இளையராஜா சமீபத்தில் மோடியும் அம்பேத்கரும் என்ற நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில், ”சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முத்தலாக் தடை போன்ற அவரது பல்வேறு சமூகப் பாதுகாகப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் பெரும் கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா என சர்ச்சை உருவானது. பலரும் இளையராஜாவை விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, இளையராஜா இசையில் வெற்றிமாறனின் விடுதலை, விஷாலின் துப்பறிவாளன் 2, விஜய் ஆண்டனியின் தமிழரசன், சிபி சத்யராஜின் மாயோன், விஜய் சேதுபதியின் மாமனிதன், நினைவெல்லாம் நீயடா, சுசிகணேசனின் வஞ்சம் தீர்த்தாயடா உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.
இதற்கிடையே, ஜுன் 2ல் இளையராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கொடீசியா அரங்கில் மாலை 6.30 மணியளவில் ‛ராஜா’ இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான மனோ, கார்த்திக், உஷா உதூப், எஸ்பிபி சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா மோகன், விபாவரி ஆப்தே ஜோஷி, அனிதா, பிரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்டோர் பாட உள்ளனர்.
இவர்களோடு இளையராஜாவும் ஓரிரு பாடல்களை பாட உள்ளார். இதற்கான ரிகர்சல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். ‘‘அப்படியா.. நானும் அங்கே வருகிறேன்’’ என்று ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார்.
ஸ்டூடியோவில் சில ரிகர்சல் பாடல்களை ரஜினிகாந்த் ஆர்வமாக ரசித்து கேட்டார். இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், அங்கிருந்து கிளம்பினார்.
இளையராஜா, ரஜினி சந்தித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“