பாகுபலி 2: இதைக் கொண்டாடுகிறார்களே..... தங்கர்பச்சான் வேதனை!

குடும்பத்தில் நடக்கும் அண்ணன், தம்பி பிரச்சனையை 400 கோடிக்கும் மேல் செலவு செய்து உங்களுக்கு காண்பித்தால்....

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பிறகு மத்தியில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் நேற்று வெளியான இப்படம், நிதிப்பிரச்சனை காரணமாக தமிழகத்தில் மட்டும், நேற்றைய காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. பின் ஒருவழியாக, பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு காலை 11.30 மணியளவில் தமிழகத்தில் இப்படம் வெளியானது.

அஜித், விஜய் படங்களுக்கு இணை:

‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்திற்கு தமிழகத்தில் இந்தளவிற்கு முதலில் வரவேற்பு இல்லை. ஆனால், அப்படம் சூப்பர்ஹிட் ஆகியதைத் தொடர்ந்து ராஜமவுலி & குழு தமிழ், கன்னடம், ஹிந்தி என மொழி வாரியாக ரசிகர்களை குறிவைத்து ‘பாகுபலி 2’ படத்தின் வியாபாரத்தை முடுக்கிவிட்டனர். அதில், மிகப்பெரிய வெற்றியும் கண்டிருக்கிறார் ராஜமவுலி.

தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்களுக்கு இணையாக இப்படம் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. ஓப்பனிங்கும் அந்தளவிற்கு பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. வேற்று மொழியைச் சேர்ந்த ஒரு படத்திற்கு, இந்தளவிற்கு தமிழகத்தில் தொடக்கம் கிடைத்திருப்பது என்பது பாகுபலி 2-விற்கு மட்டுமே. இதற்கு முழுமுதற் காரணம் ராஜமவுலி எனும் அதி புத்திசாலி மட்டுமே.

ரசிகர்கள் கொண்டாட்டம்… விமர்சகர்கள் புகழாரம்:

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? ராஜமாதா ஏன் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்? அனுஷ்கா ஏன் சிறைவைக்கப்பட்டார்? போன்ற முதல் பாகத்தில் தோன்றிய பல கேள்விகளுக்கு பாகுபலி 2 படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவிற்கு பதில் சொல்லியிருக்கிறது என்றே கூறலாம். இதனால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதால், பெரும்பாலான ரசிகர்கள் படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். விமர்சகர்களும் படத்திற்கு பெரிதாக எந்தவித எதிர்மறை விஷயங்களையும் சொல்லாமல், படத்தையும், இயக்குனர் ராஜமவுலியையும் புகழ்ந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இப்படம் பற்றிய மீம்ஸ், கருத்துக்கள், ஆதரவுகள், நன்றிகள் என பாகுபலி குறித்த விஷயங்கள் மட்டுமே அதிகம் உலா வருகின்றன.

அப்படி என்ன தான் கதை?

அனைவரது குடும்பத்தில் நடக்கும் அண்ணன், தம்பி பிரச்சனை தான் கதையின் ஒன்லைன். ஆனால், அந்தப் பிரச்சனையை 400 கோடிக்கும் மேல் செலவு செய்து உங்களுக்கு காண்பித்தால்….அதுதான் பாகுபலி. இயக்குனர் ராஜமவுலி இப்படத்தின் ஷூட்டிங்கின் போது அளித்த பேட்டியில், சிறுவயதில் தான் கேட்டு வளர்ந்த அந்த மாயாஜால உலகை ரசிகர்களுக்கும் காட்ட வேண்டும் என்று நினைத்தேன் என கூறியிருந்தார். அந்த பிரமிப்பை ரசிகர்களுக்கும் உணர்த்த வேண்டும் என எண்ணினேன் என்றார்.

மற்றபடி, கதையில் பெரிதாக அவர் மெனக்கடவில்லை. மெனக்கட தேவையில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஏனெனில், அண்ணன்-தம்பி சண்டை என்றாலும், இங்கு காட்டப்படும் பிரம்மாண்டமும், தலைவன் என்கிற நாயகத்துவ முன்னிறுத்தலும், ரசிகர்களை கதையைப் பற்றி யோசிக்க விடாமல் செய்திவிட்டது எனலாம்.

தங்கர்பச்சான் வேதனை:

 

இந்நிலையில், தி ஹிந்து தமிழ் வெளியிட்டுள்ள செய்தியில், பாகுபலி குறித்து இயக்குனர் தங்கர்பச்சன் பேசுகையில், “மக்கள் வாழ்வியல் குறித்த திரைப்படங்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் காலம் என்று உருவாகுமோ, அன்றைக்குத்தான் அரசியலிலும் தெளிவுப் பெற்றிருக்கிறார்கள் என்று பொருள்.

அதுவரை பாகுபலி போன்ற திரைப்படங்களும் கொண்டாடப்படும். அவர்களை சீரழித்துக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் கொண்டாடப்படுவார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

×Close
×Close