தீபிகா படுகோனே நடிப்பில் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பிய ‘பத்மாவதி’ ஹிந்திப் படம், ஒருவழியாக ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
ராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை இது. ராணி பத்மினியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. குறிப்பாக, ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனை என்ற அமைப்பு, பல்வேறு குடைச்சல்களைக் கொடுத்து வருகிறது. பலமுறை ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போராட்டங்கள் நடத்தியதோடு, செட்டின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ‘பத்மாவதி’ படத்தின் போஸ்டரில் உள்ள தீபிகா படுகோனே படத்தை, குஜராத்தின் சூரத் நகரில் ரங்கோலி ஓவியமாக வரைந்திருந்தார் ஓவியர் கரண் கே. சுமார் 48 மணி நேரம் கஷ்டப்பட்டு அவர் இந்த ஓவியத்தை உருவாக்கினார். தீபிகா படுகோனே போல அப்படியே தத்ரூபமாக இருந்தது அந்த ஓவியம்.
திடீரென என்கிருந்தோ வந்த 100க்கும் மேற்பட்ட கர்ன சேனை அமைப்பினர், ஓவியத்தை சிதைத்து அட்டகாசம் செய்தனர். இதனால் மனமுடைந்த ஓவியர் கரண் கே, ட்விட்டரில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். நவம்பர் மாதம் 17ஆம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ராஜஸ்தானில் இந்தப் படத்தால் நிகழ்ந்துவரும் பிரச்னை காரணமாக டிசம்பர் 1ஆம் தேதிக்கு ரிலீஸைத் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், ‘பத்மாவதி’ படம் ரிலீஸாக இருக்கும் டிசம்பர் 1ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தது ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனை. ‘பத்மாவதி’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என அந்த அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் கல்வி இந்த அழைப்பை விடுத்தார்.
அத்துடன், சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பித்ததில் சரியாக தகவல்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என சென்சார் போர்டு அந்த சான்றிதழை நிராகரித்தது. சரியான தகவல்களுடன் விண்ணப்பிக்கும்போது படத்தைப் பார்த்து சான்றிதழ் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சென்சார் போர்டு அறிவித்தது.
தீபிகா படுகோனேவுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நீடித்த நிலையில், மிரட்டலும் விடுக்கப்பட்டது. ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
அரியானா மாநில பாஜகவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு, இதைப் பாராட்டியிருக்கிறார். அத்துடன் தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் கூறியிருக்கிறார். இதேபோல மிரட்டல்கள் தொடர்ந்ததால், தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், அகில பாரதீய சத்ரிய மகா சபா அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். தீபிகா படுகோனே, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் உருவ பொம்மைகளைக் கொளுத்தினர். பின்னர், கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு கொடுத்தனர். பின்னர் அந்த அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் புவனேஸ்வர்சிங் பேசுகையில், ‘நடிகை தீபிகா படுகோனேவை உயிரோடு கொளுத்துபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.
‘தீபிகா படுகோனேவுக்கு ராணி பத்மாவதியின் தியாகம் தெரியாது. உயிருடன் கொளுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தீபிகா தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்தப் பரிசை அறிவிக்கிறோம்’ என்று புவனேஸ்வர்சிங் பேசியிருக்கிறார். அடுத்தடுத்து இந்த விவகாரம் வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதால், தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலவரங்கள் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வருகிற 25ஆம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதேநாளில் அக்ஷய் குமார் தயாரித்து, நடித்துள்ள ‘பேட் மேன்’ படமும் ரிலீஸாக இருக்கிறது.