நட்சத்திரங்களின் 'கார்'காலம்

கார் என்பது நட்சத்திரங்களைப் பொறுத்தவரை வெறும் வாகனம் மட்டுமில்லை. அவர்களின் அந்தஸ்தை குறிக்கும் சாதனம். ஹம்மர், லம்போர்கினி என்றால் விசேஷம்.

பாபு

கோடை கொளுத்துகிறது. கோடம்பாக்கத்தில் வெக்கை மேலும் அதிகம். வேலைநிறுத்தத்தால் சூடாகிக் கிடக்கும் திரையுலகு ஒரு காரணம். யாரைப் பார்த்தாலும் கோப முகம், எரிச்சல் வார்த்தைகள். இதனிடையில் சில புன்சிரிப்புகளும் உண்டு.

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக விக்னேஷ் சிவனுக்கு சூர்யா டொயோட்டா இன்னோவா கார் பரிசளித்தார் அல்லவா? ஆமாம், அது நடந்து மாமாங்கமாச்சே. அடிக்கிற வெயிலுக்கு பிளாஷ்பேக் வேறயா என்று நீங்கள் சலித்துக் கொள்வது தெரிகிறது. விஷயம் அதுவல்ல. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா சந்தோஷ் பி.ஜெயக்குமாருக்கு ஆடி கார் வாங்கித் தந்திருக்கிறாராம். ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் என்று தமிழில் அடல்ட் சினிமாவை அன்லிமிட்டாக வழங்கியிருப்பவர் இந்த சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

rajini car

ரஜினி பயன்படுத்தும் ப்ரிமியர் பத்மினி கார்

“தானா சேர்ந்த கூட்டத்தைவிட ஹரஹர மஹாதேவகி ஞானவேல்ராஜாவுக்கு அதிக லாபம் சம்பாதித்து தந்திருக்கும், வாங்கித் தந்திருக்கிறார்” என்று சாலிக்கிராம டீக்கடையில் விவாதம் போய்க்கொண்டிருந்தது. “அதெப்டி, சூர்யா படம் இயக்குனவருக்கு இன்னோவா, ஹரஹர மஹாதேவகிக்கு ஆடியா?” கேட்டவர் சூர்யா ரசிகரா இல்லை விக்னேஷ் சிவன் விசிறியா… ஒருவேளை நயன்தாரா ரசிகராக்கூட இருக்கலாம். இதனிடையில் ஒருவர், “சந்தோஷ் பி.ஜெயக்குமாருக்கு காரே தரலையாம்” என்று ஒரு குண்டைப் போட்டார். கார் விவாதம் சூழலை அக்னியாக்கிக் கொண்டிருந்தது.

அகில உலக சினிமாவிலும் பிரிக்க முடியாதவை நட்சத்திரங்களும், காரும். சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இந்த பந்தம் தொடர்கிறது. உலக சினிமா அளவுக்குப் போனால் தொடராகிவிடும். நாம் உள்ளூரிலேயே ரவுண்டடிக்கலாம்.

Ajith-Kumar-with-his-Honda-Accord

நடிகர் அஜித் பயம்படுத்தும் ஹோண்டா அகார்ட் கார்…

இயக்குனர்களுக்கு கார் பரிசளிப்பது என்ற ட்ரெண்டை தொடங்கி வைத்தவர் அஜித். வாலிக்கு முன்பு தல அஜித் வெறும் அஜித்தாக இருந்த போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு கார் பரிசளித்தார். வாலி படத்துக்காக அளிக்கப்பட்ட பரிசு அது. அதன் பிறகு பலரும் கார் பரிசளித்தார்கள். “இப்ப கதை சொன்னாரே ஒரு டைரக்டர், ரொம்ப நல்லா வருவான், நான் என்ன பண்றேன்னா அவனுக்கு ஒரு கார் வாங்கி பிரசண்ட் பண்ணி அப்படியே அமுக்கிப் போட்டுடறேன்” என்று சத்யராஜ் ஒரு படத்தில் இந்த கார் பரிசளிப்பை கலாய்த்தார். அந்தளவுக்கு கார் பரிசளிப்பு பிரபலமாக இருந்தது. ரீமிக்ஸ் பாடல் போல அதுவும் ஒருகாலத்தில் சாயமிழந்தது.

சமீபத்தில் என்றால் கொம்பன் படத்துக்காக அதன் இயக்குனர் முத்தையாவுக்கு இன்னோவா கார் பரிசளித்தனர். நியாயமான பரிசு. முத்தையாவுக்கு கார் இல்லை. அவருக்கு காருக்கான தேவை இருந்தது. சி 3 படத்துக்காக சூர்யா இயக்குனர் ஹரிக்கு இன்னோவா ஒன்றை பரிசளித்தார். ஹரியின் வீட்டிலிருக்கும் கார்களை பார்க் பண்ண அவர் தனியாக இரண்டு கிரவுண்ட் நிலம் வாங்க வேண்டியிருக்கும். அவருக்கு எதற்கு இன்னோவா பரிசு? சரி, சூர்யாவின் பரந்த மனசு. இப்போது அதே சிவகுமார் குடும்பம் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா பரிசளித்திருக்கிறது. ஒருவேளை இவர்கள் இன்னோவா டீலர்களாக இருப்பார்களோ?

கார் என்பது நட்சத்திரங்களைப் பொறுத்தவரை வெறும் வாகனம் மட்டுமில்லை. அவர்களின் அந்தஸ்தை குறிக்கும் சாதனம். குறைந்தபட்சம் பிஎம்டபுள்யூ, ஆடி, ரேஞ்ச் ரோவர் என்று இருக்க வேண்டும். ஹம்மர், லம்போர்கினி என்றால் விசேஷம்.

vijay bmw cars

நடிகர் விஜயின் கார்…

கார் வெறும் அந்தஸ்தை மட்டும் காட்டுவதில்லை. அது அரசியலுக்கும் பயன்படும். இம்பாலா காரை இம்போர்ட் செய்து அதில் மாட்டுக்கு வைக்கோல் ஏற்றிச் சென்றாராம் எம்.ஆர்.ராதா. “எந்த காரா இருந்தாலும் அது தகர டப்பாதான். வைக்கோல் ஏத்துறதுக்கு யூஸ் ஆகாத கார் எதுக்கு” என்று எம்.ஆர்.ராதா தனது கரகர குரலில் கலாய்த்திருப்பார். சந்திரபாபு ஒரு வீடு கட்டினார். அது தமிழகம் முழுவதும் பரபரப்பானது. விஷயம் இதுதான். அவரது கார் முதல் மாடியில் உள்ள அவரது படுக்கைறைவரை செல்வது போல் வீட்டை கட்டியிருந்தார். ஹோட்டல்ல சாப்டமா, கார்ல கிளம்புனமா, கவுந்து படுத்தமான்னு இருக்கணும். நடுவுல கதவைத் திறக்கிறது, மாடிப்படி ஏறுறது எல்லாம் இருக்கக் கூடாது என்று சந்திரபாபு நினைத்திருப்பார். வேறென்ன, புரட்சிதான்.

ஹம்மர், ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி காஸ்ட்லியாக இருந்தால் மட்டுமே அந்தஸ்து, பெருமை என்பது தவறு. அது நடிகர்களுக்கு நடிகர் மாறுபடும். நீங்க சாதா ஸ்டாராக இருந்தால் காஸ்ட்லி கார் அவசியம். அதே நீங்கள் முன்னணி நடிகராக இருந்தால் கதையே வேறு.

nayanthara-car-JFW

நடிகை நயன்தாராவின் கார்

சின்ன நடிகர்களே காஸ்ட்லி காரில் வலம்வந்த போது ரஜினி தனது பழைய ப்ரியமியர் பத்மினி பியட் காரையே பயன்படுத்தினார். ‘பார்ரா தலைவரோட எளிமையை’ என்று இப்போதுகூட பேசுகிறார்கள். அஜித் காஸ்ட்லி பிஎம்டபுள்யூ பைக் வைத்திருக்கிறார். வீட்டில் சில காஸ்ட்லி கார்கள் உள்ளன. ஆனால், அவர் பயணிப்பது மாருதி ஸ்விப்ட் காரில். தலடா, எளிமைடா என்று நெஞ்சுயர்த்தாத ரசிகன் உண்டா.

வீடு முதல் கார்வரை ராயலாக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர்தான் தமிழ் சினிமாவில் முதல் லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் வாங்கியவர். இப்போது தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாங்கியிருக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ். ரோல்ய்ஸ் ராய்ஸ் கார் வாங்க பணம் மட்டும் போதாது. கார் வாங்குகிறவர்களின் பின்னணியை ஆராய்ந்து, நம்ம காருக்கு இவரால் எந்த களங்கமும் வராது என்று தீர்மானித்த பின்பே தருவார்கள். சும்மாயில்லை, விலைக்குதான். அதற்கே இந்த கெடுபிடி. விஜய்யும், இயக்குனர் ஷங்கரும் ரோல்ய்ஸ் ராய்ஸ் சொந்தக்காரர்கள். உதயநிதியை விமர்சிக்கும் போதெல்லாம், ஹம்மர் வச்சிருக்கிற ஏழை என்று அவர் காரையும் வம்புக்கிழுப்பது வாடிக்கை.

இதெல்லாம் வெறும் தூசுங்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. இன்றல்ல சுமார் 46 வருடங்களுக்குமுன், 1972 இல். அப்போது ஜெயலலிதா முன்னணி நடிகை. அன்று சென்னையில் ஓடிக்கொண்டிருந்த ஒரேயொரு போர்ட் கார் அவருடையது. அந்த கார் எவ்வளவு பிரபலம் என்றால், அந்த கார் ஜெயலலிதாவைப் பற்றி கூறுவது போல் ஒரு பேட்டியை அன்றைய பேசும்படம் பத்திரிகை வெளியிட்டது. உலகிலேயே ஒரு காரின் பேட்டி வெளியானது அதுவாகத்தான் இருக்கும். சினிமா எந்தளவு நம்மை அன்று ஆட்டிப் படைத்திருந்தது என்பதற்கு இந்த பேட்டி ஒருசோறு பதம். இனி ஓவர் டூ போர்ட் கார்…

samantha-car

நடிகை சமந்தா கார்…

“பேபியை (ஜெயலலிதாவை) மந்து கொண்டு நான் முதன்முறையாக மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றேன். காசிதான் என்னை ஓட்டிச் சென்றார். கண்போல் என்னை காத்து வரும் அவர் மீது கோபம் கோபமாக வந்தது. பேபி விமானத்தில் ஏறி ஜப்பான் சென்றுவிட்டார். நான் தனியாக திரும்பி வரும்போது காசிக்கு மட்டும்தான் தெரியும் என் மனக்கஷ்டம். என்னிடம் ஒரு வார்த்தைகூடச் செல்லாமல் பேபி போய்விட்டாரே… இந்தக் காசியாவது ஏன் முன்னாலேயே சொல்லவில்லை? சொல்லியிருந்தால்…?”

“என் பேபிக்கு இசையென்றால் உயிர். அதற்காக ரேடியோ ஒன்று என்னிடத்தில் உண்டு. வெயில் காலங்களில் கண்ணாடியைத் திறந்து போட்டுச் செல்ல முடிவதில்லை. தூசி படியும் என்பது மட்டுமல்ல, என் பேபியின் மேக்கப்பும் கலையும். ஆனால் குளிர் காலங்களில் வெதுவெதுப்பாகவும் வெயில் காலங்களில் குளுகுளுப்பாகவும் இருக்க தனித்தனி வசதிகள் செய்து கொண்டிருக்கிறேன். நான் பகல் வேளைகளில் கண்ணை மூடிக் கொண்டேதான் செல்வேன். இரவு தேவைப்படும்போது மட்டும் கண் திறந்து கொள்வேன். என் கண்ணிலிருந்து வரும் ஒளி எவ்வளவு பிரகாசமாக இருக்கும் தெரியுமா?”

“சுமதி என் சுந்தரி படப்பிடிப்பில் கலந்து கொள்ள பேபி தேக்கடிக்குப் போகும் போது என்னையும் அழைத்துச் சென்றார். அதுதான் என் லாங்கஸ்ட் ட்ரிப். இங்கே சென்னையில் ஜனாதிபதியின் பரிசளிப்பு விழா மறுநாள் நடக்க இருந்தது. எனக்கு அந்த விழாவில் அப்படி ஜிம் என்று போய் நிற்க வேண்டுமென்று ஆசை. பேபிக்கும் பரிசு வாங்க துடிப்பு.

மாலையில் அங்கிருந்து கிளம்பி காலையில் சென்னைக்கு வந்துவிட்டேன். ஜனாதிபதி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இரவு கிளம்பி தேக்கடிக்கு மறுநாள் காலையில் போய்ச் சேர்ந்தேன். விழாவில் கலந்து கொண்ட திருப்தி மட்டுமல்ல எனக்கு. அந்த விமானத்தின் மீதிருந்த கோபத்தையும் தீர்த்துவிட்ட திருப்தி. மணிக்கு நூறு மைல்களுக்கு மேலேயே போய் பேபியின் சபாஷ் பெற்றதோடு விமானத்தை நம்பியிருந்தால் நான் போய் இதற்குள் வந்திருக்க முடியாது என்ற பாராட்டும் வேறு கிடைத்தது. போதாதா எனக்கு தலைகால் புரியவில்லை.”

trisha-car

நடிகை த்ரிஷா கார்…

“பெரிய ஸ்டாரின் கார் ஆயிற்றே நீ… ஒரு படத்திலேயாவது நடிச்சிருக்கியா? அட்லீஸ்ட் இன் ஏ பிளாக் அண்ட் ஒயிட் பிக்சர்? என்று என் பிரண்ட் பிளிமத் எப்போதும் கேட்பான். உங்களுக்குதான் பேபியிடம் ரொம்ப இது இருக்கே… நீங்களாவது எனக்கு சிபாரிசு செய்யக் கூடாதா? ப்ளீஸ்.”

ஜெயலலிதா காரின் பேட்டியை படிக்கையில் அந்த ‘கார்’காலங்களை நாம் கடந்துவிட்டோம் என்பதே எத்தனை நிம்மதி. இன்று இப்படியொரு பேட்டி வெளியிட்டால் துரத்தி அடிக்க மாட்டார்கள்?

அடுத்தமுறை ஏதாவது நட்சத்திரத்தின் கார் கடந்து செல்கையில் வெறும் கார் என்று நினைக்காதீர்கள். அது கார் மட்டுமில்லை. அது அரசியல் உள்பட பலதையும் உள்ளடக்கியது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close