நாளை ‘காலா’ படத்தின் பாடல்கள் வெளியீடு : 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு என தகவல்!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘காலா’ படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ‘ரஜினி ரசிகர் மன்றம்’ சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு.

நடிகர் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியீடு நாளை நடைபெறும் எனக் கடந்த ஏப்ரல் 28ம் தேதி தனுஷ் அறிவித்தார். இயக்குனர் ரஞ்சித் இயக்கி, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் முதல் சிங்கிள் டிராக் பாடல் ‘செம்ம வெயிட்டு’ மே 1ம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தில் பாடல்கள் உருவான கண்ணோட்டம் வீடியோ நேற்று வெளியானது.

இந்தப் பாடல் பிரீவ்யூ வீடியோவில் இயக்குனர் ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணம் பேசியுள்ளனர். இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு பாடலும் உருவான விதம் குறித்தும் அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். இதுவரை வெளியிடப்பட்டுள்ள ‘செம்ம வெயிட்டு’ மற்றும் ‘பாடல் பிரீவ்யூ’ வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் பாடல் வெளியீடு பலத்த எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘காலா’ படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வைப் பிரம்மாண்டமாக நடத்தப் படத்தின் குழு முடிவெடுத்துள்ளது. இந்த ஏற்பாடுகளைப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினியின் படத்தின் பாடல் வெளியீடு பொது இடத்தில் வைத்து வெளியிடப்படுவது இதுவே முதன் முறை.

மேலும் இந்த விழாவின் அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நபர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக ‘ரஜினி ரசிகர் மன்றம்’ சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான நுழைவு அட்டை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

‘காலா’ படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சிக்கு ரஜினி ரசிகர் மன்றத்தினர் அழைக்கப்பட்டிருப்பது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளது.

×Close
×Close