Manorama Son Boopathi : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மது கிடைக்காத நிலையில், சிலர் அதற்கு மாற்றாக வெவ்வேறு பானங்களை முயற்சித்து, அது நிலைமையை சீரியஸாக்கிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்தப் பட்டியலில் தற்போது மூத்த நடிகை மனோரமாவின் மகன் பூபதியும் இணைந்திருக்கிறார். மது கிடைக்காத விரக்தியில், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், பார்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மனோரமாவின் மகன் பூபதி மதுவுக்கு அடிமையாக இருப்பதால், இந்த இக்கட்டான சூழலில் மனம் வெதும்பி, தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதாக தெரிகிறது. இதனால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பூபதிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிகிறது.
இந்தத் தகவல் கோலிவுட் பிரபலங்களையும் மனோரமாவின் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஆனால் இது தொடர்பாக பூபதியின் குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது மருத்துவமனையிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
நடிகை மனோரமா 1500-க்கும் மேற்பட்ட படங்கள், 5,000 மேடை நாடகங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். தனது நாடக குழுவின் மேலாளர் எஸ்.எம்.ராமநாதனை 1964-ல் திருமணம் செய்து 1966-ல் விவாகரத்து பெற்றார். பின்னர் தனது மகன் பூபதியுடன் தனியாக வாழத் தொடங்கினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த அவர், தனது 78-வது வயதில் மரணமடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.