Advertisment

ஜல்லிக்கட்டு யாருக்கான அடையாளம் ? குறிப்பிட்ட சாதியினர் வீரத்திற்கு உரிமை கொண்டாட முடியுமா? பேட்டைக்காளி பேசும் அரசியல் என்ன? 

மேலும் இங்கே வீரம் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்திற்கு எதிராக இந்த சீரிஸ் கேள்வி எழுப்புகிறது. பெண்களை நடத்தும் விதம், அதிகாரம், சாதிப் பகை உருவாகும் காரணம் என்று சில முக்கிய புள்ளிகளை தொட்டிருக்கிறது.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜல்லிக்கட்டு யாருக்கான அடையாளம் ? குறிப்பிட்ட சாதியினர் வீரத்திற்கு உரிமை கொண்டாட முடியுமா? பேட்டைக்காளி பேசும் அரசியல் என்ன? 

இயக்குநர் ராஜ் குமார் எழுதி இயக்கிய வெப் சீரிஸ் “ பேட்டைக்காளி’. இதன் முதல் எபிசோட் அக்டோபர் 21ம் தேதி ’ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியானது. இயக்குநர் வெற்றிமாறனின்  தயாரிப்பு நிறுவனமான“ Gross root film company” இந்த வெப் சீரியஸை தயாரித்துள்ளது.

Advertisment

வெப்சீரிஸின் கதை  ஜல்லிகட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படும் விளையாட்டை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை தமிழர்களின் உணர்வோடு கலந்தது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டை தடை செய்வதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டம் அதற்கு சிறந்த உதாரணம்.

அந்தப் போராட்டத்தின் தேவை என்னவென்று அப்போதைய காலகட்டத்தில் பெரிதாக போராடியவர்கள் யோசிக்கவில்லை என்பதும், தமிழர்களின் அடையாளம் என்று ஜல்லிக்கட்டை புனைவதற்கு பின்பு அரசியல் இருக்கிறது என்றும் தலித் செயல்பாட்டாளர்கள் விமர்சித்திருந்தனர்.

அந்தப் போராட்டம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு இளைஞர்களின் உணர்ச்சி சீற்றம் என்ற பார்வையும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு என்று கூறப்படும்  வீர விளையாட்டின் சில முக்கிய புள்ளிகளை ’பேட்டைக்காளி’வெப் சீரிஸ் தொட்டிருக்கிறது.

கதை தென் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கையில் நடைபெறுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  முதல் எபிசோடின் அறிமுகம்  -”தூங்கும் எரிமலையின் பெருவெடிப்பு”  என்ற வாசகத்துடன்  தொடங்கிறது. மறைந்திருந்து சமயம் பார்த்து சிலரை தாக்கிவிட்டு தப்பியோடும் கதாபாத்திரம்தான் நமக்கு கதையை அறிமுகப்படுத்துகிறது.

பாண்டிய மன்னன் படையில் தங்களது முன்னோர்கள் படை வீரர்களாக இருந்ததாகவும், தொடர்ந்து அவர்கள் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டு, சொந்தமாக நிலம் இல்லாமல் வாழ்ந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இதை முக்கியப்புள்ளியாக நாம் பார்க்க வேண்டும். விவசாய கூலிகள் பண்ணையாரை எதிர்த்ததால் உண்டான சாதிய கலரவம், அவர்களுக்கு வேலையிழப்பை உண்டாக்குகிறது. தொடர்ந்து அவர்கள் வேறு இடத்திற்கு செல்கிறார்கள். பின்பு  தங்களை எப்படி மேம்படுத்திக்கொண்டார்கள் என்பதை கதை அதன் போக்கில் விளக்குகிறது.

முலையூரில் வாழ்பவர்கள் விவசாய கூலிகளாக இருக்கின்றனர். காட்டு மாடுகளை வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர். திரைக்கு பின்னால் ஒலிக்கும் வாயிஸ் ஓவருக்கு (voice over) ஏற்றவாறு மாடு கூட்டத்தின் தலைமை மாடு இருக்கும் இடத்திற்கு மற்ற மாடுகளும் வருவதாக காட்சிப்படுத்தியிருப்பது அசத்தல்.

விவசாய கூலிகளான ஒடுக்கப்படும் சமூகம் வாழும் ஊரான முலையூருக்கும் நிலச்சுவந்தார்களான தாமிரை குளத்திற்கும் ( ஊர்) இடையில் இருக்கும் பகை, ஜல்லிகட்டு விளையாட்டு, வீரம் உள்ளிட்ட கூறுகளை சீரிஸ் அணுகுகிறது.

முலையூரின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பவர்தான் முத்தையா(கிஷோர்). அவர்தான் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடி வரும் வழியில் தனது ஊரின் கதையை சொல்கிறார். தாமிரை குளத்தின் சேர்மனாக ( chairman ) வரும் செல்வ சேகரப் பண்ணையார் ( வேல ராமமூர்த்தி). இவரது மாடுக்குதான் எல்லா போட்டிகளிலும் முதல் மரியாதை தரப்படுகிறது. மேலும் அடுத்தாக நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டில் இவரது மாட்டைப் பிடிக்ககூடாது என முலையூர்காரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதை மீறி முத்தையாவின் அண்ணன் மகனாக இருக்கும் பாண்டி (கலையரசன்) அந்த மாட்டை பிடித்துவிடுகிறார். இதனால் கோவமடையும் செல்வ சேகரப் பண்ணையார் (வேல ராமமூர்த்தி) அவனை பழி தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். இத்தோடு முதல் எபிசோட் முடிகிறது.

இரண்டாம் எபிசோடில் மனிப்பு கேட்க செல்லும்  பாண்டி ( கலையரசன்) கொலை செய்யப்பட்டு காட்டில் கிடக்கிறார். இதைத் தொடர்ந்து என்ன நடக்கும் என்பதையும் அடுத்த எபிசோடில் இருந்துதான் பார்க்க முடியும். ஜல்லிகட்டை வெறும் தமிழரின் வீர விளையாட்டு என்று அணுகாமல், அதோடு பிணைந்திருக்கும் சாதிய அரசியலை இந்த சீரிஸ் கதையாக அணுகியிருக்கிறது. இது காலத்தின் தேவை என்றே நாம் பார்க்க வேண்டும். 

இங்கே ஜல்லிகட்டு அனைவருக்குமான விளையாட்டு என்ற ஒரு பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால் இது குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும்  என்றும் ஒட்டுக்கப்பட்டவர்கள் தங்கள் சாதி மாடுகளை பிடிக்கக் கூடாது என்று கட்டளையிடும் வழக்கம் இருப்பதை மையமாக வைத்தும் இக்கதை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தில் தாமிரை குளத்து மாடுகளை முலையூர்காரர்கள் பிடிக்கக் கூடாது என்று தண்டோரா போடப்படுகிறது. இந்த காட்சிகள்  நமக்கு எதார்த்த களநிலவரத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும் நாம் செய்திகளில் கடந்து போன விஷயங்களையும் இது நினைவுப்படுத்துகிறது.  குறிப்பிட்ட சாதி  மாடுகளை பிடித்ததால், தாக்கபட்ட இளைஞர்கள், ஒடுக்கப்பட்டர்கள் வசிக்கும் இடத்திற்கு உள்ளே தங்கள் காளை சென்றதால் அவர்களது வீடுகளைகூட தாக்கும் சாதிய ஒட்டுக்கு முறையை  நாம் செய்திகளாக கடந்து சென்றிருப்போம். இதை சீரிஸ் பேசுகிறது.    

மேலும் இங்கே வீரம் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே சொந்தம்  என்ற எண்ணத்திற்கு  எதிராக இந்த சீரிஸ் கேள்வி எழுப்புகிறது.  பெண்களை நடத்தும் விதம், அதிகாரம், சாதிப் பகை உருவாகும் காரணம் என்று சில முக்கிய புள்ளிகளை தொட்டிருக்கிறது.

காட்சிப்படுத்தல், குறிப்பாக தென் தமிழ்நாட்டின் இயற்கை சூழ்நிலை, நிலத்தின் நிறம் இப்படியாக ஒரு பார்வையாளருக்கு விருந்தாக அமைகிறது சீரிஸின் காட்சிகள். மேலும் கதாபாத்திரத்தின் தேர்வு நேர்த்தியாக பொருந்தியுள்ளது. கலையரசன், கிஷோர், வேல ராமூர்த்தி ஆகியோர் கதைக்கு அப்படியே பொருந்தியிருக்கிறார்கள். ஆழமான பார்வையை இனி வரும் எபிசோட் நமக்கு தரும் என்று எதிர்பாக்கலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment