மே மாத ரிலீஸ் - தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புதல் அளித்த எட்டுப் படங்கள்

வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திய தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களின் ரிலீஸ் நெருக்கடியையும் வெற்றிகரமாக கையாண்டு வருகிறது.

பாபு

வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திய தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களின் ரிலீஸ் நெருக்கடியையும் வெற்றிகரமாக கையாண்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பே, எந்தெந்த படங்கள் எந்தெந்த தேதியில் வெளியாகும் என்பதை அறிவித்து வருகின்றனர்.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த வெள்ளிக்கிழமை மெர்க்குரி, முந்தல் என இரு தமிழ்ப்படங்கள் வெளியாயின. அடுத்த வெள்ளிக்கிழமை – அதாவது நேற்று தியா, பக்கா, பாடம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. மே 4, மே 11 ஆகிய தேதிகளில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பதை தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்து அறிவித்துள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து – மே 4

Iruttu-Arayil-Murattu-Kuthu-Release-Date

இருட்டு அறையில் முரட்டு குத்து

ப்ளூ கோஸ்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் படம். இவரது முந்தையப் படம் ஹர ஹர மஹாதேவகி வெற்றி பெற்றதால் அந்தப் பட இயக்குனர் சன்தோஷ் ஜெயக்குமார், அப்பட நாயகன் கௌதம் கார்த்திக் ஆகியோரை வைத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை எடுத்துள்ளார். ஏ சான்றிதழ் வாங்கியிருக்கும் இந்த அடல்ட் பேய் படம். வேலைநிறுத்தத்துக்குப் பிறகு இளைஞர்களை திரையரங்குக்கு இழுக்கும் முதல் படமாக இருக்கும்.

அலைபேசி – மே 4

விஜயலட்சுமி கிரியேஷன்ஸ் எஸ்.ராமச்சந்திரன் தயாரித்திருக்கும் அலைபேசி மே 4 வெளியாகிறது. சின்ன பட்ஜெட் படம். முரளிபாரதி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். சிங்கம்புலி மட்டுமே படத்தில் தெரிந்த முகம். வெளியீட்டுக்கு அனுமதி கொடுத்தாலும் இன்றுவரை திரையரங்குகள் கிடைப்பதில் இழுபறி நீடிப்பதால் கடைசி நிமிடத்தில் அலைபேசி அணைத்து வைக்கப்படலாம்.

காத்திருப்போர் பட்டியல் – மே 4

kathiruppor pattiyal

காத்திருப்போர் பட்டியல் பட போஸ்டர்

லேடி ட்ரீம் சினிமாஸ் பைஜா டாம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம், காத்திருப்போர் பட்டியல். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும், காத்திருக்கும் தருணங்களையும் அடிப்படையாக கொண்டு இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் பாலையா டி ராஜசேகர். சென்னையில் ஒருநாள் படத்தில் நடித்த சச்சின் இதன் நாயகன்.

நடிகையர் திலகம் – மே 9

nadigaiyar-thilagam-motion-poste

நடிகையர் திலகம் பட போஸ்டர்

நடிகையர் திலகம் என தமிழிலும், மகாநதி என தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை கதையான இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்துள்ளார். துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மே 9 புதன்கிழமை இப்படம் திரைக்கு வருகிறது.

இரும்புத்திரை – மே 11

irumbuthirai

இரும்புத்திரை பட போஸ்டர்

விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருக்கும் படம். அறிமுக இயக்குனர் மித்ரன் படத்தை இயக்கியுள்ளார். சமந்தா நாயகி. அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். சைபர் க்ரைம் குற்றப்பின்னணியில் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – மே 11

பலமுறை தள்ளி வைக்கப்பட்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் மே 11 வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். இனியும் தள்ளிப்போகாமல் மே 11 வெளியாகும் என நம்பலாம். சித்திக் இயக்கிய பாஸ்கர் தி ராஸ்கல் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் இது. அரவிந்த்சாமி, அமலா பால் நடித்துள்ளனர்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் – மே 11

அருள்நிதி நடிப்பில் தயாராகியிருக்கும் க்ரைம் த்ரில்லர் இரவுக்கு ஆயிரம் கண்கள். பத்திரிகையாளரான மு.மாறன் படத்தை இயக்கியுள்ளார். மகிமா நம்பியார் நாயகி. படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வரவேற்பு பெற்ற நிலையில் எதிர்பார்ப்புடன் வெளியாகிறது.

காளி – மே 18

kaaali

காளி பட போஸ்டர்

வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம், காளி. விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ளார். அஞ்சலி, சுனைனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மேலே உள்ள எட்டுப் படங்களின் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் சங்கம் அங்கீகரித்து அனுமதித்துள்ளது. ஜுன் 7 வெளியாகும் காலாவையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஒன்பதாகும். மே 18 வெளியாகும் பிற படங்கள் குறித்த விவரத்தை ஓரிரு தினங்களில் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்யும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close