ரஜினிகாந்த் அரசியல் வருகை; முதன்முறையாக கமல் ‘ஓப்பன்’ டாக்!

சமூக அக்கறைக்காக செய்ய வேண்டியதை, சத்யமேவ ஜெயதேவில் செய்தவரை விட நான் அதிகம் தனியாக செய்துக் கொண்டிருக்கிறேன்.

By: Updated: May 26, 2017, 02:09:29 PM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இன்று நடந்த இந்நிகழ்ச்சியின் பத்திரிக்கையாளர்கள் அறிமுக விழாவில் பேசிய கமல்ஹாசன், “நான் கம்பெனி ஆரம்பித்தபோது கூட பாஸ் வேஷம் போட்டதில்லை. இது எப்படி இருக்கப் போகிறது என்பதை இனிமேல் தான் பார்க்கவேண்டும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் குறித்த விவரம் எதுவும் உண்மையாக எனக்கு தெரியாது. அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் தான் அந்த பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். ஸ்க்ரிப்ட் இல்லாத நிகழ்ச்சி இது” என்றார்.

மேலும், “இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் என்னவெனில், ஒருவர் பொது இடத்தில் இருக்கும் போது மிகவும் அமைதியாக இருப்பார். அதுவே தனியாக கண்ணாடி முன் நிற்கும் போது, வெவ்வேறு ஸ்டைலில் முகத்தை வைத்துக் கொண்டு நிற்பார். அதை நாம் பார்த்தால் ‘அவரா இவர்?’ என நமக்கே ஒரு சிரிப்பு வரும். அதுதான் நமக்கு சுவாரஸ்யம். இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருப்பவர்களால் ரொம்ப நாளைக்கு நடிக்க முடியாது. அவர்களது நிஜ முகத்தை காட்டித் தான் ஆக வேண்டும்” என்றார்.

மேலும், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கமல், “சமூக அக்கறைக்காக செய்ய வேண்டியதை, சத்யமேவ ஜெயதேவில் செய்தவரை விட நான் அதிகம் தனியாக செய்துக் கொண்டிருக்கிறேன். இதனை எனது தனி பெருமையாக நான் சொல்லிக் கொள்வேன். பல வருடங்களாக செய்து வருகிறேன்.

குறிப்பாக, ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல், “நிஜமாகவே அந்த விஷயத்தைப் பற்றி பேச தனியாக நாம் ஒரு பிரஸ்மீட் வைக்க வேண்டும். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும்போது அதனை பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, “நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன். ஆனால், போட்டி போடும் அரசியலுக்கு தான் வரவில்லை” என்றார்.

மேலும், ‘தமிழர் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா?’ என்ற கேள்விக்கு, “அப்படியெல்லாம் சொல்ல முடியாது. காந்தி தமிழரா? சுபாஷ் சந்திர போஸ் தமிழரா? எங்கள் ஊரில் போஸ் எனும் பெயரில் பல பேர் இருக்கிறார்கள். சேவை செய்யும் மனசு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம்.

சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது பற்றிய கேள்விக்கு, “எல்லோரும் சொன்னதைத் தான் அவரும் சொல்லியிருக்கிறார். அவர் வித்தியாசமாகவும் ஒன்றும் சொல்லவில்லை. தவறாகவும் எதுவும் சொல்லவில்லை” என்றார்.

நண்பர் எனும் முறையில் ரஜினிக்கு அரசியல் குறித்து ஆலோசனைகள் தருவீர்களா? எனும் கேள்விக்கு, “அதனை இவ்வளவு ஓப்பனாகவா சொல்வேன்? தனியாக தான் சொல்வேன்” என்றார்.

‘போர்’ வரும் போது சொல்கிறேன். தயாராக இருங்கள் என்ற ரஜினியின் பேச்சு குறித்த கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kamal speaks about rajini politics speech

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X