டிவி-யில் வரும் பிரபல பியூட்டிசியன் தான் பிக்பாஸ் வருண் அம்மாவா? இதோ வருண் பேமிலி போட்டோ!

இவரை பியூட்டிசியன் மகா என்று தான் நமக்கு தெரியும். ஆனால் இப்போது தான் இவர் பிக்பாஸ் பிரபலம் வருணின் அம்மா என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஐக்கி பெர்ரி, தன் சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு நட்பின் நிமித்தமாக சென்று வருகிறார். அப்படித்தான், சமீபத்தில் வருண் வீட்டுக்கும் சென்றிருந்த வீடியோவை ஐக்கி இணையத்தில் பகிர்ந்தார். அதில் வருணின் அம்மாவை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் வருண், இப்போது தான் தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன். ஐசரி வேலன் நிறைய எம்.ஜி.ஆர் படங்களில் நடித்துள்ளார் மற்றும் அரசியல்வாதியும் கூட. தனது தாத்தாவால் ஈர்க்கப்பட்ட வருண் 10ஆம் வகுப்பு முதலே தான் ஒரு நடிகராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் மற்ற வாரிசு ஹீரோக்களை போல, எடுத்தவுடன் படங்களில் ஹீரோவாக நடிக்கவில்லை. பதிலாக நடிகராவதற்கான தகுதிகளுடன் வருண் தன்னை மெருகேற்றி வந்தார்.

வருண் முதன்முதலாக, 2011 இல் ஸ்ரீமனின் தயாரிப்பு முயற்சியான பரிமளா திரையரங்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் தயாரிப்பில் சில சிக்கல்கள் காரணமாக இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.

பிறகு, “தலைவா” படத்தில் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக வருண் பணியாற்றினார். அப்போது ஏ.எல் விஜய் தான் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படத்தில் நடிக்குமாறு வருணை கேட்டுக்கொண்டார்.

அதன்படி ஏ.எல் விஜய் தயாரிப்பில், வருண் நடித்த முதல் படம் ”ஒரே நாள் இரவில்”  2015ல் வெளியானது. இந்த படம் நடிக்கும்போது வருணுக்கு 23 வயதுதான். ஆனால் இந்த படத்தில் முப்பது வயது ஆட்டோ டிரைவர் கேரக்டரில் நடிக்க வருண் பதினைந்து கிலோ எடை போட்டார். அவருடன் சேர்ந்து பிரபல நடிகர் சத்யராஜ், அனுமோல் மற்றும் யுகி சேது ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.  இந்த படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தாலும், வருணுக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து போகன், வனமகன், நெருப்பு டா, சில நேரங்களில், எல்.கே.ஜி., கோமாளி ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் வருண் நடித்தார்.

தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான, பப்பி படத்தின் மூலம் வருண் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். அதில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஜீவாவுடன் சேர்ந்து சீறு படத்திலும் நடித்தார். அதுவரை ஸ்மார்ட் லுக்கில் இருந்த வருணின் தோற்றமும், அவரது நடிப்பும் இந்த படத்தில் முற்றிலும் மாறியிருந்தது.

இப்போது வருண் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5-ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இதில் நிறைய இடங்களில் வருண் தனது குடும்பத்தை பற்றி பகிர்ந்து வருகிறார்.

முக்கியமாக ஒரு கத சொல்லட்டுமா டாஸ்கில் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டனர். அந்த டாஸ்கின் போதுதான் வருண் பிரபல நடிகரின் பேரன் என்பதும், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தான், வருணின் மாமா என்பதும் அனைவருக்கும் தெரியவந்தது.

பிக்பாஸ் வீட்டில் வருணை சுற்றி நிறைய சர்ச்சைகள் வந்தாலும், அவரது அமைதியான குணம் அவரை சிக்கலில் இருந்து மீட்டு விடுகிறது. பலமுறை எலிமினேஷன் லிஸ்டில் இருந்தாலும் வருண் கடைசியில் காப்பாற்றப்பட்டு விடுகிறார். இப்போது சோஷியல் மீடியாவில் வருணுக்கென்றே நிறைய ஆர்மிகள் மற்றும் ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஐக்கி பெர்ரி, தன்னுடன் விளையாடிய சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு நட்பின் நிமித்தமாக சென்று வருகிறார். முதலில் தன் தோழி இசைவாணி வீட்டுக்கு சென்றார். பின்னர் இமான் அண்ணாச்சியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளை சந்தித்து வந்தார்.  பிறகு பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறிய திருநங்கை நமீதா மாரிமுத்துவையும் சென்று பார்த்தார்.

தொடர்ந்து ஐக்கி பெர்ரி தன் சக போட்டியாளரான, வருண் வீட்டுக்கும் சென்றுள்ளார். அந்த வீடியோவை தனது யூடியூபில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், வருணின் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அண்ணனின் குழந்தை அவர்களின் வீடு என அனைத்தையும் ஐக்கி பெர்ரி வீடியோ எடுத்துள்ளார்.

இதில் என்ன சிறப்பு என்னவென்றால் நம்மில் பலரும் வருணின் அம்மாவை தெரியாது என்றுதான் நினைத்திருப்போம். ஆனால் அவர் பிரபலமான பியூட்டிசியன். நிறைய டிவி சேனல்களில் அழகு குறிப்புகளை வழங்கி வருகிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் இவர்தான் வருணின் அம்மாவா. இவரை ஏற்கெனவே தெரியும். நிறையமுறை டிவியில் பார்த்துள்ளேன் என கூறி வருகின்றனர்.

ஏற்கெனவே பிக்பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகையின்போது  நடந்த ஒரு டாஸ்கில் அனைவரது குழந்தை பருவ படங்களும் பகிரப்பட்டது. அப்போது ஒரு அழகான பெண்குழந்தை பாவாடை சட்டையுடன் மேக்கப் போட்டு இருக்கும் போட்டோ டிவியில் வந்தது. அதைப் பார்த்த பிக்பாஸ் வீட்டிலிருந்து பெண்கள் இது தாங்கள் இல்லை. தவறாக வந்து விட்டது என கூறினர். அதுவரை அமைதியாக இருந்த வருண், இது நான் தான். என் அம்மா ஒரு பியூட்டிஷியன். அவருக்கு பெண் குழந்தைகள் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் தன்னை ஒரு பெண்குழந்தை போல மேக்கப் போட்டு போட்டோ எடுத்ததாக கூறினார்.

இதோ வருணின் அம்மா பற்றிய சில தகவல்கள்; வருணின் அம்மா மகா பிரபல அழகுகலை நிபுணர். இவர், மறைந்த பிரபல சினிமா கலைஞர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஐசரி வேலனின் மகள்.

இவர் அழகுத்துறையில் நுழைவதற்கு இவரது தந்தை தான் முக்கிய காரணம். மகா, சிறுவயதிலிருந்தே தன் தந்தையால் ஆழமாக ஈர்க்கப்பட்டார், அவர் ஒவ்வொரு நாளும் விதவிதமான மேக்கப்புடன் வீட்டிற்கு வரும்போது கவரப்பட்டுள்ளார். இது அழகு துறையில் ஒரு படிப்பைத் தொடங்குவதற்கான தீப்பொறியை அவருக்குள் தூண்டியது.

இப்போது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மகா, அழகு துறையில் நிபுணராக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். நாம் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரை பார்க்கலாம். சர்வதேச அளவில் பெற்ற அனைத்து அனுபவங்களையும் அறிவையும் மஹா பியூட்டி டிரெய்னிங் அகாடமி மூலம் வழங்குகிறார், இதில் 20,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரது பயிற்சி மற்றும் அனுபவத்தால் பயனடைந்துள்ளனர். மேலும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை முன்னிட்டு 484.5 மீட்டர் நீளமுள்ள இளஞ்சிவப்பு முடியை சடை செய்து கின்னஸ் மற்றும் தனித்துவமான உலக சாதனை படைத்தவர்.

ஆனால் இவரை பியூட்டிசியன் மகா என்று தான் நமக்கு தெரியும். ஆனால் இப்போது தான் இவர் பிக்பாஸ் பிரபலம் வருணின் அம்மா என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Famous beautician maha is the mother of big boss varun

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com