நடிகர் திலீப் ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை

நடிகர் திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.

பிரபல மலையாள நடிகர் திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல மலையாள நடிகையை மர்ம கும்பல் ஒன்று கடத்தியது. அக் கும்பல், நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி அதனை வீடியோவும் எடுத்துள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட புகாரின் பேரில் பல்சர் சுனில், பாதிக்கப்பட்ட நடிகையின் கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோனி உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பதாக கூறப்பட்டது.

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில், கடந்த 10-ம் தேதியன்று நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்பை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே திலீப் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், போலீஸ் தரப்பில் காவலில் எடுத்து விசாரிக்க மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுகள் மீதான விசாரணையை கடந்த 12-ம் தேதி நடத்திய அங்கமாலி நீதிமன்றம், திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்தது. அவரின் காவல் முடிந்ததையடுத்து, அங்கமாலி நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டி இருப்பதால், கூடுதலாக ஒரு நாள் அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் இன்று மாலை 5 மணி வரை அவரை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.

திலீப்பின் காவல் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில், அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையையும் நீதிமன்றம் நடத்தவுள்ளது.

×Close
×Close