உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம், இதுவரை பேசப்படாத இருளர் சமூகம் பற்றி பொதுவெளியில் விவாதத்தை உருவாக்கியுள்ள நிலையில், நிஜ வாழ்க்கையில் ராஜாக்கண்ணுவின் மனைவி செங்கேணியை கண்டுபிடித்து வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறார்கள். நிஜ செங்கேணியின் வறுமை நிலையை அறிந்து நடிகர் லாரன்ஸ் பேருதவி அறிவித்திருக்கிறார்.
தலித்துகளின் அரசியல் முழக்கமான ஜெய்பீம் என்ற தலைப்பில் நடிகர் சூர்யாவின் திரைப்படம் அறிவிக்கப்பட்ட போதே இந்த படம் சாதி ரீதியாகவும் மனித உரிமை ரீதியாகவும் முக்கியமான விஷயங்களைப் பேசும் படமாக அமையும் என்று பேச்சு எழுந்தது. இதனால், ரசிகர்கள் மத்தியில் ஜெய்பீம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது.
இந்த நிலையில், ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இந்த படம் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ராஜாக்கண்ணு லாக் அப் மரணம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் மனித உரிமைகள் செயல்பாட்டில் ஆர்வம் உள்ள வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார். மேலும், நடிகர் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், இளவரசு, உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ராஜாக்கண்ணு என்கிற ஒரு இருளர் சமூகத்தைச் சேர்ந்தவரை போலீசார் செய்யாத திருட்டுக்காக கைது செய்து போலீஸ் காவல் சித்திரவதையில் அடித்து கொல்லப்படுகிறார். ஆனால், அவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டதாக காவல் துறையினர் ராஜாக்கண்ணுவின் மனைவி செங்கேணியிடம் கூறுகிறார்கள்.
ராஜாக்கண்ணுவின் மனைவி தனது கணவர் எங்கே என்று கேட்டு நீதி கேட்கிறார். இந்த பிரச்னையை உள்ளூர் கம்யூனிஸ் கட்சியினர் முன்னெடுத்து போராட்டம் நடத்துகிறார்கள். வழக்கறிஞர் சந்துரு சட்டப் போராட்டம் நடத்தி நீதி பெற்று தருகிறார். ராஜாக்கண்ணுவை போலீஸ் காவலில் அடித்துக் கொன்ற போலீஸ்காரர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகிறார். இந்த சம்பவம் 1994-ல் விருத்தாச்சலம் பகுதியில் உண்மையாக நடந்த சம்பவம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நடிகர் சூர்யா பழங்குடியினர் இருளர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார். இப்படி ஜெய்பீம் திரப்படம் இருளர் பழங்குடியினர் பற்றி பொதுவெளியில் விவாதத்தை உருவாக்கி அதன் பணியை செய்தது. அதே நேரத்தில், படத்தில் எஸ்.ஐ குருமூர்த்தி வீட்டு காலெண்டரில் வன்னியர்களின் அக்னி கலசம் இடம்பெற்றதால் வன்னியர்கள் தரப்பி எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சையானது. பின்னர், படக்குழுவினர், தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி அக்னி கலசத்தை மறைத்து லட்சுமி படத்தை வைத்தனர். ஆனாலும் சர்ச்சை ஓயவில்லை. ஏனென்றால், உண்மையான சம்பவத்தில் அந்த எஸ்.ஐ.யின் பெயர் அந்தோனிசாமி என்ற கிறிஸ்தவர் பெயர். அப்படி இருக்கும்போது எப்படி இந்து பெயர் வைத்து அவரை இந்துவாக சித்தரிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்தது.
ஜெய் பீம் படத்தின் மூலம் ராஜாக்கண்ணுவின் லாக் அப் மரணமும் இருளர் பழங்குடி மக்களின் பேசப்பட்ட அளவுக்கு, தனது கணவர் ராஜாக்கண்ணுவின் மரணத்துக்காக கடைசி வரை உறுதியாக இருந்து நீதி கேட்ட செங்கேணி பற்றி யாரும் பெரிய அளவில் பேசவில்லை. இந்த சூழலில்தான், வலைப் பேச்சு யூடியூப் சேனல் குழுவினர் உண்மையான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியைக் கண்டுபிடித்து அவர் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளனர். அதோடு அவருக்கு ஒரு தங்கச் சங்கிலியையும் அளித்துள்ளனர். வலைப்பேச்சு என்பது திரைப்பட விமர்சகர் பிஸ்மி, உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

உண்மையில், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இன்றைக்கு எப்படி இருக்கிறார் என்ற அவருடைய நிலையை வலைப் பேச்சு குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மிகவும் பாழடைந்த ஒரு குடிசையில் வாடகைக்கு வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு சூர்யா வீடு கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரென்ஸ் வலைப் பேச்சு குழுவினரின் மூலம் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியின் நிலையை அறிந்து வருத்தம் அடைந்ததாகவும் அவருக்கு ஒரு வீடு கட்டித்தர உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து நடிகர் ராகவா லாரென்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்கு கொண்டுவந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.
28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசு பொருளாக்கிய ஜெய்பீமி படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாக்கண்ணுவின் மனைவி செங்கேணி உறுதியைப் பலரும் பாராட்டிய நிலையில், நிஜ வாழ்க்கையில் வறுமையில் இருக்கும் ராஜாக்கண்ணுவின் மனைவி நிஜ செங்கேணியைப் பற்றி வலைப்பேச்சு மூலம் அறிந்த நடிகர் ராகவா லாரென்ஸ் பேருதவி செய்வதாக அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“