’பிக் பாஸ்’ வீட்டிற்குள் ஓவியா தற்கொலை முயற்சியா? காவல் துறை சந்திக்கவும் அனுமதி மறுப்பு!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியா அந்த வீட்டிற்குள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியா அந்த வீட்டிற்குள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

’பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.  போட்டியாளர்கள் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் 100 நாட்கள் எந்தவொரு தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் இல்லாமல் தங்க வேண்டும். அவர்கள் 24 மணிநேரமும் 30 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவர். இதற்காக, சென்னையை அடுத்த பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் வீடு போன்ற அமைப்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், போட்டியாளர்களுள் ஒருவரான நடிகை ஓவியா அந்த வீட்டிற்குள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வெள்ளிக்கிழமை மாலை முதல் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதனால்,  நடிகை ஓவியாவின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.  இதையடுத்து, அந்த இடத்திற்கு பூந்தமல்லி காவல் துறை உதவி ஆணையர் ஆல்பர்ட் வில்சன், நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்றனர்.

பின் அங்கிருந்த நிகழ்ச்சியின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை எனவும், அவர் சற்று மன அழுத்தத்தில் இருப்பதால் அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியதாக தெரிகிறது.

ஓவியாவை பார்க்க முடியுமா என காவல் துறையினர் கேட்டதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும், அவர் உள்ளே இருக்கிறாரா? அல்லது அரங்கை விட்டு வெளியே சென்றுவிட்டாரா என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

நடிகை ஓவியா சக போட்டியாளரான ஆரவ் என்பவரை காதலிப்பதாகவும், ஆரவ் அவர் காதலை ஏற்றுக்கொள்ளாதது போலவும் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பப்பட்டது. இதனால், ஓவியா மன அழுத்தத்தில் இருப்பதாகவும் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், நடிகை ஓவியா அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறிது நேரம் மூழ்கியிருப்பது போலவும், அவரை சக போட்டியாளர்கள் மீட்பது போலவும் ஒளிபரப்பானது. இதையடுத்து, ஓவியாவின் மேலாளருக்கு ‘பிக் பாஸ்’ நிர்வாகம் தொடர்புகொண்டு அவர் வந்துகொண்டிருப்பதாகவும், அதனால் உடனேயே ஓவியா கிளம்பிவிடலாம் எனவும் மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

இதனிடையே, அவர் அந்த வீட்டைவிட்டு வெளியேறி காரில் செல்வது போல சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது. ஆனால், அது பழைய புகைப்படம் எனவும் கூறப்படுகிறது. மேலும், மருத்துவர் அறிவுரைப்படி ஓவியா ஒரு நாள் மட்டும் வெளியே சென்றதாகவும், சனிக்கிழமை மீண்டும் வீட்டிற்கு வந்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது.

நடிகை ஓவியா இன்னும் ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் உள்ளாரா என்பது சனிக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலேயே தெரியவரும்.

ஏற்கனவே, மற்றொரு போட்டியாளரான நடிகர் பரணி மற்றவர்கள் தனிமைப்படுத்துவதாக கூறி, அந்த வீட்டில் ஆபத்தான முறையில் வெளியேற முயற்சி செய்து, அதன்பின் முறையாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

×Close
×Close