Advertisment

படைவீரன் - சினிமா விமர்சனம்

‘தங்கள் ஜாதி தான் உசத்தி’ எனும் ஆதிக்க ஜாதிக்கும், அவர்களை எதிர்த்து மேலேறத் துடிக்கும் இன்னொரு ஜாதிக்கும் இடையில் நடக்கும் கதைதான் ‘படைவீரன்’.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Padai-Veeran-review

‘தங்கள் ஜாதி தான் உசத்தி’ என உயர்த்திப் பிடிக்கும் ஆதிக்க ஜாதிக்கும், அவர்களை எதிர்த்து மேலேறத் துடிக்கும் இன்னொரு ஜாதிக்கும் இடையில் நடக்கும் கதைதான் ‘படைவீரன்’.

Advertisment

தேனிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க ஜாதிக்கும், அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் இன்னொரு ஜாதிக்கும் இடையே எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு ஜாதியை எப்போதும் அடக்கியே வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார் ஆதிக்க ஜாதியின் தலைவராக இருக்கும் கவிதா பாரதி. இரண்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலித்தால், அவர்களை அடித்து துவைக்கிறார்கள்.

ஊரில் சண்டித்தனம் பண்ணித் திரியும் ஹீரோ விஜய் யேசுதாஸுக்கு, போலீஸ் வேலையில் இருக்கும் சுகத்தைக் கேட்டதும், எப்படியாவது போலீஸில் சேர்ந்துவிடத் துடிக்கிறார். ஆனால், அதற்குத் தகுதியில்லாத அவர், தன் சொந்தக்காரரான எக்ஸ் சர்வீஸ்மேன் பாரதிராஜாவிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து தேர்வாகிவிடுகிறார்.

சுகமாக இருக்கும் என்று நினைத்து சென்ற இடத்தில், போலீஸ் பயிற்சியில் ட்ரில் வாங்குகிறார்கள். அது தாங்க முடியாமல் சொந்த ஊருக்கு ஓடிவந்து விடுகிறார் விஜய் யேசுதாஸ். ஆனால், போலீஸ் வந்து அவரை மறுபடியும் அழைத்துச் சென்றுவிடுகிறது. விஜய் யேசுதாஸ் போலீஸாக ஆனாரா? இரண்டு ஜாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டை என்னவானது? என்பது படத்தின் மீதிக்கதை.

ஹீரோவாக விஜய் யேசுதாஸ், நடிப்பில் பரவாயில்லை ரகம். இன்னும் சில படங்களில் முழுமையான நடிகராக மாறிவிடுவார். ஹீரோயினா அம்ரிதா அசத்தல் ரகம். தன்னைக் கிண்டல் செய்த விஜய் யேசுதாஸைப் பழிவாங்கும் காட்சி அற்புதம். கிராமத்துப் பெண்ணாக அசத்தலாகப் பேசி நடித்துள்ளார். எக்ஸ் சர்வீஸ் மேனாக சில காட்சிகளில் நடித்தாலும் மனதில் நிற்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. ஆதிக்க ஜாதியின் தலைவராக கவிதா பாரதி நூத்துக்கு நூறு பொருந்திப் போகிறார்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஜாதி மீது இருக்கும் பற்று ஆச்சரியத்தையும், அச்சத்தையும் தருகிறது. ஜாதி மீதான வெறியால், தன்னுடைய ஜாதிக்குள் இருப்பவர்களையே காவு வாங்குவதெல்லாம் கொடூரம். படம் நெடுக ஜாதியைத் தூக்கிப்பிடித்துவிட்டு, க்ளைமாக்ஸில் மட்டும் ஜாதிக்கு எதிராக இயக்குநர் தனா கிளாஸ் எடுத்திருப்பது நெருடலாக இருக்கிறது. ஆனாலும், அந்த க்ளைமாக்ஸ் காட்சி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவில் தேனியின் அழகு அப்பட்டமாகத் தெரிகிறது. கார்த்திக் ராஜாவின் இசை, அடுத்தடுத்து என்னாகுமோ என்ற பதைபதைப்புக்கு பலம் சேர்க்கிறது. ஆனால், படத்தில் நிறைய பாடல்கள் இடம்பெற்றிருப்பது சலிப்பைத் தருகிறது. விறுவிறுப்பான திரைக்கதையில் போலீஸ் ட்ரெயினிங் முடிந்தபிறகு இடம்பெறும் பாடல், வேகமாக சென்று கொண்டிருக்கும் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியதைப் போல ஆகிவிடுகிறது. கேட்கவும், பார்க்கவும் கூட நன்றாக இல்லாத அந்தப் பாடலை தூக்கிவிடுவது, படத்துக்கு இன்னும் பலம் சேர்க்கும்.

Tamil Cinema Padaiveeran Movie Vijay Yesudas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment