Advertisment

அதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை

ஒருகாலத்தில் உரிமை வாங்காமல் தைரியமாக காப்பி அடித்தவர்கள் இணையதள வளர்ச்சியால் அந்த தவறை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kolaiyuthirkalam

பாபு

Advertisment

2010 இல் வெளியான ஸ்பெயின் திரைப்படம், ஜுலியாஸ் ஐஸ். த்ரில்லர் படமான இது உலகம் முழுவதும் பரவலான வரவேற்பை பெற்று, கணிசமான வசூலை ஈட்டியது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார் கபீர்லால். இவர் பிரபல ஒளிப்பதிவாளர், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜுலியாஸ் ஐஸ் திரைப்படத்தின் உரிமையை முறைப்படி வாங்கி இந்த ரீமேக்கை அவர் செய்கிறார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுவது இது முதல்முறையல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம்தொட்டு இது நடைமுறையில் உள்ளது. ஒரே வித்தியாசம் அன்று முறைப்படி உரிமை வாங்காமல் திருட்டுத்தனமாக ரீமேக் செய்தார்கள். இப்போது முறைப்படி உரிமை பெற்று ரீமேக் செய்கிறார்கள். இணையவழி தொடர்புகள் அதிகரித்தது இதற்கு பிரதான காரணம்.

முன்பு பிறமொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்தால் அது யாருக்கும் தெரிவதில்லை. செய்தித் தொடர்புக்கான வசதி அப்போது இல்லை. ஆனால் இன்று எந்தவொரு படத்தின் கதையை நீங்கள் திருடினாலும் அடுத்த நிமிடமே அது அனைவருக்கும் தெரிந்துவிடும். இணையம் வழியாக எளிதாக அதனை கண்டுபிடித்துவிடலாம். இணைய வசதி காரணமாக வெளிநாடுகளில் தயாராகும் படங்கள் உள்ளூர் ரசிகர்களை எளிதாக எட்டுகின்றன.

யுடிவி தமிழின் தலைமைப் பொறுப்பில் தனஞ்செயன் இருந்தபோது ஐ'யம் சாம் படத்தைத் தழுவி தெய்வத்திருமகள் படத்தை எடுத்தனர். இந்த விவரம் தமிழில் உலக சினிமாக்கள் குறித்து எழுதிவருகிறவர்கள் ஐ'யம் சாம் தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தினர். அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்ததன் விளைவாக யுடிவி பல கோடிகள் நஷ்டஈடாக அவர்களுக்கு தந்தது. இந்த விவகாரம் வெளியே தெரியாமல் அமுக்கப்பட்டது. இதன் பிறகு வெளிநாட்டுப் படங்களை தமிழில் ரீமேக் செய்வதில் சிக்கல் எழுந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்கு விவரம் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் மேலெழுந்தது. அதற்கு முக்கிய காரணம், ஹாலிவுட் படங்கள் இந்தியாவின் முக்கிய சந்தையானப் பிறகு, ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் இந்தியாவில் அலுவலகங்களை திறந்தன. இங்கு நடப்பவை உடனடியாக யுஎஸ்வரை தெரியவரும். இது யுஎஸ் தவிர்த்த மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்.

இந்த மாற்றம் தமிழ் சினிமாவில் சில விளைவுகளை ஏற்படுத்தியது. பிறமொழிப் படங்களை திருடி படம் எடுக்கக் கூடாது. முறைப்படி உரிமை வாங்கி எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உண்டானது.

காதலும் கடந்து போகும்

சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி, தென் கொரியப் படமான மை டியர் டெஸ்பரடோ படத்தின் உரிமையை முறைப்படி வாங்கி அதனை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார். எஸ்கிமோ காதல் என்று அவர் முதலில் பெயர் வைத்த இந்தப் படம்தான் பிறகு காதலும் கடந்து போகும் என்ற பெயரில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்தியாவின் பிறமொழிகளில் வெளியான படங்களை முறைப்படி வாங்கி தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு வெளியே தயாரான படத்தின் கதையை முறைப்படி வாங்கி தமிழில் எடுத்தப் படம், காதலும் கடந்து போகும்.

தூங்கா வனம்

வெளிநாட்டுப் படங்களை சலிக்காமல் தமிழில் அடித்தவர் கமல். ஒரே நல்ல விஷயம், கமல் அப்படியே அடிப்பதில்லை. தனக்குப் பிடித்த விஷயத்தை தமிழுக்கு ஏற்றபடி கிரியேடிவாக மாற்றி எடுப்பார். ஆனாலும், இனியும் அப்படி அடிக்க முடியாது. கண்டுபிடித்து டின் கட்டிவிடுவார்கள் என்ற நிலையில் பிரெஞ்சில் வெளியான ஸ்லீப்லெஸ் நைட் படத்தின் கதையை முறைப்படி வாங்கி தூங்கா வனம் படத்தை எடுத்தார்.

தோழா

பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸ் படத்தின் ரீமேக்தான் தோழா. இந்தப் படத்தையும் முறைப்படி உரிமை வாங்கியே தமிழில் எடுத்தனர். இப்பொழுது ஜுலியாஸ் ஐஸ் படத்தை முறைப்படி வாங்கி தமிழ், தெலுங்கில் எடுக்க உள்ளனர்.

கொலையுதிர்காலம்

நயன்தாரா நடித்துவரும் கொலையுதிர்காலம் படத்தின் கதை ஹாலிவுட் படமான HUSH இன் தழுவல் என்ற பேச்சு உள்ளது. இந்த ஹாலிவுட் படத்தின் நாயகி காது கேட்காத, வாய் பேச முடியாத எழுத்தாளர். தனியாக கதை எழுதவரும் இடத்தில் சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக் கொள்கிறாள். அவனிடமிருந்து அவள் எப்படி தப்பித்தாள் என்பது கதை. கொலையுதிர்காலம் படத்தில் நயன்தாரா எழுத்தாளர். வாய் பேசாத காது கேட்காத கதாபாத்திரம். ஆங்கிலப் படத்தின் கதாபாத்திரத்தை மட்டும்தான் எடுத்துக் கொண்டோம், கதை முற்றிலும் புதிது என்று படத்தின் இயக்குநர் சக்ரி டோலட்டி விளக்கம் அளித்திருந்தார். ஆயினும் படத்தின் கதை பிரச்சனையானது. கடந்த சில மாதங்களாக இந்தப் படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. படம் ட்ராப் செய்யப்பட்டிருக்கலாம் என்ற பேச்சும் உள்ளது.

ஒருகாலத்தில் உரிமை வாங்காமல் தைரியமாக காப்பி அடித்தவர்கள் இணையதள வளர்ச்சியால் அந்த தவறை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம், கொஞ்சம் கொஞ்சம்தான். இப்போதும் இலைமறைகாயாக அடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும் இதுவே ஒரு நல்ல தொடக்கம்தான்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment