’பத்மாவத்’ படத்தை தொடர்ந்து மணிகார்னியாவிற்கு எகிறும் எதிர்புகள்!

ஜான்சி ராணி வெள்ளைக்காரை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்

ஜான்சி ராணி வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ’மணிகார்னியா’ படத்திற்கு பல்வேறு எதிர்புகள் கிளம்பி வருகின்றன.

திரைத்துறையில் அவ்வப்போது வரலாற்று பின்னணியை மையாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். சென்ற வருடம் அனைத்து மொழிகளிலும் வெளியான ‘பாகுபலி’ போன்ற திரைப்படம் இந்திய சினிமாவை உலகளவில் பேச வைத்தன. தமிழைக் காட்டிலும், பாலிவுட்டில் வரலாற்று பின்னணிக் கொண்ட திரைப்படங்களை அதிகம் இயக்குவதில் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ’பத்மாவத்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெளியாகியது.

ராணி பத்மாவதி கதாபாத்திரம் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், வரலாற்று நிகழ்வுகள் தவறாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு இந்து அமைப்புகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றம் வரை சென்று, கடும் எதிர்புகளை சந்தித்த பின்பு, தற்போது படம் வசூல் சாதனையை படைத்து வருகிறது. படம் வெளியான பின்பு, இதில் ராணி பத்மாவதி கதாபாத்திரம் தெய்வத்திற்கு நிகராக காட்டப்பட்டுள்ளதாக, இதுவரை நடத்தப்பட்ட போராட்டங்கள் வீணாவை என்று விமர்சங்கள் எழுந்தன. இந்நிலையில், இதேப்போன்று ‘மணிகார்னியா’ திரைப்படத்திற்கும் தற்போது எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை, கங்கனா ரணவத் நடிப்பில் ’மணிகார்னியா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சுதந்திரப் போராட்டத்தில் தனியொரு பெண்ணாக நின்று வெள்ளைக்காரர்களை துரத்தி அடித்த ஜான்சி ராணி லட்சுமி பாயின் வரலாற்றை சொல்லும் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. ஆனால். படம் வெளியாவதற்குள், சர்வ பிரமாண சபை, ராஜ்புத் இனத்தவர்கள் போன்ற இந்து அமைப்பினர் படத்திற்கு போர்க் கொடி தூக்கியுள்ளனர். இந்த படத்தில், ஜான்சி ராணி வெள்ளைக்காரை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

முதலில், இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது போராட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், சுதந்திரம் பெற்ற மாதமான ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆம் தேதி அன்று படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து பேசியுள்ள படத்தின் இயக்குனர், கிரீஷ் ”படத்தில் ஜான்சி ராணியின் கதாபாத்திரம் எந்த வகையிலும் தவறாக சித்தரிக்கப்படவில்லை. அதைப்போல் ஜான்சி ராணி எவரையும் காதலிப்பது போன்ற காட்சிகள் இல்லை. இதுப்போன்ற எதிர்புகள் படத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close