இந்தியாவின் 50வது சர்வதேச திரைப்பட விழா 2019 தொடக்க நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகிய இரண்டு மெகா ஸ்டார்கள் கலந்துகொண்டதால் விழா கலைகட்டியது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோல்டன் ஜுப்பிலி ஐகான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தன்னுடன் ஹம் திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நட்சத்திர நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு உத்வேகமாக இருந்தார் என்று கூறினார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், “மரியாதைக்குரிய கோவா முதல்வர், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், என்னுடைய உத்வேகமாக இருக்கிற அமிதாப் பச்சன் உள்ளிட்ட அனைவருக்கும் மாலை வணக்கம். நான் இந்தியாவின் சர்வதேச திரைப்படவிழாவின் கௌரவமான கோல்டன் ஜுபிலி ஐகான் விருது பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “எனக்கு இந்த விருதை வழங்கியதற்காக இந்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த விருதை எனது படங்களில் பணியாற்றிய எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக எனது ரசிகர்கள் எனது தமிழ் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்”என்று கூறினார்.
பின்னர், இந்திய சர்வதேச திரைப்படவிழா 2019 -இன் அமைப்பாளர்கள் தலைமை விருந்தினர் அமிதாப் பச்சனுக்கு மரியாதை செய்தனர்.
பார்வையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்தபின், நடிகர் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடனான தனது பிணைப்பைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் பச்சன், “இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்கும் இவ்வளவு பெரிய மரியாதை எனக்கு வழங்கியதற்கும் நன்றி. இது என் தந்தை மற்றும் தாயின் ஆசீர்வாதம். அனைத்து இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இசை இயக்குநர்கள் இருப்பதால் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஆனால், எனது ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் நீங்கள் என்னை ஆதரித்தீர்கள். எல்லா அன்பிற்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். என்னால் அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாது.” என்று கூறினார்.
தனக்கு கௌரமவளித்த அரசுக்கு நன்றி தெரிவித்த அமிதாப் பச்சன், ரஜினிகாந்த்துக்கும் நன்றி தெரிவித்து அவரைப் பாராட்டிப் பேசினார்.
மேலும், அமிதாப் பச்சன் பேசுகையில், “என்னுடன் இருந்ததற்கும் வியக்கத்தக்க வகையில் உத்வேகம் அளித்ததற்கும் ரஜினிக்கு மிக்க நன்றி. அவர் ஒரு பணிவான மனிதர். அத்தகைய பணிவு ஆரம்பத்திலிருந்து வந்தது. இன்று அவரை நம்முடன் இங்கே இருப்பது நம்பமுடியவில்லை. இரவு பகல் என எல்லா நாளும் அவர் உத்வேகம் அளிக்கிறார். மிக்க நன்றி ரஜினி. மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி. இன்று என்னை கௌரவித்ததற்காகவும் நாளை தொடங்கும் எனது படங்களை மீண்டும் பார்ப்பதற்கு தேர்ந்தெடுத்தற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்களை மீண்டும் அங்கே பார்ப்பேன்” என்று கூறினார்.
இந்தியாவின் 50வது சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) புதன்கிழமை கோவாவில் தொடங்கியது. இந்த திரைப்பட விழா நவம்பர் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.