ஆண்கள் அவர்களின் உள்ளாடைகளை துவைக்க கொடுத்தார்கள்... பிக் பாஸ் 2 மமதி பரபரப்பு குற்றச்சாட்டு

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இரண்டு வாரங்களுக்கு முடிவில் மமதி சாரி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார். அவரின் வெளியேற்றத்திற்குப் பிறகு, பல தனியார் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார். இவ்வாறு முன்னணி ஊடகம் ஒன்றில் அவர் கூறிய சில விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியானதற்குப் பிறகு வீட்டின் உள்ளே நிகழ்ந்ததைப் பற்றியும், ஒரு சில போட்டியாளர்கள் செய்த வெறுக்கத்தக்க விஷயங்களையும் குற்றச்சாட்டாக முன்வைக்கிறார் மமதி சாரி. குறிப்பாக எஜமான்கள் மற்றும் உதவியாளர்கள் டாஸ்க்கில் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார். அதில் மமதி மற்றும் மும்தாஜ்க்கு ஆடைகளைத் துவைக்கும் பணி ஒதுக்கப்பட்டது குறித்து பரபரப்பான விஷயங்களை தெரிவிக்கிறார்.

கடந்த வாரம் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் முதல் இரண்டு நாட்கள் ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் உதவியாளர்களாகவும் பணியாற்ற உத்தரவு அளிக்கப்பட்டது. பின்னர் இந்த விதிமுறை அப்படியே தலைகீழாக மாறி அடுத்த இரண்டு நாட்கள் பெண்கள் எஜமானர்களாகவும், ஆண்கள் உதவியாளர்களாகவும் இருந்தனர். இந்த டாஸ்கில், ஆண்கள் எஜமானர்களாக இருந்தபோது, பெண்களுக்கு அளித்த வேலைகளில் வரைமுறையே இல்லாமல் இருந்தது எனக் கூறுகிறார் மமதி.

எஜமான் மற்றும் உதவியாளர் டாஸ்க் என்னவென்றே அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவில்லை. பணியாட்களை சக்கை பிழிவது போலப் பிழிந்தால் தான் எஜமானர்கள் என்று நினைத்திருந்தனர், ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்து சிறிதளவும் யோசிக்கவில்லை என்று நேரடியாகக் குற்றம்சாட்டுகிறார். அத்துடன், எஜமானர்கள் என்றால் உதவியாளர்களுக்கு அதிக வேலை கொடுத்து அதிகாரமாக நடந்துகொள்வது தான் சரி என்பது போலவும் ஆண்கள் நடந்துகொண்டதாக தெரிவிக்கிறார். சாப்பாட்டில் குறை கூறுவது, வீட்டு வேலை செய்வதில் வேண்டும் என்றே அதிக பணிச்சுமையை அளிப்பது, ஆளுமை என்ற பெயரில் அதிகாரத்தைக் காட்டுவது என்ற பல பிரச்சனைகளை ஆண்கள் செய்திருந்தாலும், மனிதநேயமற்றதாக இருந்தது ஆண்கள் அளித்த முக்கிய வேலை ஒன்று.

பிக் பாஸ் அளித்த இந்த டாஸ்கில், ஆண்கள் துணிகளை துவைக்கும் வேலை மும்தாஜ் மற்றும் மமதி சாரிக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அந்தச் சூழலில் அனைத்து வேலைகளையும் பார்த்துவிட்டு, துணிகள் துவைக்கும் வேலையை இவர்கள் பார்ப்பார்கள். அப்போது மும்தாஜ் துணி துவைத்துக்கொண்டிருக்கும் நேரம், சென்ராயன் அவருடைய உபயோகப்படுத்திய உள்ளாடையைத் துவைக்க தந்ததாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைக்கிறார் மமதி. சென்ராயன் செய்யும் இந்தக் காரியத்திற்கு உதவியாக இருந்தது ஷாரிக் மற்றும் மகத் என்றும் கூறுகிறார்.

இது மட்டுமின்றி பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன் மற்றும் பாலாஜி தவிர பிற ஆண்கள் அனைவருமே அவர்களுடைய உள்ளாடைகளை மமதி சாரியிடம் துவைக்கக் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் மமதி மற்றும் மும்தாஜ் கடும் கோபத்தில் இருந்தனர். அந்த டாஸ்கில் குறிப்பாக மும்தாஜ் மட்டும் கோபமான உதவியாளராக நடந்துகொண்டதுக்கு இதுதான் காரணம் என்ற உண்மையும் வெளியே வந்துள்ளது. மேலும் இதே டாஸ்க் பெண்கள் கைக்கு வந்தபோது, ஆண்களுக்கு இந்த வேலையை கொடுக்க பெண்களுக்கு மட்டும் தெரியாதா? ஆனால் அதைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை ஏனெனில் உதவியாளர்களுக்கு அளிக்கப்படும் வேலையில் இருக்கும் நியாயங்கள் எங்களுக்கு தெரியும் என்கிறார்.

பிக் பாஸ் முதல் சீசனில், இது போலவே மன நோயாளிகளின் வாழ்க்கை முறையைப் பின்பற்றும் டாஸ்கில் நோயாளிகளைத் தவறாக சித்தரித்த காரணத்திற்காக இந்நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில், உதவியாளர்களை இழிவு செய்யும் வகையில் போட்டியாளர்கள் நடந்துகொண்டுள்ளதாக பெரும்பாலானோர் கடும் விமர்சனத்தில் இறங்கியுள்ளனர். உதவியாளர்களை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில், சாப்பாட்டை ஊட்டுவதற்கும், லிப் கிளாஸ் போடுவதற்கும், உள்ளாடைகளைத் துவைப்பதற்கு மற்றும் மசாஜ் செய்து விடுவதற்கும் பெண்களை வேடிக்கைப் பொருட்களாக மாற்றிவிட்டனர் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள். இந்த டாஸ்கினால் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இவ்வாறு முறைகேடாக நடந்துகொள்ளும் போட்டியாளர்களை ஒரு முறை கூட கமல் ஹாசன் கண்டிக்கவில்லை ஆனால் கேமரா இருக்கும் அறையில் அல்லது ஆண்களும் சேர்ந்து உபயோகிக்கும் பாத்ரூமில் புடவை மாற்றச் சங்கடமாக இருக்கும் மும்தாஜிடம் அதிகாரியைப் போல விசாரணை நடத்தியுள்ளார் கமல் ஹாசன். யாஷிகா உதவியாளராக இருந்தபோது அவரின் இடுப்பைப் பார்த்து ஆபாச கமெண்டுகள் அளித்த மகத்தின் பேச்சு ஆண்டவர் அவர்களின் காதுகளுக்கு கேட்காமல் போனதா? ஏன் இந்த பாரபட்சம். ஆண் போட்டியாளர்கள் இந்த டாஸ்கில் பெண்களுக்கு விருப்பமற்ற செயல்களைச் செய்ய சொன்னதற்குப் பெரிய நோ சொன்ன மமதிக்கு கிடைத்த பரிசு தான் இந்த எவிக்‌ஷன் என்றால் அதை நினைத்து சோகம் அடையாமல் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close