Advertisment

மணிரத்னம் எனும் மந்திரச் சொல்!

சூர்யா” என்ற பெயரோடு நடிக்க வந்ததுக்கும் காரணம் தளபதி திரைப்படம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மணிரத்னம் எனும் மந்திரச் சொல்!

செங்கோட்டையன்

Advertisment

இப்போதிருக்கும் சூழலில் ஒரு இயக்குனர் 5 ஆண்டுகள் நிலைத்து நிற்பதே பெரிய சாதனை. ஆனால் 35 ஆண்டுகளாக ஒரு இயக்குனர் இயங்கி வருகிறார். அதுவும் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு படங்களை தருகிறார். அவர் தான் மணிரத்னம். இன்று (ஜூன் 2ஆம் தேதி) அவரின் 63வது பிறந்த நாள். அவரை பற்றிய ஒரு கட்டுரை இதோ..

கடந்த 25 ஆண்டுகளாகவே சினிமா துறையில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு வந்த இளைஞர்களின் ஒரே ரோல் மாடல் மணிரத்னம். அது 90களின் ஆரம்பத்தில் வந்த வசந்த், 2000 ஆரம்பத்தில் வந்த கௌதம் வாசுதேவ் மேனன், ஏஆர் முருகதாஸ், செல்வராகவன் ஆரம்பித்து கடந்த நான்கைந்து ஆண்டுகளில் வந்த கார்த்திக் சுப்பாராஜ், கார்த்திக் நரேன் வரை அனைவரின் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மணிரத்னத்தின் திரை வாழ்வும் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தே வந்திருக்கிறது.

சினிமா ஆர்வம்

இப்போது அனைவரும் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு, எந்த முன் அனுபவமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் 1980களிலேயே யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காமல் இயக்குனர் ஆனவர் தான் மணிரத்னம். எம்பிஏ படித்து விட்டு மும்பையில் கன்சல்டண்டாக வேலை பார்த்து வந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் அது போரடித்துப் போகவே, சினிமாவில் நல்ல சினிமாக்களை கொடுக்கும் நோக்கத்தில் வேலையை விட்டு விட்டு சினிமா முயற்சிகளில் இறங்கினார். அவரது குடும்பமே ஒரு கலைக்குடும்பம் தான், சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்புகள் அமைந்தும் அதை அவர் விரும்பவில்லை. அவர் நண்பர்களோடு இணைந்து சினிமா இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது நண்பருக்கு ஒரு கன்னட பட வாய்ப்பு அமைய அதில் சில நாட்கள் வேலை பார்த்தார்.

சறுக்கலான ஆரம்ப காலம்

கதையை வைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்களை சந்தித்தார். யாரும் அவரின் சினிமா ரசனையோடு ஒத்துப் போகவில்லை. ஒரு வழியாக கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி என்ற படத்தை இயக்கினார். முதல் முயற்சியே கைகொடுக்காததால் மலையாளத்தில் மோகன்லால் நடிக்க, இன்னொருவர் எழுதிய கதைக்கு வெறும் இயக்குனராக மட்டும் அவரை கேட்டனர். நண்பர்கள், குடும்பத்தினர் வற்புறுத்தவே அந்த படத்தையும் இயக்கினார். அதுவும் சரியாக போகததால் அடுத்தடுத்து சில சமரசங்களை செய்து கொண்டு இரு படங்களை இயக்கினார். ஒரு கட்டத்தில் சினிமா வேலைக்கு ஆகாது என்று அவரது குடும்பத்தினர் சொல்ல, அவரது அண்ணனிடம் ஒரு படத்தை தயாரிக்க சொல்லி, அதிலும் தோல்வியடைந்தால் சினிமாவை விட்டு விடுகிறேன் என சொல்லி, மௌனராகம் படத்தை இயக்கினார் மணிரத்னம்.

ட்ரெண்ட் செட்டர்

மௌனராக, படத்தில் தொடங்கியது அவரின் வெற்றி. புதுப்புது முயற்சிகளும், புதுவித கதை சொல்லலும், இளைஞர்களை மிகவும் ஈர்க்க அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அன்று தொடங்கி 20 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு வெற்றிகள், பரிசோதனை முயற்சிகள் என மாறி மாறி பயணித்த மணிரத்னம் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் என்றால் அது மிகையாகாது. அவர் இயக்கிய மௌனராகம், அலை பாயுதே, ஓகே கண்மணி என மூன்று காதல் படங்களுமே புதுவிதமான சிந்தனைகளால் உருவானவை. ஒரே மாதிரி படங்களை இயக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறும் மணிரத்னம் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் செய்திராத சாதனையை புரிந்துள்ளார். பேய், காமெடி படங்களை தவிர்த்து அனைத்து விதமான படங்களையும் இயக்கி, அதில் தனி முத்திரையை பதித்திருக்கிறார். ஒட்டு மொத்த சினிமா உலகமும் ஒரு பாதையில் பயணிக்கும் போது, அதை பற்றிய எந்த கவலையும் இல்லாமல், வெற்றி தோல்வி பற்றிய எந்த பயமும் இல்லாமல் தனக்கென ஒரு பாதையில் பயணித்து வருகிறார் மணிரத்னம்.

கிங் மேக்கர்

ஆரம்பத்தில் இளையராஜா, பாலு மகேந்திராவின் உதவியோடு தான் நான் படங்களை இயக்கினேன் என சொல்லும் மணிரத்னம், ஆரம்பத்தில் இயக்கிய படங்களின் மூலம் தான் சினிமாவை கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மௌனராகத்தின் வெற்றிக்கு பிறகு பல புது நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிரத்னத்தை சாரும். இளையராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இவர் அறிமுகப்படுத்திய ஏ ஆர் ரகுமான் உலக அளவில் சிறந்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். ரகுமானுடன் 25 வருடங்கள் இணைந்து பணிபுரிந்துள்ளார். தன் படைப்பில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே தன் அண்ணனின் தயாரிப்பு நிறுவனத்திலும், தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திலுமே படங்களை இயக்கி வருகிறார். தன் தயாரிப்பு நிறுவனத்தில் அறிமுக இயக்குனர்கள் சிலருக்கும் வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

மணிரத்னம் கிளிஷேக்கள்!

மணிரத்னம் படங்களில் இந்த மாதிரி காட்சிகள் இல்லாமல் ஒரு படமும் இருக்காது என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அவரது படங்களில் ரயில், மழை, கண்ணாடி காட்சிகள் போன்றவை இல்லாமல் இருக்காது. வசனங்களும் ஓரிரு வார்த்தைகளே இருக்கும். மற்றவர்கள் இதை செய்தால் கிளிஷே என்று ஒதுக்கி விடும் ரசிகர்கள், இவர் படத்தில் அவற்றை ரசிப்பார்கள். ஏனென்றால் அவரின் படைப்பு அந்தளவு தனித்துவமாக இருக்கும். அதே போல காட்சிக்கு அவசியமில்லாத பட்சத்தில், வெளிநாட்டில் படம் எடுக்க மாட்டேன் என்ற “மேக் இன் இந்தியா” கொள்கைக்கும் சொந்தக்காரர். குரு படத்தில் ஒரு சில காட்சிகள் துருக்கியிலும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு சில காட்சிகள் இலங்கையிலும் எடுக்கப்பட்டவை.

மணிரத்னம் ட்ரெண்ட்ஸ்

இப்போதைய இணைய யுகத்தில் வடிவேலு உட்பட காமெடி பேசும் வசனங்கள் ட்ரெண்டில் இருப்பது பெரிய விஷயமல்ல. டிவிக்கள் வருவதற்கு முன்பே இவர் படத்தின் வசனங்கள், பெயர்கள், உடைகள் எல்லாம் ஒரு ட்ரெண்ட். “நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல”, “நட்புனா என்னனு தெரியுமா?”, “மிஸ்டர் சந்திரமௌலி”, “சக்தி நீ அழகா இருக்கனு நினைக்கல”, “பழைய பன்னீர் செல்வமா வரணும்” போன்றவை சென்சேஷனாக இருந்தன. விஜய் “இளைய தளபதி” என அழைக்கப்படவும், நடிகர் சூர்யா, “சூர்யா” என்ற பெயரோடு நடிக்க வந்ததுக்கும் காரணம் தளபதி திரைப்படம். அதில் ரஜினியுடன் சேர்த்து மணிரத்னத்துக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.

அடுத்து வருவது

Maniratnam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment