பெண்கள் மட்டும்தான் சமைக்க வேண்டுமா? நடிகர் விவேக்கை வறுத்தெடுத்த சமூக வலைதளவாசிகள்!

பெண் பிள்ளைகள் சமையல் அறையில் தாயக்கு உதவியாகவும், ஆண் பிள்ளைகள் தந்தை வேலை செய்யும் இடம் சென்று அவர் எப்படி குடும்பத்திற்காக உழைக்கிறார் என்று பாருங்கள்

நகைச்சுவை நடிகர் விவேக் அவ்வப்போது சமூக கருத்துக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு அவா் குழந்தைகளுக்கு இந்த கோடை விடுமுறையை எப்படி போக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் வெளியிட்ட ட்விட்டரில், ‘‘அன்புள்ள மாணவர்கள் மற்றும் குழந்தைகள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழியுங்கள், விளையாடிய பிறகு நிறைய தண்ணீர் குடியுங்கள். பெண் பிள்ளைகள் சமையல் அறையில் தாயக்கு உதவியாகவும், ஆண் பிள்ளைகள் தந்தை வேலை செய்யும் இடத்திற்கு சென்று அவர் எப்படி குடும்பத்திற்காக உழைக்கிறார் என்று பாருங்கள், அப்போது தான் உறவு மேம்படும்’’ என்று சொல்லியிருந்தார்.

பெண் பிள்ளைகளை சமையலறைக்கு தான் போக சொல்லனுமா? சினிமாவில் மட்டும் பகுத்தறிவு, பெண் உரிமை போதிச்சா பத்தாது Mr.விவேக். வாழ்ந்து காட்டனும். பழைய பஞ்சாங்கமா இருக்காதீங்க என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். பாடகி சின்மாய் கூட நடிகர் விவேக்கை கண்டித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நடிகர் விவேக், ‘‘அன்பு நண்பரே! தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை அனைத்துப் பெற்றோரும் ஆமோதிப்பர். என்னை புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி.’’ என்று சொல்லியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வேறு சிலரும் ட்விட் செய்திருந்தனர். ஒருவர், ‘‘தாயிடம் இருந்து சமையல், தந்தையிடம் இருந்து உழைப்பெல்லாம் சரிதான். அதை ஆண் குழந்தை உழைப்பையும், பெண் குழந்தை சமையலையும்னு நீங்க சொல்லும் போதுதான் சிக்கலே ஆரம்பிக்குது. முட்டுலாம் குடுக்காதிங்க சார். நாங்க சரியாத்தான் புரிஞ்சுகிட்டோம் நீங்கதான் தப்பான கருத்த சொல்லி இருக்கீங்க’’ என்று சொல்லியிருந்தார்.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் ட்விட் செய்துள்ளார். அதன் விபரம் வருமாறு:
நான் எல்லா நாட்களையும் சொல்லவில்லை. இந்த விடுமுறை நாட்கள் என்று குறிப்பிட்டு கூறி இருக்கிறேன். மதிப்பு மிகு பெற்றோர்கள் புரிந்து கொள்வர். அவசரப் பட்டு எதிர்மறை, மற்றும் கொச்சை விமர்சனம் வைப்போரையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவம் அவர்கள் புரிதல் அவ்வளவே.

மேலும், இதன் பொருட்டு அணி பிரித்து சர்ச்சை செய்தல் வேண்டாம். அவரவர் கருத்து அவரவர்க்கு. ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதமானவர்; அன்பு மயமானவர். நான் நேசிக்கும் மாணவச் செல்வங்களுக்கு என் மாலை வணக்கங்கள். ஏலே டோண்ட் ஒர்ரி; பீ ஹேப்பி!!!! என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளார், நடிகர் விவேக்.

×Close
×Close