Advertisment

சொகுசு கார் பதிவு சர்ச்சை : நடிகை அமலா பால் ஆவேசம்

இந்தியப் பிரஜையாக எங்கு வேண்டுமானாலும் சொத்துகள் வாங்க எனக்கு உரிமை இருக்கிறது என்று கார் பதிவு செய்தது தொடர்பாக அமலாபால் ஆவேச அறிக்கை கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ACTRESS AMALA PAUL STILLS FROM THALAIVA MOVIE

இந்தியப் பிரஜையாக எங்கு வேண்டுமானாலும் சொத்துகள் வாங்க எனக்கு உரிமை இருக்கிறது என்று புதுவையில் சொகுசு கார் பதிவு செய்த சர்ச்சைத் தொடர்பாக அமலாபால் ஆவேச அறிக்கை கொடுத்துள்ளார்.

Advertisment

புதுச்சேரியில் விலையுயர்ந்த கார்கள் பதிவு செய்தது தொடர்பாக பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. அமலாபால் உள்ளிட்ட பலரின் பெயர்களும் இச்செய்தியில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தச் சர்ச்சைத் தொடர்பாக அமலாபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறிவைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளால் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக, நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஓர் இந்தியப் பிரஜையாக நான், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கவும், சொத்துகள் வாங்கவும் உரிமை இருக்கிறது. தாய்நாடு என்பதற்குரிய உண்மையான அர்த்தத்தை தொலைத்துவிட்டு, சிலர் பிராந்தியவாத பிரிவினைகளை முன்னிறுத்தி வருவதால், இங்குள்ள வாசகர்கள் தன் மாநிலம் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற ஒரு மாயையான சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சம அளவில் தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பணியாற்றியுள்ள நான், இவ்விரு மாநிலங்களிலும் என் வருமானத்தையும் சொத்துகளையும் நியாயப்படுத்த இத்தகைய ஞானிகளிடமே உதவி கேட்கலாம் என்றுள்ளேன். ஒரு வேளை நான் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கும் அல்லது பெங்களூருவில் ஒரு சொத்து வாங்குவதற்கும் இவர்களது ஒப்புதல் தேவைப்படுமோ?

கடந்த முறை நான் பெங்களூரில் பார்த்தபோது, அங்கும் இந்திய ரூபாய் தான் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இத்தகைய ஞானிகளுக்கு எழுபது ஆண்டுகளில், நமது நாடு கடந்து வந்த பாதை மறந்து போய்விட்டது போலும். இறுதியாக, வேற்றுமையில் ஒற்றுமையை காண்கின்ற இந்த நேரத்தில், அதுவும் தற்போதைய இந்திய அரசு, ஒரு நாடு ஒரே வரி என்று ஒன்றுபட்ட வரிவிதிப்பை அமல்படுத்திய பிறகும் கூட, பொது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும், ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் முன்வைக்கும் பிரிவினைவாத வாதங்களை உடனடியாக நிறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வருங்காலத்தில் நாம் அனைவரும் மலையாளி, தமிழர், பஞ்சாபி, குஜராத்தி என்கின்ற பாகுபாடுகளை களைந்து, ஓர் இந்தியராக அதன் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும் பலம் சேர்க்கிற வகையில் வலம் வருவோம் என உண்மையாக, உறுதியாக நம்புகிறேன்.

குறுகிய நோக்கில் சின்ன சின்ன ஆதாயங்களுக்காக, சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பதைத் தவிர்த்து, நாம் நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி போன்ற சமூக ஏற்றத் தாழ்வுகளை களைய போராடுவோம். அதுவே சிறந்த போராட்டமாகும்.

இவ்வாறு நடிகை அமலாபால் தெரிவித்திருக்கிறார்.

Kerala Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment