Advertisment

உருளைக்கிழங்குக்கு அக்கப்போரா! என்ன கேப்டன் இதெல்லாம்? பிக் பாஸ் 4 விமர்சனம்

சண்டை போட்டு ரொம்ப சூடா இருக்கீங்க கொஞ்சம் சில் பண்ணுங்கன்னு அடுத்த நாள் காலை 'சில் ப்ரோ..' பாடலோடு ஆரம்பமானது.

author-image
priya ghana
New Update
Bigg Boss 4 Tamil Suresh Chakravarthy controversies tamil entertainment news

Bigg Boss 4 Tamil Suresh Chakravarthy controversies

Bigg Boss 4 Tamil Day 3 Review: வருத்தம்பா, ரொம்ப வருத்தம். ப்ரோமோல வந்தது எதுவுமே எபிசோடுல காணுமே! அதனால ரொம்பவே வருத்தம். ஆனாலும், தமிழ்நாட்டில் இருக்கும் பல ஸ்டீரியோடைப்புகளை மையப்படுத்தி நம்ம போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் டாப் க்ளாஸ். சரி வாங்க மூன்றாம் நாள் கலாட்டாக்களோடு ரேட்டிங் மாற்றங்களையும் பார்த்துடலாம்.

Advertisment

இரண்டாம் நாள் பிற்பகல், அனிதாவின் 'யூடியூபர்' அவதாரத்தோடு சுவாரஸ்யமாகவே ஆரம்பமானது நேற்றைய எபிசோட். ஸ்கிரிப்ட் எதுவுமில்லாமல் உச்சரிப்பு மற்றும் மாடுலேஷனில் அனிதா ஆங்கர் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. (நல்லாதான் இருக்கு!)

அடுத்ததாக அனுபவ பகிர்வில் கேபிரியல்லா தான் சந்தித்த வேதனையான நொடிகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பகிர்ந்துகொண்ட கன்டென்ட் பெரும்பாலும் உலகளவில் அனைவராலும் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைதான். 'பாடி ஷேமிங் (Body Shaming)' அதாவது உடல் கேலி. நாம் எப்படி இருந்தாலும் இந்த உலகம் நம் மீது குறை கண்டுப்பிச்சுட்டேதான் இருக்கும். அதுலயும் இந்த உடல் கேலி இருக்கே. உடல் எடை அதிகமானாலும் சரி, பார்க்க ஒல்லியாக இருந்தாலும் சரி, மத்தவங்க சொத்தை அழிக்குற ரேஞ்சுக்கு பேசிடுவாங்கபா. அப்புறம் என்ன டயட், ஜிம்னு பையைத் தூக்கிட்டுக் கிளம்ப வேண்டியதுதான். சமீபத்தில் 'கீட்டோ டயட்' மூலம் உடல் எடையை குறைக்கபோறேங்குற பேர்ல 28 வயது இளம் நடிகை உயிரிழந்த சம்பவமே அதற்கு ஒரு உதாரணம். மிகவும் எமோஷனலாக இல்லையென்றாலும், கேபி குறிப்பிட்ட பாயின்ட் மிக முக்கியமானது.

அடுத்து சமையலறை சண்டை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானப்பா கைகொடுத்து சமாதானம் ஆனீங்க. அதுக்குள்ள 'மறுபடியும் முதல்ல இருந்தா' என பனிப்போரைத் தொடங்கினர் சுரேஷ் மற்றும் அனிதா. உருளைக்கிழங்கிற்காகச் சண்டை. 'அனிதாவுக்கு ஏதோ சைக்காலஜி பிரச்சனை இருக்கு', 'துஷ்டனை கண்டா தூர விலகனும்' போன்ற வார்த்தைகள் நிச்சயம் எதிரில் இருப்பவரை அதிகமாகவே தூண்டும். 'பேசுங்க பேசுங்க நோட் பண்ணிட்டுதான் இருக்கேன்' என்பதுபோல இருந்தது அனிதாவின் ரியாக்ஷன். கேப்டனிடம் கம்ப்ளைன்ட் வரை நீண்டது இவர்களின் வாக்குவாதம். இருவருமே பொறுமையாகப் போயிருக்கலாம். (ஓ சாரி! கன்டென்ட் முக்கியம் பாஸ்!).

Bigg Boss 4 tamil review score Bigg Boss 4 tamil review Anitha and Suresh Chakravarthy

சண்டை போட்டு ரொம்ப சூடா இருக்கீங்க கொஞ்சம் சில் பண்ணுங்கன்னு அடுத்த நாள் காலை 'சில் ப்ரோ..' பாடலோடு ஆரம்பமானது. 'ஐ அம் சில்தான் ப்ரோ' என்றிருந்தது அனிதாவின் நடனம். காலையிலேயே எப்படிதான் இவ்வளவு எனெர்ஜெடிக்கா டான்ஸ் ஆடுறாங்களோ!

அடுத்து நேரடியாக அனுபவ பகிர்வு டாஸ்க்தான். சும்மா சொல்லக் கூடாது, ரேகா எல்லோருடனும் மிங்கிலாக ட்ரை பண்ணுறாங்க. அனுபவ பகிர்வில் முதல் ஆளாகக் களமிறங்கியதும் ரேகாதான். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, முதல் படமே இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் தானாகவே அமைந்து, நாற்பது திரைப்படங்களுக்கு ராஜா சார் இசை என்று சாதித்துள்ளார். இவருடைய பகிர்வில் எமோஷனல் கன்டென்ட் எதுவுமில்லை என்றாலும், யார் பற்றி யாரும் மதிப்பிடுவதுக்கு உரிமை இல்லை என்கிற கருத்து நூறு சதவிகிதம் உண்மை. ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரியாமல், எளிதில் ஓர் முடிவுக்கு வருவது நம் எல்லோரிடமும் இருக்கிற பேசிக் குணம். அது மிகவும் தவறான செயலும்கூட. 'ஆனால், அதைத்தான் இப்போது நீங்களும் செய்துகொண்டிருக்கிறீர்கள்' என்கிற உங்கள் மனக்குரல் நன்றாகவே கேட்கிறது. (என்ன பண்ணுறது பாஸ்!)

அடுத்து, மாடல் மாம் சம்யுக்தா. இவருடைய பகிர்வு மிகவும் உருக்கமாகவும், மாடல்கள் மீதிருக்கும் ஸ்டீரியோடைப்பை உடைத்தெறியும் விதமாகவும் இருந்தது. 'கஷ்டம்னு சொல்ல மாட்டேன். ஆனால், வாழ்க்கைல நான் கடந்து வந்த சவால்களை சொல்லுறேன்' என ஆரம்பித்து, 'மாடல்களை பற்றி வீட்டிற்கு வெளியே தவறாகப் பேசலாம் ஆனால் வீட்டிற்குள்ளேயே அப்படி நினைப்பது..' என்று சொல்லி முடிக்க முடியாமல் தடுமாறினார். தன் மகனுக்கு நிகழவிருந்த பெரும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்திருந்த தாய்மையின் வெளிப்பாடு 'அழகு'. மாடல் அம்மாக்களின் உலகைப் பற்றி வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அனைவரின் மனதையும் கவர்ந்தார் சம்யுக்தா. இறுதியில், 'பெண்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததுதான். ஆனா, அந்த டஃபுக்கே டஃப் கொடுக்கணும்' என்றுகூறி அப்லாசுகளை அல்லிச் சென்றார். பிறகு இந்த ஸ்டீரியோடைப் உடைத்ததைப் பற்றி மிகவும் அழகாக சம்யுக்தாவுடன் பகிர்ந்துகொண்டார் சுரேஷ் சக்ரவர்த்தி.

Bigg Boss Tamil 4 Samyuktha Karthik Bigg Boss Tamil 4 Samyuktha Karthik

'உன் வாழ்க்கையை நீயே அமைச்சுக்கோ. என்னால இவ்வளவுதான் முடியும்' எனக்கூறி தன் தந்தை கொடுத்த பத்தாயிரம் ரூபாயோடு சென்னை வந்த ஆரி, வலிகள் நிறைந்த பாதைகளைப் பகிர்ந்துகொண்டார். தான் நடித்த முதல் படம் சிறந்த பிராந்திய மொழி படமாகத் தேர்வு செய்யப்பட்ட போதிலும் திரையரங்குகளில் வெளிவராதது, முதல் படப்பிடிப்பின்போதே தந்தை இறந்தது, அம்மாவிற்கு பார்க்கின்சன் நோய் வந்தது எனப் பல துயரங்களைப் பகிர்ந்தவர், எல்லா துயரங்களிலும் மனம் தளராமல் தன்னை ஊக்குவித்த தன் வாழ்க்கை துணைவி பற்றியும் கூறினார். ஓர் படப்பிடிப்பிற்கு இடையில் அவருடைய தாய் இறந்த செய்தி கேள்விப்பட்டவர், ஷூட் முடிந்தபிறகே ஊருக்குக் கிளம்பினார். அதற்குப் பின்னால் இருக்கும் வலிகளைக் கொச்சையாகப் பேசியவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தது அவருடைய விளக்கம். அதிலும், அதிர்ஷ்டம் அது இஷ்டத்துக்குதான் வரும்' என்ற பன்ச் ஹயிலைட். ஆக மொத்தத்தில் மிகவும் இன்ஸ்பைரிங் பேச்சாக இருந்தது.

நடுத்தர வீட்டு இளம் பையனின் கனவுகள், அதை நோக்கி ஓடும்போது படுகிற வேதனை எனத் தன் வாழ்க்கைப்பற்றி தெளிவாகப் பகிர்ந்துகொண்டார் ரியோ. 'கத்துக்கணும், காத்திருக்கனும் பிறகுச் சரியான நேரத்தில் களத்துல இறங்கணும்'. இது ரியோவின் பன்ச். ஆக, எல்லோரும் பன்ச் பாலாக்கள் ஆகிட்டாங்கப்பா.

சரி எப்போடா சண்டை காட்சி வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா, நம்ம கேப்டன் ரம்யாகிட்ட 'இது கம்ப்ளெயின்ட் இல்ல'னு சொல்லி 1000 புகார்களை அடுக்கினார் சுரேஷ். 'இப்போ நான் என்ன பண்ண! தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை' ரேஞ்சுக்கு ரம்யா பாண்டியன் திணறினார். அனிதா வரிசையில் அடுத்து சனம் சேர்ந்துவிட்டார். நடுவில் இந்த மொழி மற்றும் மாடுலேஷன் பிரச்சனை வேற. இதுவே மோகன் வைத்தியாவாக இருந்திருந்தால் அவருடைய ட்ரீட்மேன்ட்டே வேற மாதிரி இருந்திருக்கும். பாவம் சுரேஷ் சாருக்கு தெரில!

சரி வாங்க இப்போ ரேட்டிங் பார்க்கலாம்:

அன்றைய நாளில் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளை வைத்தே இந்த மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. 100 மதிப்பெண்களுக்கு எங்களுடைய மதிப்பெண் காரணத்தோடு அளவிடப்படுகிறது. மூன்றாம் நாளில் அனைவரையும் ஃபோக்கஸ் செய்யாத காரணத்தால், நேற்று லைம்லைட்டில் இருந்தவர்களுக்கு மட்டும் ரேட்டிங் மாற்றப்பட்டுள்ளது. மற்றவர்களின் மதிப்பெண்களில் எந்த மாற்றமும் இல்லை. பார்ப்போம் நம் கணிப்பு இறுதி நாள் வரை சரியாக இருக்கிறதா என்று!

ஆரி (71 டூ 70) : அனுபவ பகிர்வில் மிகவும் யதார்த்தமாகவும், நேர்மையாகவும் தான் கடந்து வந்த பாதைகளைப் பகிர்ந்துகொண்டார். தற்போது வரை முதிர்ந்த மனநிலையோடு அனைத்தையும் கையாளுகிறார். இதைத் தவிர மற்றவர்களோடு எந்த அளவிற்கு மிங்கில் ஆகிறார் என்பதைப் பற்றி இன்னும் சரிவர நமக்குக் காட்டப்படாததால் அவருக்கு 70 மதிப்பெண்கள்.

பாலா (51 டூ 59) - மற்றவர்களோடும் மிங்கில் ஆகா ஆரம்பித்துவிட்டார் பாலா. சுரேஷ், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று மிகவும் கோபமாகக் கூறியபோது, "அப்போ எருமைமாட்டுக்கு?" என்று கேள்வி எழுப்ப, தமிழ்நாட்டையே சிந்திக்க வெச்சுட்டார். கொஞ்சக் கொஞ்சமாக தன் இயல்பை வெளிகொண்டுவருவதால் அவருக்கு இன்று 59 மதிப்பெண்கள்.

Balaji Murugadoss Bigg Boss Tamil 4 Bigg Boss 4 Tamil Balaji Murugadoss

ரியோ (62 டூ 68) - தன் அனுபவ பகிர்வு தவிர, பெரிதாக அனைவருடனும் பேசிக்கொள்வது போலத் தெரியவில்லை. ஆனாலும் அவருடைய அந்த 'பன்ச்'காக ரியோவிற்கு 68 மதிப்பெண்கள்.

சுரேஷ் (39) - முதல் வாரத்தின் 'கன்டென்ட் கிங்' இவர்தான். ஷார்ட் டெம்ப்பர். என்றாலும் அவர் உபயோகிக்கும் வார்த்தை நிச்சயம் 'ட்ரிகர்' செய்யும். ச்சே..! ட்ரிகர் சக்தி இருந்திருக்கலாம்! வார்த்தைகளில் கவனம் வேண்டும் என்பதற்காகவும் அவருடைய மனநிலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதாலும் இவருடைய மதிப்பெண்களிலும் எந்தவித மாற்றமும் இல்லை.

ரேகா (53 டூ 62) - எமோஷன்ஸ் இல்லா வாழ்க்கை யாருக்கும் இருந்திருக்காது. இவர் வாழ்வில் அப்படி ஏதும் உண்மையிலேயே இல்லையா அல்லது பகிர்ந்துகொள்ள விரும்பவில்லையா என்பது தெரியவில்லை. நான் கொஞ்சம் லொடலொடதான். ஜாலியா இருக்கணும்னு வந்துருக்கேன் என்று வெளிப்டையாகப் பேசியதற்காக ரேகாவிற்கு 62 மதிப்பெண்கள்.

ரம்யா பாண்டியன் (70 டூ 55) - வீட்டின் தலைவராக இருந்து, சரியான முடிவை எடுக்கத் தயங்குகிறாரா அல்லது முடிவெடுக்கும் பக்குவம் இல்லையா என்பது கேள்விக்குறி. எப்போதும் அனைவரின் 'குட் புக்கில்' இருக்க முடியாது.  எப்போதும் சிரித்துக்கொண்டே அனைத்தையும் கடந்துவிடலாம் என்று வந்திருப்பார்போல. தலைவராக இருந்துகொண்டு பிரச்சினையின்போதும் சீரியஸாகமால் இருக்கும் பண்பு ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இந்த பின்னடைவு காரணத்தினால் இவருக்கு 55 மதிப்பெண்கள்.

Bigg Boss 4 Tamil Ramya Pandian Bigg Boss 4 Tamil Ramya Pandian

சம்யுக்தா (56 டூ 74) - மிகவும் ஆழமான அனுபவ பகிர்வு. மாடல் உலகின் பல தவறான எண்ணங்களை உடைத்தார். தனியாக இருந்தாலும் தைரியமாக உலகை எப்படி அணுக வேண்டும் அதிலும் மாடல் துறையில் இருக்கும் பெண்கள் தங்களின் மனநிலையை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் இந்த சூப்பர் அம்மாவுக்கு 74 மதிப்பெண்கள்.

அனிதா (81 டூ 65) - வெள்ளை கொடி காட்டி சமாதானம் ஆனதெல்லாம் பொய்யா என்றுதான் தோன்றுகிறது. என்றாலும், சுரேஷின் வார்த்தைகளும் ஆழமாக உள்ளது. first impression is the best impression என்பது போல இருவரின் முதல் இம்ப்ரெஷன் ஒருவருக்கொருவர் மிகவும் மோசமாக உள்ளதே இதற்கெல்லாம் காரணம். நிலைமையை இன்னும் நன்றாகவே கையாண்டிருக்கலாமோ என்ற அடிப்படையில் அனிதாவிற்கு 65 மதிப்பெண்கள்.

கேபி (68 டூ 72) - அனுபவ பகிர்வைத் தாண்டி பெரிதாக எல்லோருடனும் மிங்கில் ஆவதுபோல் தெரியவில்லை. இருப்பினும், உடல் கேலி பற்றி வெளிப்படையாகப் பேசியதற்காக 72 மதிப்பெண்கள்.

சனம் (57 டூ 60) - இப்போதுதான் ஃபார்முக்கு வருகிறார் சனம் ஷெட்டி. சாந்தமாக இருந்தவர் நேற்று சுரேஷின் அடுத்த டார்கெட்டாக மாறியிருக்கிறார். வரும் நாள்களில் முழு சந்திரமுகியைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் 60 மதிப்பெண்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment