33 வயது முடிந்து இன்று 34வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா.
டயானா மரியம் குரியன்... இதுதான் நயன்தாராவின் ஒரிஜினல் பெயர். 1984ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பிறந்தவர். கேரளாவில் பிறந்திருந்தாலும், இவருடைய தந்தை விமானப்படையில் பணிபுரிந்ததால், தன்னுடைய பள்ளிப்படிப்பை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வடஇந்தியாவில் பயின்றவர்.
திருவல்லாவில் உள்ள மார்த்தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர் நயன்தாரா. கல்லூரியில் படிக்கும்போது மாடலிங்கில் ஈடுபட்டவரை, இயக்குநர் சத்யன் அந்திக்காட் தன்னுடைய ‘மனசினக்கரே’ மலையாளப் படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்தினார். 2003ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.
தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, 2005ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஐயா’ படத்தில் சரத்குமார் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அடுத்த படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது. பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு சூர்யா, விஜய், எஸ்.ஜே.சூர்யா, ஜீவா, சிம்பு, அஜித், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விக்ரம், கார்த்தி என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷாவுக்கு ரஜினியுடன் நடிக்காத குறை இருப்பது போல, நயனுக்கு கமலுடன் நடிக்காத குறை இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்துவிட்டார். ஆனால், இதுவரை ஒரே ஒரு கன்னடப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர்’ படம்தான் அது. தெலுங்கிலும் இதே பெயரில் இந்தப் படம் ரிலீஸானது.
நயன்தாரா நடிக்கவந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. தினம் தினம் புதுப்புது நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், 15 வருடங்கள் ஹீரோயினாகவே நடிப்பது என்பது மிகப்பெரும் சாதனை. இடையில் பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தாலும், தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தன்னை படத்துக்காக புக் செய்ய வரும்போதே, படம் சம்பந்தமான எந்த புரமோஷனுக்கும் வரமாட்டேன் என கண்டிஷனாகக் கூறிவிடுவார். தன் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவே அவர் பத்திரிகையாளர்களைத் தவிர்க்கிறார் என்கிறார்கள். ஆர்யா நெருங்கிய நண்பர் என்பதால் அவர் தம்பி அறிமுகமாக ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு மட்டும் வந்திருந்தார்.
சமீபத்தில் வெளியான ‘அறம்’ படத்திற்காக காசி, உதயம் மற்றும் கமலா தியேட்டர்களுக்கு விசிட் அடித்து ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்திருக்கிறார் நயன்தாரா. அவர் தியேட்டர் விசிட் அடித்தது இதுதான் முதல்முறை. இந்தப் படத்தை தன்னுடைய மேனேஜர் பெயரில் தானே தயாரித்ததால் இந்த விசிட் என்று காதைக் கடிக்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
ஹீரோயினாக இருந்தாலும், தனக்குப் பிடித்த மூன்று பேருக்காக ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார் நயன்தாரா. ரஜினி, விஜய் மற்றும் தனுஷ் தான் அந்த மூவரும். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ‘பல்லேலக்கா’ பாடலுக்கும், ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலுக்கும், ‘எதிர்நீச்சல்’ படத்தில் தனுஷுடன் ‘லோக்கல் பாய்ஸ்’ பாடலுக்கும் ஆடியிருக்கிறார். இதுதவிர, ஒரு மலையாளப் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
நயனின் சினிமா வாழ்க்கை போலவே, சொந்த வாழ்க்கையும் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்ததுதான். சிம்பு, பிரபுதேவாவுக்குப் பிறகு தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது அன்பாக இருக்கிறார்.
சென்னை, எக்மோர் மியூஸியம் எதிரே அமைந்துள்ள அபார்ட்மெண்டில் தான் தற்போது வசித்து வருகிறார்.
‘ராஜா ராணி’ படத்துக்காக தமிழக அரசு விருதும், ‘புதிய நியமனம்’ படத்துக்காக கேரள அரசு விருதும், ‘ராம ராஜ்யம்’ படத்துக்காக ஆந்திர அரசு விருதும் பெற்றவர். அத்துடன், தமிழ் சினிமாவுக்குப் பங்காற்றியதற்காக தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும் பெற்றுள்ளார்.
ஹீரோக்களுடன் டூயட் பாடிக் கொண்டிருப்பது அலுக்கவே, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘மாயா’, ‘டோரா’, ‘அறம்’ படங்கள் அந்த வகையைச் சேர்ந்ததுதான். சமூகக் கருத்துடன் சமீபத்தில் வெளியான ‘அறம்’, நயனுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது.
தன்னுடைய தோல்விகளுக்கு மற்றவர்களை நோக்கி கைகாட்டாமல், தன்னை நோக்கியே கைகாட்டிக் கொள்வதுதான் நயனின் ப்ளஸ். அந்தக் குணம்தான் இத்தனை வருடங்களாக அவரை முன்னணியில் வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, எத்தனை அடிகள் வாங்கினாலும், சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ‘பீனிக்ஸ்’ பறவையாக அவரை உயிர்த்தெழ வைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.