National Cinema Awards 2021 Dhanush Rajinikanth Vijay Sethupathy won : 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டு வெற்றி பெற்றவர்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். கங்கனா ரனாவத், தனுஷ், ரஜினிகாந்த் ஆகியோருக்கு இந்நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டன.
மணிகர்னிகா: குயின் ஆஃப் ஜான்சி மற்றும் பங்கா படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கங்கனாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. பாரம்பரியப் பட்டுப்புடவை அணிந்து மிடுக்கான தோற்றத்தில் தன்னுடைய விருதைப் பெற்றுக்கொண்டார் கங்கனா. இது அவருக்கு நான்காவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து மனோஜ் பாஜ்பாய், போன்ஸ்லே படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
அசுரன் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைத்துறைக்குக் கொடுத்த மாபெரும் பங்களிப்புக்காக தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. கணவர் மற்றும் தந்தை இருவரும் ஒரே மேடையில் விருது வாங்குவதைப் பார்த்து மகிழ்ந்தார் ஐஸ்வர்யா தனுஷ்.
பிராந்திய மொழிகளில், அசுரன் சிறந்த தமிழ் படமாகவும், ஜெர்சி சிறந்த தெலுங்கு படமாகவும் தேர்வு செய்யப்பட்டன. சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றார்.
மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி தியேட்டர் வெளியீடான சிச்சோரே திரைப்படத்திற்குச் சிறந்த இந்தி திரைப்பட விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மலையாள திரைப்படமான மரக்கர்: அரபிகடலின்டே சிம்ஹம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. மோகன்லால் நடித்த இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்ஷன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil