"சுவாதி கொலை வழக்கு" படம் வெளியாவதில் சிக்கல்? டிஜிபி-யிடம் சுவாதியின் தந்தை புகார்!

போலீஸாரே ராம்குமாரின் கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சுவாதி கொலைவழக்கு திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை டிஜிபி அலுவலத்தில் சுவாதியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தையே கடந்த ஆண்டு உலுக்கிய சம்பவம் சுவாதியின் கொலை. கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராம்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தை கதையாக கொண்டு “சுவாதியின் கொலை வழக்கு” என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப்பில் உருவான உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்டி ரமேஷ் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நேற்று முன்தினம் “சுவாதியின் கொலை வழக்கு” படத்தின் டிரெய்லரும் வெளியானது. அதில் போலீஸாரே ராம்குமாரின் கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதனிடையே, சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இந்த திரைப்படத்தில் உண்மைக்கு மாறான விஷயங்கள் உள்ளது. இந்தப்படம் வெளிவந்தால் எங்கள் குடும்பத்தினர் மன ரீதியாக பாதிக்கபடும் நிலை ஏற்படும். மேலும், இந்த சம்பவம் குறித்து படம் எடுப்பதற்கான எந்த முன் அனுமதியையும் எங்களிடம் திரைப்படக்குழுவினர் பெறவில்லை. ஆகையால், இந்த திரைப்படத்தை எடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகார் காரணமாக “சுவாதியின் கொலை வழக்கு” திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close