போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும்! நடிகர் விஜய் சேதுபதி

போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டிய நேரமிது என்று நடிகர் விஜய் சேதுபதி ’கொலை விளையும் நிலம்’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டிய நேரமிது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட துயர சம்பவங்களை மையமாக வைத்து ‘கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்திருக்கிறார், பத்திரிகையாளர் க. ராஜீவ்காந்தி.

இந்த ஆவணப்படத்தின் திரையிடல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் நெகிழ்வுடன் பேசினார்கள்

இந்நிகழ்ச்சியில் பாலாஜி சக்திவேல் பேசும் போது, “மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு இந்த ஆவணப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாக படிப்பதை விட, ஆவணப் படமாக பார்க்கும் போது நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தை விதைத்ததிற்கு நன்றி.

‘கொலை விளையும் நிலம்’ ஒரு அரசியல் படம் தான். மக்கள் அரசியலைப் பேசியிருக்கும் படம். போராடாமல் எதுவும் நடக்காது என்பது தான் இந்த ஆவணப்படத்தின் அடிநாதம். விவசாயிகளுக்கு விவசாயிகள் மட்டுமல்ல, அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் என்பது தான் இதற்குள் இருக்கும் அரசியல். அரசியல்வாதிகள் இதை தெரியாமல் இல்லை.

இப்படத்தை அரசியல்வாதிகள் ஆதரிக்கிறோம் என்று சொன்னாலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கும் தாய்மார்கள், குழந்தைகள் நமக்கு பல விஷயங்களைச் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அதனால் நாம் அனைவருமே பாதிப்படைந்திருப்போம். இந்த ஆவணப்படத்தின் தாக்கம் கண்டிப்பாக மிகப்பெரிய ரசாயன மாற்றம் உண்டு பண்ணும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்

நடிகர் விஜய் சேதுபதி பேசும் போது, ‘ இந்த படம் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் வீட்டுக்குள் சென்ற் பார்த்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாய பாதிப்பு விவசாயி பாதிப்பு எனதெல்லாம் யாரால், எதனால் நடக்கிறது என நீண்ட நாட்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். நாம் போராடுஅது, போராடும்ம் முறை இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு பழகிவிட்டது. ஒன்று இல்லை என்றால் மற்றொன்று என எதையோ கொடுத்து நம்மை திசை திருப்பி, ஏமாற்றி ரொம்ப அழகாக அரசியல் செய்க்கிறார்கள். போராடுபவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். நம் நிலைமை மாறவே இல்லை. போராட்டம் நடத்துபவர்கள் இதை உணர்ந்து, போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் புதிய வழிமுறைகளை சிந்திக்க வேண்டும். போராட்ட முறையை மாற்றினால் இதற்கு தீர்வு கிடைக்கும்.

ஒரு இழப்பு என்றால் ‘அடுத்தவர் வீட்டில்தானே நடக்கிறது. நம் வீட்டுக்கு வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று உட்கார்ந்து இருப்பவர்கள், தங்கள் வீட்டுக்கு அந்த பாதிப்பு வரும் போதுதான், ‘ஐயோ அம்மா…’ என அழுவார்கள். விவசாயிக்கு ஒரு பாதிப்பு என்றால் அது நமக்கான பாதிப்புத்தான். எனவே அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்’ என்றார், விஜய் சேதுபதி.

இயக்குநர் சீனு ராமசாமி பேசும் போது, ‘உலக அரங்கில் இந்தியா என்றால் விவசாய நாடு. அப்படியானால் விவசாயிகள்தான் இந்தியாவின் உயிர் மூச்சு. ஆனால் அந்த விவசாயி சொந்த நாட்டில் அகதியாக, நிர்கதியாக வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்வது எவ்வளவு கொடுமை. இந்த அவலத்தை துணிச்சலாக காட்டியிருக்கும் ராஜிவ்காந்திக்கு பாராட்டுக்கள். ஏறக்குறைய விவசாயிகளின் அனைத்துப் பிரச்னை பற்றியும் இந்த ஆவணப்படம் பேசுகிறது. இதை கட்டுரையாக எழுதாமல் காட்சிப்படுத்தியதால், கவனத்தை ஈர்க்கிறது. காவிரி டெல்டா பகுதி அரசியலை இந்த படம் தெளிவாக விளக்குகிறது. இந்த நாட்டில் அரிசியை உருவாக்கும் விவசாயிக்கு அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை. அதற்குக் கூட இடைத்தரகர்களைத்தான் நம்பி இருக்க வேண்டியதுள்ளது அந்த உரிமை கிடைக்கும் நாளில் பட்டினி சாவுகள் ஒழியும்’ என்றார் சீனு ராமசாமி.

50 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தில் ‘அம்மண அம்மண தேசத்துல..’ என்று தொடங்கும் பாடலை எழுதியிருப்பவர் தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகன். பாடலுக்கு இசை ஜி.வி.பிரகாஷ். ஆவணப்படத்தில் குரல் கொடுத்திருப்பவர் சமுத்திரக்கனி. இசையமைப்பாளர் ஜோஹன் இப்படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். கார்த்திக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ராஜேஷ் கண்ணனும் ரமேஷ் யுவியும் செய்துள்ளனர். நா.சதக்கத்துல்லா, எஸ்.கவிதா இணைந்து இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர்.

×Close
×Close