Bigg Boss Tamil Season 3 : பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 -ன் புரமோ வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருப்பது உறுதியாகிவிட்டது.
பிக் பாஸ்... பாலிவுட்டில் சல்மான்கான் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை முதன்முறையாக தமிழில் அறிமுகப்படுத்தியது பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனுமான விஜய் டிவி. 100 நாட்கள் ஒரே வீட்டில் 14 போட்டியாளர்கள். அவர்களுக்குள் நடக்கும் சண்டை, வாக்குவாதம், நட்பு, போட்டி, பொறாமை இவை அனைத்தும் மக்களாகிய நாம் ஆவலுடன் கண்டு ரசிப்போம்.
என்னத்தான் நம்மை கேமராக்கள் சுற்றிவட்டமிட்டு கொண்டிருக்கிறது என்பதை போட்டியாளர்கள் நினைவில் வைத்திருந்தாலும் ஏதாவது ஒரு தருணத்தில் அதனை மறந்து அவர்கள் செய்யும் சிறு தவறு அன்றைய நாளில் டாப் சீனாக மாறி விடுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழின் முதல் சீசன் துவங்கிய போது இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்றும் தொலைக்காட்சி நிறுவனமே கணிக்கவில்லை.
Tamil Bigg Boss Season 3 Teaser Released: பிக் பாஸ் சீசன் 3 ரெடி!
ஆனால், எதிர்பாராத விதமாக அந்த சீசன் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. அதற்கு காரணம், ஜூலி, ஓவியா, காயத்ரி ரகுராம் போன்றோர். அந்த சீசன் மூலம் சினிமாவில் வெறும் நடிகையாக மட்டுமே இருந்த ஓவியா தமிழ் குடும்பங்களின் சொந்த பெண்ணாகவே மாறினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த வருடம், இரண்டாவது சீசனும் தொடங்கியது, ஆனால் முதல் சீசனை போல் அதற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு கிடைக்கவில்லை. இருந்த போதும் பிக் பாஸ் ரசிகர்கள் தவறாமல் நிகழ்ச்சியை ஃபலோ செய்தார்கள்.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான பிக் பாஸ் சீசன் 3 குறித்த பேச்சுகள் வதந்திகள் கடந்த மாதம் முதலே தொடங்கி விட்டது. மற்ற 2 சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த முறை நிகழ்ச்சியில் வழக்கம் போலவே இவர்கள் தான் போட்டியாளர்கள் என சமூக வலைதளைங்களில் அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு பட்டியல் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கான புரொமோ ஷூட் கடந்த வாரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3-ன் புரொமோவை விஜய் தொலைக்காட்சி நேற்றைய தினம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த புரமோவை பார்த்த பலரும் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த வாரம் வரை ஐபிஎல் தொடர் குறித்த பேச்சுகள் வீடுகளிலும், சோஷியல் மீடியாவிலும் அதிகம் பகிரப்பட்ட நிலையில் தற்போது அடுத்து பிக் பாஸ் பீவர் மக்களை பிடிக்க அடுத்த மாதம் களம் இறங்க உள்ளது.