கிடைக்கும் வாய்ப்பில் பெஸ்ட் எனது சாய்ஸ் - காஜல் அகர்வால்

அது போன்ற கேரக்டர்களை செய்வதே என் கனவு

பாண்ட்ஸ் விளம்பர மாடலாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், அதுதொடர்பான விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசுகையில், “சினிமாவில் எனக்கு வரும் வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதைத் தான் தேர்வு செய்து நடிக்கின்றேன். ஆக்ஷன், காமெடி ரோல்களில் நடிக்க எனக்கு விருப்பம் உள்ளது. இதுவரை ஆக்ஷன் ரோல்கள் செய்ததில்லை. ஆனால், அது போன்ற கேரக்டர்களை செய்வதே என் கனவு. தனிப்பட்ட முறையில் எமோஷ்னல் டிராமா வகை மற்றும் காதல் கதைகளை விரும்புகிறேன்.

மொழி பாகுபாடின்றி அனைத்து மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நடிப்பு என்று வந்துவிட்டால், மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதே என் கருத்து. எல்லாம் ஸ்க்ரிப்ட்டை பொறுத்தது. எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும், ஸ்க்ரிப்ட் நன்றாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அது சர்வதேச மொழிப்படமாக இருந்தாலும் சரி, நடிப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்றார்.

கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு பதிலளித்த காஜல், “எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது. அவர் கட்சி தொடங்கியதற்கான நோக்கத்தை நாம் முழுமையாக நம்பலாம். நிச்சயம் அவர் அரசியலில் சிறந்து விளங்குவார் என நம்புகிறேன்” என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

×Close
×Close