Advertisment

திருட்டு விசிடி எங்கு தயாராகிறது? - அதிர்ச்சி தகவல்கள்

இந்த நடைமுறைகளை செயல்படுத்த தனியாக ஒரு அணி அமைப்பதும் தவறில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருட்டு விசிடி எங்கு தயாராகிறது? - அதிர்ச்சி தகவல்கள்

பாபு:

Advertisment

தமிழ் சினிமாவுக்கு சிம்மச் சொப்பனமாக இருப்பது திருட்டு விசிடியும், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களும். திருட்டு விசிடி எங்கு, எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதற்கு இதுவரை ஒரு வெளிநாட்டு கதை கூறி வந்தார்கள்.

எப்எம்எஸ் எனப்படும் வெளிநாட்டு உரிமை விற்கப்படும்போது, வெளிநாடுகளில் படத்தை திரையிட வாங்குகிறவர்கள், திரையிடுகிற திரையரங்குகள் மூலமாக திருட்டு விசிடி எடுக்கப்படுகிறது என்றார்கள். ஆனால், வெளிநாடுகளில் அல்ல, உள்ளூரிலேயே திருட்டு விசிடி எடுக்கப்படுகிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மனுஷனா நீ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கஸாலி.

இவரது மனுஷனா நீ திரைப்படத்தை கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் படத்தை ஓடவிட்டு திருட்டு விசிடி தயாரித்திருக்கிறார்கள். கஸாலி அளித்த புகாரின் பேரில் தியேட்டரின் புரொஜக்டர் உள்ளிட்டவைகள் ஜப்தி செய்யப்பட்டன. திரையரங்கு மீது கிரிமினல் வழக்கும், நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கும் கஸாலி தொடர்ந்திருக்கிறார்.

தமிழ்ப் படங்கள் க்யூப் மற்றும் யூஎஃப்ஓ நிறுவனங்களின் சர்வர் மூலமாக ஒளிபரப்பப்படுகிறது. இ சினிமா, டி சினிமா என இரு பார்மெட்களில் திரைப்படம் திரையிடப்படுகிறது. இரண்டுக்கும் சின்னதாக வேற்றுமை உண்டு. இந்த பார்மெட்களில் திரைப்படம் மாஸ்டரிங் செய்யப்படும்போது இன்விசிபிள் வாட்டர் மார்க் வைக்கப்படுகிறது. இதனை திரைப்படம் பார்க்கையில் நம்மால் காண இயலாது. அதேநேரம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இந்த வாட்டர் மார்க்கை கண்டுகொள்ள முடியும். இதனை வைத்து, திருட்டு விசிடி ப்ரிண்ட் எந்தத் திரையரங்கில் எடுத்தது என்பதை கண்டுபிடித்துவிடலாம். இதன் மூலம்தான் தனது மனுஷனா நீ திருட்டு விசிடி கிருஷ்ணகிரி முருகன் திரையரங்கில் எடுக்கப்பட்டது என்பதை கஸாலி கண்டுபிடித்தார், வழக்கு தொடர்ந்தார்.

சமீபத்தில் வெளியான ஒரு குப்பைக் கதை படத்தை மயிலாடுதுறை கோமதி திரையரங்கில் எடுத்திருக்கிறார்கள். அதன் தயாரிப்பாளர் அஸ்லம் கோமதி திரையரங்கின் மீது வழக்கு தொடுத்துள்ளார். அதேபோல் கோலிசோடா 2, டிக் டிக் டிக் படங்களின் திருட்டு விசிடிகள் எந்தத் திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்டன என்பதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவை சீரழித்துக் கொண்டிருக்கும் திருட்டு விசிடியின் ஊற்றுக்கண் எது என தெரிந்தும் திரையுலகில் உள்ள சங்கங்களோ, திரையரங்கு, விநியோகஸ்தர் சங்கங்களோ கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமானது. இந்த திருட்டு விசிடியினால் ஏற்படும் நஷ்டம் கணக்கிட முடியாதது. உதாரணமாக ஒரு குப்பைக் கதையை இணையத்தில் இதுவரை முப்பது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். இவர்களில் ஐம்பது சதவீதத்தினர் - அதாவது பதினைந்து லட்சம் பேர் திரையரங்கில் படத்தைப் பார்த்திருந்தாலும், ஒரு டிக்கெட்டுக்கு நூறு ரூபாய் என்று வைத்துக் கொண்டால் பதினைந்து கோடிகள் வருகிறது. இது தயாரிப்பாளருக்கு சேரவேண்டிய பணம். திரையரங்குகளில் படத்தை வீடியோவாக எடுத்து, அதனை திருட்டு விசிடியாக விற்கிறார்கள். இணையத்தில் பதிவேற்றுகிறார்கள். இந்தத் திருட்டுத்தனத்துக்கு துணைபோகுத் திரையரங்குகளின் உரிமத்தை நிரந்தரமாக முடக்கினால் மட்டுமே இந்த குற்றச்செயலை நிறுத்த முடியும்.

திருட்டு விசிடி எந்தத் திரையரங்கில் எடுத்தது என்பதை கண்டறிய க்யூப் மற்றும் யூஎஃப்ஓ நிறுவனங்கள் இ சினிமா பார்மெட்டாக இருந்தால் 29,500 ரூபாயும், டி சினிமா பார்மெட்டாக இருந்தால் 59,000 ரூபாயும் கட்டணமாக வாங்கிக் கொள்கிறார்கள். இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் கோரிக்கை. ஏற்கனவே நஷ்டத்தில் இருப்பவர்களுக்கு இது கூடுதல் சுமை.

திருட்டு விசிடி தயாரித்த திiரையரங்கு மீது சென்னை எக்மோரில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவில் புகார் தர வேண்டும். அது கிரிமினல் குற்றமாக பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட திரையரங்கு மீது சிவில் வழக்கு தனியாக தொடர்ந்தால் மட்டுமே நஷ்டஈடு பெற முடியும்.

இந்த நடைமுறைகளை ஒரு தயாரிப்பாளர் தனி நபராக முன்னெடுப்பது சிரமம். அதன் காரணமாகவே பல தயாரிப்பாளர்கள் திருடன் யார் என்று தெரிந்தும் வாளாவிருக்கிறார்கள். அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உதவ வேண்டும். இந்த நடைமுறைகளை செயல்படுத்த தனியாக ஒரு அணி அமைப்பதும் தவறில்லை.

திருடன் யார் என்று தெரிந்த பின்பும் திரைத்துறை அமைதி காப்பதும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்துவதும் தனக்குத்தானே தீங்கிழைப்பதற்கு ஒப்பானது. திரையரங்குகளின் திருட்டு விசிடி தயாரிப்பு குறித்து ஆரம்பம் முதலே உரத்த குரலில் பேசியும், விளக்கியும், நடவடிக்கை எடுத்தும் வருகிற கஸாலி பாராட்டுக்குரியவர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment