ரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

அனைவருக்கும் எனது புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லாரும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பாகத் திரண்ட ரசிகர்களை நேரில் சந்தித்து தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் எது சொன்னாலும், செய்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகும். அதுவும் அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததில் இருந்து, அவரின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ட்விட்டரில் காலையிலேயே வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த். “என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்” என அவர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், ரஜினிகாந்தைப் பார்ப்பதற்காக போயஸ் கார்டனில் உள்ள அவர் வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டனர். வீட்டில் இருந்தால், மாடியில் இருந்து அவர்களைப் பார்த்து கை அசைப்பதுதான் ரஜினியின் பெரும்பான்மையான பழக்கம். ஆனால், இன்று வீட்டில் இருந்து வெளியேவந்து கேட்டின் முன்பு நின்றிருந்த ரசிகர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

“அனைவருக்கும் எனது புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லாரும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்” என ரஜினிகாந்த் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் வெள்ளை  வேட்டி – சட்டை அணிந்திருந்தார்.

×Close
×Close