Advertisment

அன்புச்செழியன் மீதான புகாரை வாபஸ் வாங்கிய தயாரிப்பாளர் சி.வி.குமார்

மதுரை அன்புச்செழியன் மீதான புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சி.வி.குமார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
அன்புச்செழியன் மீதான புகாரை வாபஸ் வாங்கிய தயாரிப்பாளர் சி.வி.குமார்

மதுரை அன்புச்செழியன் மீதான புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சி.வி.குமார்.

Advertisment

சசிகுமாரின் அத்தை மகனும், இணை தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலையைத் தொடர்ந்து இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன், சுசீந்திரன், நடிகர் விஷால் ஆகியோர் அன்புச்செழியனுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். நடிகர் அஜித் கூட அன்புச்செழியனால் மிரட்டப்பட்டதாகக் கூறி பரபரப்பைப் பற்ற வைத்தார் இயக்குநர் சுசீந்திரன். அதேசமயம், இயக்குநர்கள் சீனு ராமசாமி, சுந்தர்.சி, ராஜகுமாரன், நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாகத் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

அசோக் குமாரை தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அன்புச்செழியன் மீது புகார்கள் குவியும் என்று எதிர்பார்த்தால், இன்னும் ஒரு புகார் கூட அன்புச்செழியன் மீது தரப்படவில்லை.

இந்நிலையில், ஏற்கெனவே அன்புச்செழியன் மீது கொடுத்த புகாரையும் நேற்று வாபஸ் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார்.

தற்போது ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் சி.வி.குமார். இதுதான் அவர் இயக்கியுள்ள முதல் படம். இந்தப் படத்தில் சந்தீப் கிஷண், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தைத் தயாரிக்க, மதுரை அன்புச்செழியனிடம் பைனான்ஸ் வாங்கியுள்ளார் சி.வி.குமார். ஆனால், பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால், அவரால் ‘மாயவன்’ படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி புகார் அளித்தார். ஆனால், அந்த புகாரை நேற்று வாபஸ் பெற்றுள்ளார் சி.வி.குமார்.

‘தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்வதற்கான தடையில்லா சான்றிதழை, அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் அளித்துவிட்டதாகவும், தற்போது தன்னால் படத்தை வெளியிட முடியும் என்பதால் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும்’ அவர் அளித்த வாபஸ் மனுவில் தெரிவித்துள்ளார்.

Tamil Cinema Anbu Chezhiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment