'காலா' கர்நாடகத்தில் வெளியிடாமல் இருப்பதே நல்லது! - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காலாவிற்கு எதிராக கன்னட அமைப்புகளும் திரைப்பட வர்த்தக சபையும் என்னிடம் புகார் அளித்துள்ளனர். காலாவை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

‘காலா’ படத்தை வெளியிடாமல் இருப்பதுதான் கர்நாடகாவின் அமைதிக்கு நல்லது என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தனுஷ் தயாரிக்க, பா.ரஞ்சித் இயக்க ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் வெளியாகவுள்ள படம் காலா. வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் ரிலீசாகிறது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் கர்நாடகாவிற்கு எதிராக இருப்பதாக கூறி, அம்மாநில திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை திரையிட முடியாது என்று அறிவித்தது.

இந்தச் சூழ்நிலையில், கர்நாடகாவில் காலாவைத் தடையில்லாமல் வெளியிட வேண்டும் என்றும் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் தனுஷ் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று(5.6.18) மதியம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட்டே ஆக வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது என்றும், அதேசமயம், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கூடவே, தயாரிப்பாளர் தனுஷ் கர்நாடகாவில் எந்தெந்த தியேட்டர்களில் காலா வெளியாகிறது என்ற விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து “காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி அறிவிக்க வேண்டும்” என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், ரஜினிக்கு
நிபந்தனை விதித்துள்ளார்.

இதையடுத்து, கர்நாடக முதல்வர் குமாரசாமி அளித்துள்ள பேட்டியில், “கர்நாடகத்தில் காலாவை வெளியிடாமல் இருப்பதுதான் நல்லது. காலாவிற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காலாவிற்கு எதிராக கன்னட அமைப்புகளும் திரைப்பட வர்த்தக சபையும் என்னிடம் புகார் அளித்துள்ளனர். காலாவை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. படம் வெளியாகும் தியேட்டர்களில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடாமல் இருக்கலாம். எச்சரிக்கையை மீறி படம் வெளியாக வேண்டும் என்றால், விளைவுகளை தயாரிப்பாளர்தான் எதிர்கொள்ள வேண்டும். காலா பற்றிய ஹைகோர்ட் தீர்ப்பு நகல் இன்னும் வரவில்லை. நகல் வந்த பின் மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

காலா விஷயத்தில் கர்நாடகா கோர்ட் உத்தரவு என்ன?

×Close
×Close