என் படங்களை முதலில் க்ளைமேக்ஸில் தான் துவங்குவேன் - தியாகராஜன் குமாரராஜா!

பணத்தின் மொழியை இந்த இண்டஸ்ட்ரீ நன்கு அறிந்து வைத்திருக்கிறது. 

Super Deluxe: கடந்த 2011-ம் வருடம் வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதனை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார்.

தற்போது வெளியாகியிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் அவரை, இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநராக்கியிருக்கிறது.

கடந்த மார்ச் 29-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

படம் வெளியாகி வசூல், விமர்சனம் என இரண்டிலுமே நல்ல வெற்றி பெற்றிருக்கிறது. தியாகராஜன் குமாரராஜாவை தொடர்புக் கொண்டு பேசினோம்.

”ஆரண்ய காண்டம் முடித்து விட்டு வேறு ஒரு பெரிய புராஜெக்டில் இன்வால் ஆகியிருந்தேன். அதனால் எனது பெரும்பாலான நேரங்களை அதோடு செலவிட வேண்டியதாக இருந்தது.

ஆனால் அந்த புராஜெக்ட் அடுத்த கட்டத்தை எட்டவில்லை. பின்னர் 2015-ல் தான் சூப்பர் டீலக்ஸ் கதையை எழுத ஆரம்பித்தேன்.

கதை எழுதும் போதே சில பாப் கல்ச்சரும் எனது படங்களில் ஒட்டிக் கொள்ளும். ஆரண்ய காண்டத்திலும் அதை நீங்கள் பார்த்திருக்கலாம். பின்னணியில் ஆங்காங்கே இளையராஜா பாடல்கள், கேமரா ஆங்கிள் என சூப்பர் டீலக்ஸிலும் ஓர் அழகியல் உண்டு.

1982-ல் வெளியான டிஸ்கோ டான்சர் படத்தை எனது சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன். குறிப்பாக அந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தத் தாக்கத்தினாலோ என்னவோ, நான் கதை எழுதும் சீன்களில் எல்லாம் பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்கும்படி பார்த்துக் கொள்வேன்.

ஒருவேளை எழுதும் போது, இசையைக் குறிப்பிட மறந்துவிட்டால், எடிட்டிங்கில் இணைத்துக் கொள்வேன்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், நான் தயாரிக்கும் ப்ரென்ச் படம் ஒன்றில் நடிக்க தான் முதலில் விஜய் சேதுபதியை அணுகினேன். அப்போது அவர் நான் அடுத்து என்ன படம் இயக்கப் போகிறேன், எனக் கேட்டார்.

2 மணி நேரம் சூப்பர் டீலக்ஸ் கதையைக் கூறினேன். இறுதியில் அந்தப் படத்தில் நானே திருநங்கையாக நடிக்கிறேன் என விஜய் தானாக முன் வந்து ஒப்புக் கொண்டார்.

பொதுவாக கதைகள் முதல், இரண்டு, மூன்று என பாகங்கள் பிரிக்கப்படும். ஆனால் நான் என் கதைகளில் மூன்றாம் பாகத்தை அதாவது க்ளைமேக்ஸை மட்டும் தான் எழுதுவேன்.

சூப்பர் டீலக்ஸில் கூட க்ளைமேக்ஸ் போர்ஷனான, சமந்தா தனது காதலனை வீட்டிற்கு அழைக்கும் சீன் தான் முதலில் இருக்கும்.

எனது படங்கள் இரண்டுமே ‘ஏ’ சான்றிதழ் வாங்கியிருப்பது குறித்து பலர் கேட்கிறார்கள். ஆனால் நான் எனது படங்களை முதிர்ச்சியான ஆடியன்ஸுக்காக இயக்கியிருப்பதாகவே கருதுகிறேன்.

எனக்கு வலிமையானப் பெண்களைப் பிடிக்கும். அதனால் தான் ஆரண்ய காண்டம் சுப்புவில் தொடங்கி சூப்பர் டீலக்ஸில் அனைத்துப் பெண் கதாபாத்திரங்களும் அழுத்தமாக இருக்கும். மெயின் ஸ்ட்ரீம் படங்களில் ஹீரோவை மையப் படுத்தி தான் கதை நகரும். ஆட்டம், பாட்டம் 2 சீன்களுக்கு மட்டும் தான் ஹீரோயின் தேவைப்படுவார்.

ஒரு வேளை பெண்களை மையப்படுத்திய படங்கள் அதிக லாபம் ஈட்டினால், பிறகு அனைவருமே பெண்ணிய படங்களை எடுக்க தொடங்கி விடுவார்கள். ஏனென்றால் பணத்தின் மொழியை இந்த இண்டஸ்ட்ரீ நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

சென்னையில் வசித்தாலோ அல்லது 80-களில் டி.வி, சினிமா என்ற இரண்டு ஜன்னல்களுக்கிடையே வளர்ந்திருந்தாலோ எளிதாக சினிமாவின் மீது ஆர்வம் கூடும். இந்த விதிக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன.

தூர்தர்ஷனில் சனிக்கிழமை இந்தி படமும், ஞாயிற்றுக் கிழமை தமிழ் படமும் பார்த்து வளர்ந்தவன் நான்” என மிக யதார்த்தமாகப் பேசிய அவரிடம் அடுத்த புராஜெக்டைப் பற்றி கேட்டோம்.

“நான் இப்போது எந்த புராஜெக்டிலும் கமிட்டாகவில்லை. அப்படி என்றால் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, பைக் ஓட்டுவது, இசைக் கேட்பது, எப்போதாவது படம் பார்ப்பது என மற்றவர்களைப் போல் நேரத்தைக் கழிப்பேன். அதன் வழியே வாழ்க்கையை கிரகித்துக் கொள்கிறேன்” என பதிலளிக்கிறார் தியாகராஜன்!

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close