தேவர் மகன்-2 எடுத்தால் ஓடாது; முடங்கும் - கமல்ஹாசனுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

திரைப்படத்திற்கு ‘தேவேந்திரர் மகன்’ என்று பெயரிடுங்கள்; படத்திற்கும் பெயர் வரும், உங்களுக்கும் பெயர் வரும்

‘தேவேந்திரர் மகன்’ என்று பெயரிட்டால் படம் ஓடும் எனவும், வேறு பெயரிட்டால் அத்திரைப்படம் முடங்கும் எனவும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எழுதிய கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணசாமி இன்று (நவ.7) கமல்ஹாசனுக்கு எழுதிய கடிதத்தில், “கமல்ஹாசனுக்கு தீபாவளி பிறந்தநாள் வாழ்த்துகள். என்னிடத்திலிருந்து இதுபோன்ற ஒரு கடிதத்தை நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களது திரைப்படப் பெயர் விவகாரங்களால் நம்மிடையே மிகப்பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. கமல்ஹாசன் என்ற நடிகரை மிகமிக மதிக்கக் கூடியவன் நான்; ஆனால், உங்களது திரைப்படப் பெயர்கள் தமிழ் சாதிகளிடையே பிளவுகளையும், பிரிவினைகளையும் உருவாக்கியிருக்கிறது என்ற அடிப்படையில் நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன்.

நீங்கள் இப்பொழுது திரைத்துரையிலிருந்து அரசியலுக்கும் அடியெடுத்து வைத்துவிட்டீர்கள். இந்தியர் – தமிழர் என்ற சொற்றொடர்கள் வெளிப்படையாக இருந்தாலும் தமிழர்களிடையே சாதி அடையாளங்களுக்கான பெரும் போர் நடந்துகொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் கருதினேன்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு நீங்கள் அளித்த பேட்டியைப் பார்த்தேன்; நீங்கள் அரசியலில் நேர்மையைப் பற்றி மிக அதிகமாக குறிப்பிட்டிருந்தீர்கள். அதை நான் வரவேற்கிறேன். திராவிடக் கட்சிகளுக்கு எதிரான கருத்தில் இரண்டு கட்சிகளுக்கும் எதிரான சமநிலைக் கருத்து இல்லாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது. உலகளவில் பேசப்படும் மைய அரசியல் வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் அத்துடன் முடிப்பீர்கள் என்று கருதினேன்; கடைசியில் செய்தி தொகுப்பாளர் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்; நீங்கள் -2 (தேவர் மகன் – 2) என்ற பெயரில் படம் எடுப்பதாகக் கூறியிருந்தீர்கள்.

ஏற்கெனவே 1993-களில் நீங்கள் எடுத்த ‘அந்த -1’ திரைப்படம் தென் தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 1993-ல் வெளியான உங்களது ‘-1’ திரைப்படத்தால் விதைக்கப்பட்ட சாதிய விதையால் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையிலும் சாதிப்போர் நடந்துகொண்டே இருக்கிறது.

உங்களுடைய அந்தப் படத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள்; அந்த மோதலால் எண்ணற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டிருக்கின்றன; ஒட்டுமொத்த சமுதாயத்தினுடைய சுயமரியாதை பல இடங்களில் கேள்விக்குறியாக்கப்பட்டிருந்தது. உண்மையில் உங்களுடைய அந்தப் படத்தால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உங்களிடம் நாங்கள் நஷ்ட ஈடே கேட்கவேண்டும். நாங்கள் வழக்குப் போட்டிருந்தால் உங்களிடத்தில் இருக்கிற சொத்துகளே போதாது. எங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்;

தேவேந்திரகுல மக்கள் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், அந்தத் திரைப்படம் வந்து போயிற்று. ஆனால், அதேபோன்று பெயரிட்டு இனி எந்தவொரு படத்தையும் தேவேந்திரகுல வேளாளர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். தேவேந்திரகுல இளைஞர்கள் உங்கள் மீது உச்சகட்ட ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தயவு கூர்ந்து இனியொரு விஷப் பரீட்சையில் ஈடுபடாதீர்கள்.

நீங்கள் ஒரு எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர், திரைப்படக் கலைஞர்; வரலாற்றில் தெரிந்தோ தெரியாமலோ, ஏதோ ஒரு சூழலில் ஏற்பட்ட தவறை சரிசெய்யக்கூடிய வகையில், தேவேந்திரகுல வேளாளர்களுடைய பெருமையை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு படைப்பை நீங்கள் தந்திருக்க வேண்டும்; ஆனால் தரவில்லை.

ஏழ்மையில் மூழ்கிக் கிடந்தாலும் அவரவருடைய சாதிய அடையாளப் பெருமையை மீட்பதென்பதே உயிர்மூச்சாக தமிழ் சமூக மக்களிடையே கருத்து நிலவுகிறது. நீங்கள் பொது வாழ்வுக்கு வந்த பிறகாவது தமிழ் சமுதாயங்களிடையே சமநிலையை உருவாக்கும் பொருட்டும், நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டும் நீங்கள் எடுக்கும் புதிய படத்திற்கு ‘தேவேந்திரர் மகன்’ என்று பெயரிட்டிருக்க வேண்டும். ஆனால், 1993-ல் எந்தப் பெயரில் எடுக்கப்பட்ட படத்தால் சாதிக்கலவரம் உருவாக்கப்பட்டதோ, அதே பெயரில் இப்பொழுது -2 என்று படம் எடுப்பதாகக் கூறுகிறீர்கள்.

பெயர் மட்டுமே முக்கியம், உள்ளே என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ‘தேவேந்திரர் மகன்’ என்று தங்களுடைய படத்திற்குப் பெயரிடுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பையும் கவுரவத்தையும் பெற்றுத்தரும்; அந்தப் படமும் நல்லமுறையில் ஓடும்.

சமீபத்தில் கூட ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் சாதிய மனப்பான்மையோடு பேசி கைது செய்யப்பட்ட நிகழ்வு உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் -2 என்று படம் எடுக்கும்பட்சத்தில், அது நேரடியாக தேவேந்திரகுல வேளாளர்களைத் தான் பாதிக்கும். 1993-ல் நீங்கள் எடுத்த அந்த -1 திரைப்படத்திற்கு சமநிலையை உருவாக்கும் வகையில், தற்போது எடுக்கக் கூடிய படத்திற்கு ‘தேவேந்திரர் மகன்’ என்று பெயர் வைத்தால் நீங்கள் உண்மையிலேயே சமநிலையை விரும்பக்கூடிய மைய அரசியல்வாதியாக அனைவராலும் கருதப்படுவீர்கள்.

மாரிசெல்வராஜ் என்ற ஒரு புது இயக்குநர் தென்தமிழக மக்களின் ஒரு சிறு அடையாளத்தை முன் வைத்ததற்காக ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படம் பலதரப்பினராலும் பாராட்டப்பட்டதை செய்தித்தாள்களின் மூலமாக அறிந்து கொண்டேன். வலுத்தவர்களுக்கே மீண்டும் இனிப்பை வழங்குவது எந்த விதத்திலும் உகந்தது அல்ல. யார் இனிப்புக்காக ஏங்குகிறார்களோ அவர்களுக்கு அதை வழங்குவது தான் உகந்தது, உத்தமமானது.

அந்த வகையில் நீங்கள் இப்பொழுது எடுக்கக்கூடிய திரைப்படத்திற்கு ‘தேவேந்திரர் மகன்’ என்று பெயரிடுங்கள்; படத்திற்கும் பெயர் வரும், உங்களுக்கும் பெயர் வரும். ஒருவேளை -2 என்று பெயரிடுவதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த தேவேந்திரகுல மக்கள், முன்பு சண்டியருக்குக் கொடுத்த எதிர்ப்புகளைக் காட்டிலும் மிகமிகக் கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய சூழல்கள் உருவாகும். உங்களது கொள்கைப்படி மைய அரசியலைக் கையாள வேண்டுமென்றால், மறைக்கப்பட்ட அடையாளத்தை மீட்கப் போராடும் தேவேந்திரகுல வேளாளர்களை அடையாளப்படுத்தி ‘தேவேந்திரர் மகன்’ என்ற பெயரில் படம் எடுங்கள், அது ஓடும்; ஆனால் —மகன்–2 என்று படம் எடுத்தால், ஓடாது; மாறாக அது முடங்கும்” என கிருஷ்ணசாமி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close