு படுக்கும் போதும், ஒன்று தான் நியாபகம் வருகின்றது. கிங்காங் என்னும் ஒரு நடிகர் ஓட்டை பிரித்துக் கொண்டு நடிகர் வடிவேலு மேலே ஏறி நின்று கொண்டு அடிப்பார். வடிவேலு சிரிப்பார். காரணம் கேட்ட, “கொழந்த அடிச்சது போலவே இருக்கு” என்பார். அது போலத்தான் சக்தியின் தாதாகிரித்தனங்கள். சின்னத்தம்பி படத்தில் சின்ன பிரபுவாக இருந்த அளவுக்கு தான் இப்போதும் அவர் நடவடிக்கைகள்.

காயத்ரி. டான்ஸ் மாஸ்டர் ரகுராம் என்னும் ஜாம்பவான் புதல்வி. சரளமாக அன்பார்லிமெண்டேரியன் வார்த்தைகள் பேசுவது அவரது பிகேவியராக இருக்கட்டும். தப்பில்லை. அதை சுட்டிக்காட்டும் போது கூட திருந்த மனம் வரவில்லை.

சினேகன். பொரணி பேசவே ஒரு பிறவி எடுத்தவர். ஓவியா விஷயத்தில் அவர் கடைசி கட்டத்தில் பிழிந்து பிழிந்து அழுதது, நிச்சயமாக ஓவியாவை மனதில் வைத்து இல்லை. தான் உதறிவிட்ட அல்லது அவரை உதறிவிட்ட தன் குடும்பத்துக்காகத்தான்.

ஓவியா. அவரின் முதல் வெளிப்பாடு என்பது, சினேகன் அந்த வீட்டின் தலைவராக இருக்கும் போது கொடுத்த பட்டம் “சோம்பேறி” என்கிற பொருள் பட ஒரு கேடயம். “இதை நான் வாங்க மாட்டேன்” என அவர் சொன்ன போது தான் ஓவியா மீது தமிழக மக்கள் முதன் முறையாக நிமிர்ந்து அமர்ந்து பிக்பாஸ் பார்க்க தொடங்கினர். அப்போது நிமிர்ந்த தமிழர்கள், ஓவியா தண்ணீரில் மூழ்கிய போது நிஜமாகவே மூழ்கித்தான் போயினர்.

ஓவியா ஆர்மி, ஓவியா ரெஜிமெண்ட், ஓவியா பாறைகள், ஓவியா விழுதுகள், save ovia,  இன்னும் பல… பல… ஒரு குருப்பில் ஒரே நாளில் 5000 உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் எனில் தமிழர்கள் மடையர்கள் இல்லை. நேர்மைக்கு முதலிடம் கொடுப்பவர்கள். ஜல்லிக்கட்டுக்காக “போராடிய?” ஜூலிக்கு என்ன மதிப்பு கொடுத்தனர் தமிழர்கள் என புரிந்து கொள்ளுங்கள்.

சனிக்கிழமை கமல் ஓவியாவிடம் பேசும் போது என்ன ஒரு கெத்து. என்ன ஒரு அழகிய திமிர். தன் பழக்கம் கால் மீது கால் போட்டு அமர்வது. கமல் என்னும் ஜீனியஸ். அவர் முன்பாக அமரும் போது கூட அந்த கால் மீது கால் போட்டு அமர்வது என்பது, அவர் மன வியாதிக்கு ஆட்பட்டவர் அல்ல. அவர் ஒரு சுயமரியாதைக்காரர் என்பது மட்டுமே நிஜம். ஆனால் அவர் கமல் மீது அவர் காலை போட்டால் தான் அவர் மனநிலை சரியில்லாதவர்.

ஆரவ். இவரின் முகம் கமலால் கிழிக்கப்பட்டது. இனியும் பெண்கள் ஆரவ்களால் ஏமாறக்கூடாது என்பதும், மருத்துவ முத்தம் என்பது கண்டிக்கப்பட வேண்டியதும், இனியும் ஆரவ்கள் இல்லா உலகம் காண்போம்.

வையாபுரி. எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு என அவர் நினைத்த போதே, அனேகமாக அவரும் கணேஷும் தான் கடைசி வரை நிலைத்து இருப்பார்கள் என தோன்றுகின்றது.

ஜூலி…. இணையத்தில் வந்த ஒரு கலாய்ப்பு உரையாடல்…

ஓவியா (prayer) : கர்த்தரே… தோத்திரம் கர்த்தரே தோத்திரம்

இதைக்கேட்ட ஜூலி ஓடிப்போய் காயத்ரியிடம் : அக்கா அக்கா ஓவியா நீங்க பிக்பாஸ் போட்டியிலே காயத்ரி தோக்கனும் காயத்ரி தோக்கனும்”ன்னு வேண்டிக்கிறா அக்கா.

இதை விட அழகாக யாருக் ஜூலியின் கேரக்டரை சொல்ல இயலாது. தட்ஸ் ஆல்! இதல்லாம் கமல் சாருக்கு தெரியாமலா போகும். தெரியும். ஏனனில் தன் வீட்டு இணையத்தில் காதுகுத்துபவர்கள் எல்லாருமே கமல் டிவிட்டர் பக்கத்தில் தான் மொய் வைக்கின்றனர். ஆமாம் அங்க போய் லிங்க் இணைப்பு கொடுத்து விடுகின்றனர்.

இதெல்லாம் பிக்பாஸ் குடும்பத்தின் உள்ளே!

வெளியே கமலுக்கு நடந்த கொடுமைகள் தான் நிகழ்சியின் உச்சம்.

“சேரி பிகேவியர்” என காயத்ரி சொன்னதுக்கு இவர் அதாவது கமல் தான் சிலுவை சுமந்தார். சில பல விளக்கங்கள் அவர் சொல்லும் போது “தமிழகத்தில் ஊழல் எங்கும் மலிந்து விட்டது” என சொன்னார். அதன் பின்னர் அதிமுக அமைச்சர்கள் தனித்தனியாக, குழுவாக என்றெல்லாம் கமலை வறுத்து எடுத்தனர். முடிந்ததா அத்தோடு, அடுத்த பிரஸ் மீட். அடுத்து கமல் அரசியலுக்கு வரப்போகின்றார். போவதில்லை. அது சம்பந்தமாக சில பல நடிகர்கள் பேட்டிகள், கமல் ரசிகர்கள் கொந்தளிப்பு, அதிமுகவினர் ரகளை, திமுக ஆதரவு, முரசொலி விழாவில் கமல் கலந்து கொள்வது, சண்டியரை விருமாண்டியாக்கிய குரூப் 100 கோடி கேட்டு வழக்கு.  அவர் பணக்கஷ்டம் அவருக்கு! கமலுக்கு தூக்கம் போனது பிக்பாஸால். கமலின் தூக்கம் தின்றது அந்த தொலைக்காட்சியே.

எல்லோர் வீட்டிலும் ஜூலிகள் உண்டு, ரைசாக்கள் உண்டு, கண்டிப்பாக காயத்ரியும் உண்டு. ஜூலியை நீங்கள் வைத்து செய்தீர்கள் கமல் சார். வீட்டில் ஒரு குழந்தையை பார்த்து “அந்த அங்கிளை கடிக்காதம்மா” என சொன்ன பின்னர் அந்த குழந்தை கடிக்குமே, அது தான் நடந்தது. “இது என் தங்கை, என் ரசிகர்களும், ஓவியா, ஜூலி ரசிகர்களும் இவரை என் தங்கையாக பார்க்க வேண்டும். யாரும் எந்த கெடுதலும் செய்யக்கூடாது” என சொல்லும் போதே, நீங்கள் ஆசைப்பட்டது நடந்து விட்டது. அந்த பெண் பரணி வீட்டுக்கு சென்று விட்டு திரும்பும் போது ஒரு கால் டாக்ஸி கூட ஏற்றவில்லை. முகத்தை மூடிக்கொண்டு வாழும் நிலை வந்து விட்டார். இது தான் நீங்கள் ஆசைப்பட்ட பிக்பாஸ் வெற்றியா? காயத்ரியோ, சக்தியோ பெங்களூருக்கு ஆடி காரில் போய் அழகாய் வாழ்வார்கள். பாவம் அந்த அடிமை தமிழச்சி என்ன செய்வாள் என்பதை உணருங்கள் பிக்பாஸ்!

இனி கூட ஓமு, ஓபி என பிரித்து விடுவார்கள். (ஓவியாவுக்கு முன்னர், ஓவியாவுக்கு பின்னர்) தமிழகர்கள் நேர்மைக்கும், சுயமரியாதைக்கும் ஏதாவது பிரச்சனை எனில் எவிக்‌ஷன் தான், பிக்பாஸ் மூலம் தமிழர்கள் சொன்ன ஒரு விஷயம். தமிழச்சியாக இருந்தாலும், தலை மசாஜ் செஞ்சுகிட்டே இருக்கும் அடிமை நாங்கள் இல்லை. உண்மை பேசினால் மலையாளியாக இருந்தாலும் எங்கள் தேவதை தான்! இதாண்டா தமிழன்.

×Close
×Close