Advertisment

ரஜினியை கலாய்த்தது ஏன்? - கோமாளி பட இயக்குனர் பிரதீப் விளக்கம், ஏற்காத ரசிகர்கள்!

இதில் பெரிய கோமாளித்தனம் என்னவெனில், 2016ல் ரஜினி அந்த டயலாக்கை சொல்வது போன்று அக்காட்சி அமைக்கப்பட்டிருப்பது தான். அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் பகிரங்கமாக அறிவித்தது 2017 டிசம்பரில் தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth, Super Star Rajinikanth, Rajinikanth, shivaji rao gaekwad, rajinikanth real name, Rajinikanth original name, ரஜினிகாந்த், அமித்ஷா

Rajinikanth, Super Star Rajinikanth, Rajinikanth, shivaji rao gaekwad, rajinikanth real name, Rajinikanth original name, ரஜினிகாந்த், அமித்ஷா

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள கோமாளி படத்தின் டிரைலர் நேற்று (ஆக.3) வெளியிடப்பட்டது.

Advertisment

அதாகப்பட்டது, கதைப்படி கோமாவில் விழும் நாயகன் ஜெயம் ரவி, 2016ல் தான் கண் விழிக்கிறார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கோமா. ஏன்? எப்படி? என்பதெல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். ஆனால், தான் கோமாவில் விழுந்ததை, நண்பர் யோகி பாபு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நம்ப மறுக்கிறார் நாயகன்.

இதனால், நண்பனை நம்ப வைக்க, யோகிபாபு டிவியை ஆன் செய்ய, அதில், நடிகர் ரஜினிகாந்த், 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்கிறார். 2017ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக தனது ரசிகர்களை, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டம் வாரியாக சந்தித்த ரஜினி, டிசம்பர் 31ம் தேதி, 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என அறிவித்த அந்த வீடியோவை யோகி போட்டு காண்பிக்கிறார்.

அதைப் பார்க்கும் ஜெயம் ரவி, 'இல்லை.. இல்லை இது 1996ல் சொன்னது' என்று பதில் அளிக்கிறார். பிரச்சனையே இங்கு தான். அரசியலுக்கு வருவது குறித்து 1996ல் ரஜினி சொன்னதை தான், 2016ல் மீண்டும் சொல்கிறார் என்று கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எகத்தாளம் என்று பல காரணிகளை உள்ளடக்கி அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

1996ல் ரஜினி சொன்னது என்ன?

1995ல் பாட்ஷா ரிலீசாகிறது. அதன் வெள்ளி விழாவில், அப்படத்தின் தயாரிப்பாளரும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் அமைச்சராக அங்கம் வகித்தவருமான ஆர்.எம்.வீரப்பனை அருகில் வைத்துக் கொண்டே, 'தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டது' என்று சொல்லி மேடையையே அதிர வைத்தார் ரஜினி. அதற்கு பிறகு, ஆர்.எம்.வீரப்பன் பதவி பறிபோனது வேறு கதை.

தொடர்ந்து 1996ல் தமிழக சட்டசபைத் தேர்தல் வந்த போது, 'ஜெயலலிதா அரசு திரும்பவும் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டைக் கடவுள் கூடக் காப்பாற்ற முடியாது” என்று ரஜினி ஸ்டேட்மென்ட் கொடுக்க, அத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது அதிமுக.

படங்களில் அவரது பன்ச் டயலாக்குகளை அவரது அரசியல் வருகைக்கான அர்த்தத்துடன் அதனை உருமாற்றி புரிந்து கொண்டவர் ரசிகர் தானே தவிர, ரஜினி ஒருபோதும், 'நான் அரசியலுக்கு வருவேன்' என்று அப்போது சொல்லவில்லை என்பதே உண்மை.

தமிழக அரசியலில் அவர் நேரடி அங்கம் வகிக்கவில்லை என்றாலும், 1995 காலக்கட்டங்களுக்கு பிறகு, அவர் விரும்பவில்லை என்றாலும், தமிழக அரசியல் எனும் சக்கரம் அவரைச் சுற்றி சுழலாமல் இல்லை. அப்போதும் கூட, எந்த இடத்திலும் 'நான் அரசியலுக்கு வருவேன்' என்று சொன்னதில்லை.

ஆனால், இதில் பெரிய கோமாளித்தனம் என்னவெனில், 2016ல் ரஜினி அந்த டயலாக்கை சொல்வது போன்று அக்காட்சி அமைக்கப்பட்டிருப்பது தான். அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் பகிரங்கமாக அறிவித்தது 2017 டிசம்பரில் தான்.

ஆக, ரஜினி 1996லும் சொல்லவில்லை, 2016லும் அப்படி சொல்லவில்லை.

கள நிலவரங்கள் இவ்வாறிருக்க, ரசிகர்கள் பலரும், கோமாளி படத்தின் டிரைலரை விமர்சித்து சமூக தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

இறுதியில், ரஜினி குறித்த வசனத்துக்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது விளக்கம் அளித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், "நான் பயங்கர ரஜினி ரசிகன். லிங்கா படத்துக்கு பாலபிஷேகம் பண்ணியிருக்கேன். அந்த அளவுக்கு ஃபேன். ஸோ, ரஜினி சார் அரசியலுக்கு சீக்கிரம் வரணும் என்பதற்காவே அந்த காட்சியை வைத்தேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் விளக்கம் அளித்தும், தொடர்ந்து ரசிகர்கள் சமூக தளங்களில் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.

Rajinikanth Jayam Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment