பிக்பாஸ் இன்றைய புரமோ: என்னை சீர்திருத்துவதற்கு கமல்ஹாசன் யார்? விளாசும் காயத்ரி

இந்த பதிலை எதிர்பார்க்காத கமல், 'பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தால் நீங்கள் பிரச்னையை சந்திக்கக்கூடும்' என்று மறைமுகமாக எச்சரித்தார்.

ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஷோ சுவாரஸ்யமாக இருக்கிறதோ இல்லையோ… ஒவ்வொரு நாளும் அந்த ஷோவைப் பற்றி வெளியாகும் புரமோவின் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லை. பிக்பாஸ் குறித்து சிந்திப்பதை மக்கள் கொஞ்சம் மறந்தாலும், இந்த புரமோக்கள் அவர்களை மீண்டும் பிக்பாஸ் குறித்து சிந்திக்க வைக்கும் பணியை செவ்வனே செய்கின்றன.

அதன்படி, இன்று வெளியாகியுள்ள புரமோ கூட, தற்போது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கின்றது. நேற்றைய(ஞாயிறு) பிக்பாஸின் போது, ஓவியா வெளியேற்றத்தின் தொடர்ச்சியாக, மற்ற போட்டியாளர்களிடம் தனித்தனியாக அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு அவர்களை மிரள வைத்தார் கமல்ஹாசன்.

ஓவியாவின் மன உளைச்சலுக்கு யார் காரணம்? என்று கேட்டபோது ரைஸா, சினேகன், வையாபுரி, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர், தாங்களும் ஒரு காரணம் என்று ஒப்புக் கொண்டனர்.

குறிப்பாக, ‘எந்த தப்பும் செய்யாமல், அன்புக்காக மட்டும் ஏங்கி, பழியைச் சுமந்து ஓவியா சென்றுவிட்டாள். அதற்கு நானும் ஒரு காரணம்’ என்று அழுதுக் கொண்டே சொன்ன சினேகனை பார்த்து, கமல்ஹாசன் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இதற்கு பின் பேச வந்த காயத்ரியிடம், அவர் பேசும் அநாகரீகமான வார்த்தைகளை குறித்து கமல் கேள்விகளைக் கேட்டார். அதற்கு காயத்ரி, ‘ஏதாவது ஒரு உதாரணத்துடன் கேளுங்க சார்.. அப்போது தான் எனக்கு புரியும்’ என்று சொல்ல, தன் தலை முடியை இழுத்துக் காண்பித்தார் கமல்.

இதற்கு காயத்ரி மன்னிப்புக் கேட்பார் என்று மக்கள் எதிர்பார்த்தால், அவர் சொன்ன பதில் கமல் உட்பட அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. “நான் இப்போ பேசுற கெட்டவார்த்தையே ரொம்ப கம்மி. நான் தற்போது நிறைய மாறியிருக்கேன் சார். கொஞ்சம் கொஞ்சமா இன்னும் என்னை மாற்றிக் கொள்கிறேன்” என்றார்.

இந்த பதிலை எதிர்பார்க்காத கமல், காயத்ரியை ‘டீசண்டாக’ கண்டித்ததோடு, ‘வெளியே வந்தால் நீங்கள் பிரச்னையை சந்திக்கக்கூடும்’ என்று மறைமுகமாக எச்சரித்தார்.

இறுதியில், எவிக்ஷனில் இருந்த ஜூலி, மக்களின் குறைந்த வாக்குகள் பெற்று, பிக்பாஸ் போட்டியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் .

அதைத் தொடர்ந்து, இன்று பிக்பாஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புரமோவில் பேசும் காயத்ரி, “மூணு வாரமா ‘நீ கெட்ட வார்த்தை பேசுற… நீ கெட்ட வார்த்தை பேசுற-னு’ கமல் சார் சொல்றார். இது எனக்கு டிஸ்கரேஜிங்கா இருக்கு. இந்தப் பேரோடு நான் இருக்கணும்-னு அவசியமில்ல. என்ன கரெக்ட் பண்ண எங்கம்மாவிற்கு மட்டும் தான் உரிமை இருக்கு’ என்று கூறியிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close