சின்ன பட்ஜெட் படங்களுக்கான ஒதுக்கீடு பயன் தந்ததா?

ஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகையை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும்.

பாபு

தயாரிப்பாளர்கள் சங்கம் சின்ன பட்ஜெட் படங்களுக்கு உதவி செய்யும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை சின்ன பட்ஜெட் படங்களை மட்டும் வெளியிடுவது என்பது அந்த நடவடிக்கைகளில் ஒன்று. சென்ற வெள்ளிக்கிழமை – மே 25 ஆம் தேதி சின்ன பட்ஜெட் படங்களுக்கென்று ஒதுக்கப்பட்டது.

மே 25 அதர்வாவின் ’செம போத ஆகாத’ படம் வெளியாவதாக இருந்தது. மே 25 சின்ன பட்ஜெட் படங்களுக்கானது என்று ஜுன் 14 ஆம் தேதிக்கு ’செம போத ஆகாத’ படத்தின் வெளியீட்டை மாற்றி வைத்தனர். அதே நேரம் ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ’செம’ படத்தை வெளியிட அனுமதித்தனர் (ஜி.வி.பிரகாஷ் சின்ன பட்ஜெட் ஹீரோ, அதர்வா பெரிய பட்ஜெட் ஹீரோவா?).

sema - tamil movie
சென்ற வாரம் ’செம’, ’காலக்கூத்து’, ’ஒரு குப்பைக் கதை’, ’அபியும் அனுவும்’ உள்பட சில படங்கள் வெளியாகின. அனைத்தும் சின்ன பட்ஜெட் படங்கள். சின்ன பட்ஜெட் படங்களுக்கான இந்த ஒதுக்கீடு பயன் தந்ததா? சென்னையில் இந்தப் படங்களுக்கு கிடைத்திருக்கும் ஓபனிங்கை வைத்துப் பார்க்கலாம்.

’அபியும் அனுவும்’ படத்தில் டொவினோ தாமஸும், பியாவும் நடித்திருந்தனர். இதுவொரு மலையாளப் படம். தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருந்தனர். டொவினோ தாமஸ் தமிழுக்கு அறிமுகம் இல்லாத நடிகர் என்பதால் மிகக்குறைவான திரையரங்குகளிலேயே படம் திரையிடப்பட்டது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இப்படம் 4.60 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. சென்னைக்கு வெளியே ’அபியும் அனுவும்’ இந்த அளவுக்கூட வரவேற்பை பெறவில்லை.

abiyun anuvum - tamil movie
பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான படம் ’காலக்கூத்து’. படத்துக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்க்கும் நட்சத்திரங்களும் இல்லை. படமும் விமர்சனரீதியாக சொல்லும்படி இல்லை. முதல் மூன்றுநாள் ஓபனிங்காக இந்தப் படம் சென்னையில் 6.35 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்னை சிட்டியில் 3 தினங்களில் 33 காட்சிகள் மட்டுமே இப்படம் திரையிடப்பட்டது. சென்னைக்கு வெளியேயும் இதுதான் நிலைமை.

நடன இயக்குநர் தினேஷ் நாயகனாக அறிமுகமான படம், ’ஒரு குப்பைக் கதை’. மனிஷா யாதவ் நாயகி. குப்பை அள்ளும் தொழில் செய்யும் நாயகன் அதனை மறைத்து நாயகியை திருமணம் செய்கிறான். உண்மை தெரியவரும் போது நாயகி மனரீதியாக நாயகனிடமிருந்து விலகுகிறாள். அதன் பிறகு ஏற்படும் மாற்றங்களை படம் சொல்கிறது. குப்பை அள்ளும் நாயகன் என்ற கதையின் பின்புலம் சில விமர்சகர்களை படத்தை பாராட்டி சொல்ல வைத்தது. பிரபலங்கள் இந்தப் படத்துக்கு தந்த பாராட்டு ஓபனிங் வசூலில் பிரதிபலித்துள்ளது. இந்தப் படம் மூன்று தினங்களில் 78 திரையிடல்களில் 18.84 லட்சங்களை வசூலித்துள்ளது. வார நாள்களில் இந்த வசூல் தொடர்ந்தால் படம் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

kaalakuththu - tamil movie
பாண்டிராஜ் வசனத்தில், அவரது உதவி இயக்குநர் வள்ளிநாயகம் இயக்கிய காமெடி திரைப்படம் ’செம’. ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள இந்தப் படம் பொழுதுப்போக்கிற்கு உத்தரவாதம் என்பதால் முதல் மூன்று தினங்கள் பரவலான கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. முதல் மூன்று தினங்களில் 186 திரையிடல்களில் 68.70 லட்சங்களை சென்னையில் இப்படம் வசூலித்துள்ளது. ஜீ.வி.பிரகாஷின் முந்தையப் படம் நாச்சியார் முதல் மூன்று தினங்களில் ஒரு கோடியை கடந்து வசூலித்தது. பாலா, ஜோதிகா என்ற பிராண்ட் பெயர்கள் இல்லாமல் 68 லட்சங்கள் என்பது ஆரோக்கியமான வசூலே. ஆனால், இதனை வார நாள்களில் படம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு என ஒரு வெள்ளிக்கிழமையை ஒதுக்கியதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அதேநேரம் ஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகையை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும். அந்தவகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சின்ன பட்ஜெட் படங்களுக்கான மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு வரவேற்புக்குரியதே.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close