scorecardresearch

‘நடிச்சது அவரு… சட்டை என்னது!’ இளையராஜா- பாரதிராஜா பருவகால சேட்டை

என்னோட சாதனைக்கு எல்லாம் உறுதுணையா இருந்தது இளையராஜா. சந்தேகமே இல்லை. இன்னைக்கு வர என் படம் பேசுதுனா, நான் எடுத்த காட்சிகளை விட, இளையராஜாவின் பின்னணி இசைதான் காரணம்.

Bharathiraja Ilaiyaraaja
Maestro Ilaiyaraaja shares his vintage memories with Director Bharathiraja

இசைஞானி இளையராஜா, ஆசியாவின் முதல் சிம்பொனி வாசிப்பாளர். 1,000 படங்கள். 8,000 பாடல்கள். 20,000 கச்சேரிகள்; இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பில் சமரசம் செய்யாமல், திரைப்பட இசையின் ஒலிப்பதிவை மாற்றியமைத்தார் இளையராஜா. காலங்கள் கடந்தும் அவரது இசை இன்றும் அனைவரையும் கவர்கிறது. பாக்ஸ் ஆபிஸில் பல படங்களின் வெற்றிகரமான ஓட்டத்திற்கு உந்து சக்தியாக அவரது இசை இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

பாரதிராஜா மற்றும் இளையராஜாவின் கூட்டணி பதினாறு வயதினிலே படத்துடன் தொடங்கியது. இருவரும் இணைந்து மறக்க முடியாத படங்கள் மற்றும் பாடல்களை உருவாக்கியிருந்தாலும், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேதம் புதிது படத்திற்கு இசையமைப்பாளர் தேவேந்திரனை தேர்வு செய்தார் பாரதிராஜா.

ரஜினியின் கொடி பறக்குது படத்திற்காக பாரதிராஜா மற்றொரு இசை அமைப்பாளர் ஹம்சலேகாவை ஒப்பந்தம் செய்தார்.

பிறகு, இளையராஜாவும், பாரதிராஜாவும்’ என்னுயிர் தோழன், புதுநெல்லு புதுநாத்து, நாடோடி தென்றல் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினர். ஆனால் மீண்டும், அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு, இரு துருவங்களும் மீண்டும் சந்தித்தனர். எட்டு வருடங்கள் தொடர்பில்லாமல் இருந்த இருவரும், 2019ல் வைகை அணையில் சந்தித்து, தங்கள் தோழமையை புதுப்பித்துக் கொண்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த, வைகம்மை பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜாவும், பாரதிராஜாவும் கலந்து கொண்டனர். அப்போது பாரதிராஜா இளையராஜா குறித்து பேசியது இதோ;

என்னோட சாதனைக்கு எல்லாம் உறுதுணையா இருந்தது இளையராஜா. சந்தேகமே இல்லை. இன்னைக்கு வர என் படம் பேசுதுனா, நான் எடுத்த காட்சிகளை விட, இளையராஜாவின் பின்னணி இசைதான் காரணம். ஒரே ஒரு தடவதான் ரீல்ல பாப்பான். உடனே பேனாவ எடுத்து எழுத ஆரம்பிச்சுருவான். அதன்பிறகு வாசிச்சானா, அப்படியே சல்லு சல்லுனு போய் இசை விழும். இளையராஜா ஐந்து விரல்லயும், ஐந்து சரஸ்வதி இருக்கா.

நாங்க ரெண்டு பேரும் ஒரு காலத்துல, நாடகத்துல நடிக்கும் போது, அங்கயும் வந்து என்னைய கலாட்டா பண்ணி, டயலாக் பேச விடமாட்டான் என்று பாரதிராஜா பழைய நினைவுகளை பகிர, அப்போது குறுக்கிட்ட இளையராஜா, விஷயம் என்னன்னா?  அல்லி நகரத்துல நாடகம் நடக்குது. ஒரு சீனுக்கு அப்புறம் டிரெஸ மாத்திட்டு போறதுக்கு, பாரதிராஜாகிட்ட டிரெஸ் இல்ல.. நான் கீழே உட்காந்து ஆர்மோனியம் வாசிச்சிட்டு இருந்தேன். அப்போ பாரதிராஜா என்கிட்ட வந்து சட்டைய கழட்டு, சட்டை கழட்டுனு சொன்னான். நான் வாசிச்சுட்டு இருக்கேன்யா சொன்னேன். ஆனா, பாரதிராஜா சீனுக்கு போடனும் கழட்டுனு சொல்லி, என் சட்டைய மாட்டிட்டு போயி சீனுல நடிச்சுட்டான். இதுல எனக்கென்ன பிரச்சனைனா, அடுத்தநாள் நான் தெருவுல அந்த சட்டையத் தான் போட்டுட்டு போனும். அப்போ எல்லாரும் பாரதிராஜா சட்டையத்தானே நான் போட்டுட்டு வரேனு பேசுவாங்கனு யோசிச்சேன்.

அடுத்த சீனுல, பாரதிராஜா புட்ஸ் பாலிஷ் போட்டுட்டு இருந்தாரு.. நான் உடனே அதே சட்டைய மாட்டிட்டு மேடைக்கு போயி, பாலிஷ் போடுனு சொன்னேன். அதைத் தான் பாரதிராஜா கலாட்டானு சொல்றார் என்று தன் நினைவுகளை பகிர்ந்தார்.

பிறகு பேசிய பாரதிராஜா, மேடையில ரொம்ப கலாய்ப்பான். நம்மள நடிக்க விடமாட்டான். இது நாடகம், எல்லாரும் பாக்கிறாங்கனு சொன்னா, கண்டுக்கவே மாட்டான். இன்னைக்கு வர அதைத் தான் பண்றான்.

இப்படி இளையராஜாவும், பாரதிராஜாவும் பேசும் வீடியோவை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். வீடியோ கிரெடிட்- தி சினிமாஸ் யூடியூப் சேனல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Maestro ilaiyaraaja shares his vintage memories with director bharathiraja

Best of Express