சேரி பிஹேவியர் என விமர்சித்த காயத்ரி ரகுராம் : நீதிமன்ற படியேறும் பிக்பாஸ்

‘பிக்பாஸ்’ கமலஹாசன் விரைவில் நீதிமன்றப் படியேறுகிறார். காரணம், ‘சேரி பிஹேவியர்’ என இந்த நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் வைத்த விமர்சனம் கடும் சர்ச்சையை...

‘பிக்பாஸ்’ கமலஹாசன் விரைவில் நீதிமன்றப் படியேறுகிறார். காரணம், ‘சேரி பிஹேவியர்’ என இந்த நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் வைத்த விமர்சனம் கடும் சர்ச்சையை கிளப்பியிருப்பதுதான்!
சர்ச்சைகள்தான், விஜய் டி.வி.யின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பலமே! ‘அசைவம் சாப்பிடுகிறவர்கள்தான் கோபப்படுவார்கள்’ என்கிற அர்த்தம் தொனிக்க அண்மையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளானது. ‘சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ என்கிற கதையாக கமலின் பேச்சு அமைந்ததாக நெட்டிசன்கள் கலாய்த்தனர். தவிர, அசைவ உணவை விரும்பி உண்ணும் உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் இது இழிவுபடுத்துவதாகவும் சிலர் காட்டம் காட்டினர்.
இந்நிலையில் பிக்பாஸான கமல்ஹாசனுக்கு சற்றும் சளைக்காமல், இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளரான நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஜூலை 10-ம் தேதி விஜய டி.வி. வெளியிட்ட பிக்பாஸ் ‘புரொமோ’ வீடியோவில் யாரோ ஒரு சக போட்டியாளரை ‘சேரி பிஹேவியர்’ என காயத்ரி ரகுராம் விமர்சிப்பதாக சில வினாடிகளில் காட்சி வந்து போகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் சேரிகளையும், அந்தப் பகுதி மக்களின் பண்புகளையும் கொச்சைப்படுத்துவதாக இதற்கு கண்டனங்கள் குவிகின்றன.
மனித உரிமை செயல்பாட்டாளரான ‘எவிடென்ஸ்’ கதிர், ‘அந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து, நிச்சயம் வழக்கு போடுவோம்’ என கூறியிருக்கிறார். மற்றொரு செயல்பாட்டாளரான சேலத்தை சேர்ந்த தமயந்தி தமிழ்மொழி, ‘காயத்ரி ரகுராம் மீது ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதியக் கூடாது? உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் தொலைகாட்சியில் தன் சக போட்டியாளரை சாதியரீதியாக சேரி பிஹேவியர் என்று வார்த்தைகளால் இழிவு படுத்தியது கடும் கண்டத்திற்குரியது. இதற்கு உடந்தையாய் இருக்கும் குற்றத்திற்காக விஜய் டிவி மீதும், கமலஹாசன் மீதும் ஏன் வழக்கு பதியக் கூடாது?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் மேலும் பலர், ‘சேரி மக்களின் அன்பு, பாசம், பண்பாடு குறித்து இவர்களுக்கு என்ன தெரியும்? ஒரு ஊரில் ஒருவர் இறந்தால், 10 பேர் மட்டும் சுற்றி உட்கார்ந்திருக்கும் காட்சிகளைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சேரிகளில் மட்டுமே அந்தத் துக்கத்தை ஊரின் துக்கமாக நினைத்து மக்கள் அழுகிறார்கள். இறுதி ஊர்வலங்களில் பங்கேற்கிறார்கள். காயத்ரி ரகுராம் உடனே மன்னிப்பு கோரவேண்டும்’ என பொங்கியிருக்கிறார்கள் பலர்.
காயத்ரி ரகுராம், பா.ஜ.க.வில் பொறுப்பில் இருப்பதால் அந்தக் கட்சிக்கும் இதனால் தர்மசங்கடம்! பிக்பாஸ் கமலஹாசனையும் இந்த விவகாரம் நீதிமன்ற படியேற வைத்துவிடும்போல!

×Close
×Close