'உலக நாயகன்' பற்றி 'சூப்பர் ஸ்டார்' நச்சுனு சொல்லும் 5 சுவாரஸ்ய தகவல்கள்

சமீபத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படம் குறித்து பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் தனது நண்பர் மற்றும் சினிமா உலகின் போட்டி நடிகரான கமல் ஹாசன் பற்றி பல விஷயங்களை தெரிவித்திருந்தார்.

அதில்,  “நான் 1970ம் ஆண்டுகளில் சினிமாவில் அறிமுகமானபோது கமல் தான் சூப்பர் ஸ்டார். பல இளைஞர்களுக்கு அவர் தான் கனவு நாயகனாக இருந்தார். தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா என பல ஊர்களிலும் இவர் தான் ஃபேமஸ். அவருடன் இணைந்து நான் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு வந்தபோது பிரமித்து போனேன்.” என்று கூறினார்.

முன்னதாக 2009ம் ஆண்டு நடிகர் கமல் ஒரு பேட்டியளித்ததில் ‘வருங்காலத்தில் ரஜினியை போல் ஒரு நண்பன் எனக்கு அமையமாட்டார் என்பதை உறுதியாக கூறுவேன். நட்பின் நல்ல உதாரணம் ரஜினிகாந்த்’ என்று தெரிவித்திருந்தார்.

கமல் ஹாசன் பற்றி ரஜினிகாந்த் கூறும் தகவல்கள்

அன்று தொடங்கி இன்று வரை ரஜினி மற்றும் கமல் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டி வருவதை நாம்  பார்ப்பது வழக்கம். அவ்வாறு 2.0 படம் குறித்த பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த், 5 விஷயங்களை கமல் ஹாசன் குறித்து கூறியிருக்கிறார்.

கமல் ஹாசனின் 64வது பிறந்தநாளான இன்று அவர் குறித்து ரஜினிகாந்த் கூறிய 5 விஷயங்கள் இதோ உங்களுக்காக:

  1. நான் சினிமா உலகிற்குள் காலடி பதிக்கும்போது கமல் ஏற்கனவே பிரபலமான நடிகராக இருந்தார். அப்போது அவருடன் இணைந்து நடித்தபோது அவரின் நடிப்பை பார்த்து நான் வியந்தேன். ஷூட்டிங் முடிந்த பின்பு என்னை காரில் அழைத்து செல்லும்படி கமலிடம் கூறினார்கள். அந்த நேரத்தில் நான் கமலுடன் இருக்கேன் என்று நம்பவே முடியவில்லை. கனவா என்று கிள்ளிப் பார்த்தேன். ஏனென்றால் நான் அவரை அவ்வளவு வியந்து பார்த்திருக்கிறேன். ஆண்டவன் அருளாலும், நல்ல இயக்குநர்கள் அளித்த வாய்ப்பால் நான் இன்று வெற்றியடைந்துள்ளேன். ஆனால் கமலை விட நான் சிறந்தவன் என்று கூறுவது சரியில்லை.
  2. 1975ம் ஆண்டு மற்றும் அந்த காலத்தில் கமல் எவ்வளவு பெரிய நடிகர் என்பது தற்போது இருக்கும் தலைமுறைகளுக்கு தெரியாமல் போகலாம். இப்போது இருப்பதை விட அதிக புகழ்பெற்ற நடிகராக கமல் அக்காலங்களில் இருந்தார். கமல் நினைத்திருந்தால் என்னை அவர் படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கலாம், அதனை படக்குழுவினரும் மறுத்திருக்க மாட்டார்கள். ஆனால் என்னை ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்திற்கு பரித்துரைத்ததே கமல் தான். கமல் தான் என்னை தனியாக படம் நடிக்க சொன்னார். அப்படி நடித்ததால் தான் நான் இந்த அளவிற்கு புகழை சம்பாதித்திருக்கிறேன். அப்படியில்லையென்றால் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பெல்லாம் வந்திருக்காது. அவர் சொல்லும் எல்லா விஷயத்தையும் நான் கேட்பேன். கமலுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை.
  3. கமல் ஒரு சாதாரண கலைஞன் இல்லை. தமிழ் சினிமாவை உலக அளவிற்கு பெருமைப்படுத்திய கலைஞர்.
  4. நான் எப்படி இவ்வளவு பெரிய நடிகன் ஆனேன் என்று மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், திலீப் குமார் மற்றும் ராஜ் கபூர் என அனைவரும் வியந்து கேள்வி கேட்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு ஒரு வகையில் கமலும் காரணம். இளம் பருவத்தில் இருந்தே நான் கமலின் நடிப்பையே பார்த்து வளர்ந்திருக்கிறேன். 1977ல் ‘அவர்கள்’ படத்தின் ஷூட்டிங் தருணத்தில் புகைப்பிடிப்பதற்காக வெளியே சென்றேன். அப்போது கே. பாலசந்தர் அவர்கள் கோவப்பட்டு என்னை கூப்பிட்டார். பிறகு கமலின் நடிப்பை என்னை கூர்ந்து கவனிக்க சொன்னார். அதன் பிறகு நான் ஒரு நாளும் ஷூட்டிங் செட்டை விட்டு வெளியே சென்றதே இல்லை.
  5.  எனது நண்பர் மட்டுமல்ல, ஒரு நல்ல சகோதரனான கமல் ஹாசனின் 50 ஆண்டு சாதனை வீடியோவை பார்த்த பிறகு நான் அவரின் மிகப் பெரிய ரசிகனாக மாறிவிட்டேன். இதுவரை அவருடன் 7 அல்லது 8 படங்கள் இணைந்து நடித்திருக்கிறேன் ஆனால் இந்த 50 ஆண்டு சாதனை வீடியோ என்னை பழைய நினைவுகளுக்கு கூட்டிச் சென்றது. கமல் தான் செய்த எல்லா விஷயத்தையும் விரும்பி செய்தார். சில விஷயங்களை செய்வதற்கு எனக்கு கடினமாக இருந்தபோதிலும் அவர் அதனை விரும்பி செய்தார்.

இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாய்கன் கமல் ஹாசன் பற்றி கூறியிருக்கும் 5 விஷயங்கள் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் இடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இணைந்து நடிக்க தொடங்கிய இருவரும் பிற்காலத்தில் தனித் தனியாக கதாநாயகர்களாக நடித்தாலும், இருவருக்கு இடையே ஆரோக்கியமான போட்டியும் நல்ல நட்புமே நிலவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close