பிரச்சனை புரியாவிட்டால் நிர்வாணமாகப் போராடுவேன் : தெலுங்கானா முதல்வருக்கு ஸ்ரீ ரெட்டி பகீர் கோரிக்கை

தெலுங்கானா முதல்வருக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி முகநூல் மூலம் கோரிக்கை. கோரிக்கை ஏற்காவிட்டால் நிர்வாணமாக போராட திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தை குலுக்கி எடுத்த சுச்சி லீக்ஸ் போலவே தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் பிரபலங்கள் பற்றிய விவரங்களை வெளியிடப் போவதாக ஸ்ரீ ரெட்டி மிரட்டி வந்தார். பின்னர், பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு பற்றிய தகவலை அவர் வெளியிட்டார். இந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

மேலும் தெலுங்கு திரையுலகைச் சார்ந்த பலரின் தகவல்களை ஸ்ரீ ரெட்டி வெளியிட்டார். இதற்குச் சம்பந்தப்பட்ட திரையுலகினர் உட்பட பல்வேறு தெலுங்கு திரையுலக அமைப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இவரின் இந்தச் செயலை எதிர்த்து ஸ்ரீ ரெட்டி நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.

உரிமம் ரத்து செய்ததை எதிர்த்துக் கடந்த 7ம் தேதி ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தில், “தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்க நடிகைகள் தங்களையே விலையாகக் கொடுக்க வேண்டியுள்ளது. திறமையான நடிகைகள் இருந்தாலும் மும்பையில் இருந்து நடிகைகளைக் கொண்டு வருகின்றனர். அதையும் மீறி வாய்ப்புகள் கிடைத்தால் அவர்களுக்குத் தகுதியான சம்பளம் அளிப்பதில்லை.” என்று குற்றச்சாட்டினார்.

தற்போது இவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிடம் பகிரங்க வலியுறுத்தலை முன்வைத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் நிலவி வரும் இந்தப் பிரச்சனைகளை முதல்வர் முன் நின்று கண்காணித்து தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “நீங்கள் இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக நான் நிர்வாணமாகப் போராடுவேன். எனக்கு உங்களை வேறு எப்படி அணுக வேண்டும் என்று தெரியவில்லை” என்று தெலுங்கானா முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த வலியுறுத்தலை அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

இது போன்ற பல்வேறு விஷயங்களில் ஸ்ரீ ரெட்டி தகவல்கள் மற்றும் கோரிக்கைகள் முன் வைத்தாலும், அடிப்படையாக நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. அவை என்ன?

1. CASH (Committee Against Sexual Harassment)

பொதுவாகவே 10 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள அனைத்து அலுவலகம் மற்றும் துறையிலும், ‘கேஷ்’ என்று அழைக்கப்படும் ‘பாலியல் வன்கொடுமை தடுப்பு குழு’ இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றும் தெலுங்கு திரையுலகில் இது போன்ற குழு எதுவும் இல்லை. இது குறித்து திரைப்பட கலைஞர் நந்தினி ரெட்டி கருத்து வெளியிட்டுள்ளார். அதில் “இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது உரிய நடவடிக்கை எடுக்க நிச்சயம் ஒரு குழு தேவை. அந்தக் குழுவை அமைப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

2. மௌனம் காக்கும் MAA (Movie Artistes’ Association)

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் ‘மா’ அவரை உறுப்பினராக இணைக்க மறுத்துள்ளது. உறுப்பினர் அட்டையைப் பெறுவதற்கு பலமுறை விண்ணப்பித்தும் ஸ்ரீ ரெட்டிக்கு உறுப்பினர் ஆவதை மா மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டையும் அவர் தனது போராட்டத்தின்போது முன் வைத்தார். மேலும் இது குறித்து இன்று வரை ‘மா’ எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

3. நட்சத்திரர்கள் எதிர்ப்பு:

ஸ்ரீ ரெட்டி முன் வைத்துள்ள பாலியல் கொடுமை கருத்துகளுக்கு தெலுங்கு நட்சத்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு கிடைக்க அல்லது உரிய அங்கிகாரம் கிடைக்க பெண் நடிகைகள் பாலியல் துன்புரத்தலுக்கு ஆளாவதாகக் குற்றம் சாட்டினார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதுவரை ஸ்ரீ ரெட்டி கூறுவது போல் எந்த நிகழ்வும் நடந்ததில்லை என்றும் பெண் நட்சத்திரங்கள் கூறியுள்ளனர். இந்தக் கருத்து ஸ்ரீ ரெட்டிக்கு கூடுதலாக பெரும் எதிர்ப்பை சேர்த்துள்ளது.

மேலே பட்டியலிட்டது போல் பல்வேறு அமைப்புகள் சார்பில் முரண்பாடுகள் இருந்தாலும், ஸ்ரீ ரொட்டியின் குற்றச்சாட்டுகள் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் தெலுங்கானா முதல்வரிடம் வலியுறுத்தியது போல் நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இந்த வலியுறுத்தல் அவரின் அடுத்த போராட்டத்திற்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close