scorecardresearch

பேரன்பு – தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்

வயதிற்கு வந்த உடன் பாப்பா தன் வாயில் வைத்திருந்த லாலிபப் சாக்லெட்டை எடுத்து தன் உதட்டிற்கு சாயம் பூசி கொள்ளும் காட்சி எல்லாம் ராமின் கலை தாகத்தின் உச்சம்!

பேரன்பு – தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்
Peranbu, Peranbu Movie, Peranbu Movie review, Actor Mammooty, Mamuka, Mammooty movie, Director Ram, Ram, Actress Anjali, Anjali movies – பேரன்பு, பேரன்பு விமர்சனம்; இயக்குனர் ராம் , மம்மூட்டி,சாதனா, நடிகை அஞ்சலி, அஞ்சலி, அஞ்சலி அமீர், திருநங்கை அஞ்சலி அமீர்

Peranbu Movie Review | பேரன்பு விமர்சனம்

நடிகர்கள்    : மம்மூட்டி, சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர்
இயக்குனர் : ராம்
ரேட்டிங்       : 4/5

தமிழ் சினிமாவின் மீது இயக்குனர் ராம் வைத்திருக்கும் ‘பேரன்பு’ தான் அவர் இத்தகைய படங்களை எடுக்க உந்துகோலாக இருக்கிறது. கற்றது  தமிழ், தங்க மீன்கள், தரமணி வரிசையில் ராமின் அடுத்த படைப்பு – பேரன்பு.

“என் வாழ்க்கையில நடத்த சில விஷயங்களை தேர்ந்தெடுத்து இந்த கதைய நான் எழுதுறேன். நீங்க எவளோ நல்ல, ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சிக்கறதுக்காக இத நான் எழுதுறேன்,”  என்ற வாய்ஸ் ஓவரில் ஆரமிக்கிறது படம்.

அப்பா அமுதனாக மெகா ஸ்டார் மம்மூட்டி நடித்து இருக்கிறார். பாப்பாவாக சாதனா நடித்துள்ளார். விஜயலக்ஷ்மியாக அஞ்சலி நடித்துள்ளார். ஸ்பாஸ்டிக் குழந்தையை வளர்க்க தாயின் துணையின்றி ஒரு தந்தை தனியாக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பது தான் பேரன்பின் மூல கதை.

துபாயில் இருந்து சென்னைக்கு திரும்பும் அமுதனுக்கு அதிர்ச்சி. தன் குழந்தையை தனிமையில் தவிக்கவிட்டு தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் சென்று வாழ்ந்து வருகிறார் என்பது அமுதனுக்கு புரிகிறது. தாயின் அறைவனைப்பிலே வளர்ந்த அந்த குழந்தை புதிதாக பார்த்த தன் தந்தையை வெறுக்கிறது. அமுதன் எத்தனை முயன்றும் பாப்பா அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.  “சூரியனும் பனியும் போல வசிக்க துவங்கினோம்” என்று தங்கள் உறவை விவரிக்கிறார் அமுதன்.

இதற்கிடையில்,  அமுதனின் அம்மா (வடிவுக்கரசி) அந்த குழந்தையை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்றி தன் மகனுக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அந்த ஏரியாவில் இருக்கும் அஸோஸியேஷன் நபர்களோ, ‘குழந்தை போடுற சத்தத்தால் எங்களால் தூங்க முடியல’ என்று கூறி அமுதனை வேற வீடு பார்க்க சொல்கின்றனர். இப்படி அனைவரும் தன்னையும் தன் மகளையும் அழுத்திக் கொண்டு  இருப்பதை பொறுக்காமல், தன் குழந்தையை யாரும் காணாத; குறை சொல்லாத; குருவிகள் சாகாத ஒரு  இடத்திற்கு செல்கிறார் அமுதன்.

தன் தந்தையை வெறுத்த பாப்பா மெதுவாக அவரை நேசிக்க அரமிக்கிறார்.  இவர்கள் இருவருக்கும் இடையில் மூன்றாவது நபராக வீட்டு வேலைக்காக வந்து சேருகிறார் விஜயலக்ஷ்மி.

எழில் மிகுந்த அந்த வீட்டை அங்கு இருக்கும் லோக்கல் தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களுக்கு எழுதி தரும்படி அமுதனை மிரட்டுகிறார்கள், அவர் மறுக்கிறார். அமுதனை ஏமாற்ற விஜியை பயணப்படுத்துகின்றனர். அமுதனை திருமணம் செய்கிறார் விஜி. பின்பு விவாகரத்து செய்து அந்த வீட்டை நஷ்ட ஈடாக கேட்கிறார், வீட்டை விட்டு வெளியேறுகிறார் அமுதனும் பாப்பாவும். தன் பெட்டி படுக்கையை எடுத்து கொண்டு வீட்டை காலி செய்து அமுதன் செல்லும்போது,”எதுக்காக நான் உங்கள ஏமாத்தினேன்னு கேளுங்க சார்,” என்று விஜி சொல்ல, “என்ன போய் ஏமாத்தணும்னு உங்களுக்கு தோணிருந்த நீங்க எவளோ பெரிய கஷ்டத்துல இருப்பீங்க, பரவால,” என்று அமுதன் சொல்லும்போது அரங்கம் அப்ளாசில் அதிர்ந்தது.

வயதிற்கு வந்த பாப்பாவை; தங்க வீடு இன்றி நகரத்தில் நரக வாழ்க்கையை எதிர்கொள்கிறார் அமுதன். ஒரு வேலையை வாங்கி கொண்டு பாப்பாவை ஒரு நலக் காப்பகத்தில் சேர்கிறார். நகரத்தில் இருக்கும் இது போன்ற காப்பகங்கள் எத்தனை கொடூரமான செயல்களை செய்கின்றனர் என்பதை உரக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்.

காப்பகத்தில் இருந்து காப்பாற்றி பாப்பாவும் அமுதனும் ஒரு தனியார் விடுதியில் தங்குகின்றனர். வயதிற்கு வந்த பெண் எத்தகைய உணர்வுகளை அவளுள் வளர்த்து கொள்வார்; தாயின் துணையின்றி  அவளை வளர்க்க ஒரு தந்தை எத்தனை கஷ்டங்களை எதிர்கொள்வார் என்பதை அப்பட்டமாக காண்பித்து இருக்கிறார்  ராம். வயதிற்கு வந்த உடன் பாப்பா தன் வாயில் வைத்திருந்த லாலிபப் சாக்லெட்டை எடுத்து தன் உதட்டிற்கு சாயம் பூசி கொள்ளும் காட்சி எல்லாம் ராமின் கலை தாகத்தின் உச்சம்!

தன் மகளுடன் எங்கும் செல்ல முடியாமல்; தன் மகளையும் சரியாக பார்த்து கொள்ள முடியாமல்; தன்னையும் தன் மகளையும் வெறுக்கின்ற உலகத்தை விட்டு செல்ல அமுதன்  நினைக்கிறார். அவரை தடுத்து நிறுத்தி அவருக்கு துணையை  அமைகிறார் திருநங்கை மீரா(அஞ்சலி அமீர்).  போராட்டம் நிறைந்த இவர்களது வாழ்க்கை; சோலை வனமாக மாறுகிறது. அத்துடன் அத்தியாயம்  முடிகிறது.

அமுதனாக மம்மூட்டி :  இவர் நேரடியாக தமிழில் நடித்த கடைசி படம் ஆனந்தம். அது 2001ம் ஆண்டு வெளியானது. கிட்டத்தட்ட; 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கிறார். அந்த இடைவெளியை ஒரே படத்தில் நிரப்பி இருக்கிறார். இது போன்ற கதையில்; தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை எல்லாம் தூரம் தள்ளிவிட்டு நடித்ததற்கு மம்மூட்டிக்கு அத்தனை நன்றிகள். நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இதுவரை அவர் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளார்; இது அவருக்கு நான்காவதாக அமையும் என்பதில் மாற்றம் இல்லை.

பாப்பாவாக சாதனா : தங்கமீன்கள் படத்தில் துறுதுறுவென்று ஓடி, படபடவென்று பேசி நம் உள்ளங்களை கவர்ந்தவர் இந்த படத்தில்  ஸ்பாஸ்டிக் குழந்தையாக நடக்க சிரமப்பட்டு , பேச சிரமப்பட்டு நடிப்பில் வேறு கட்டத்திற்கு சென்று இருக்கிறார்.இவரின் நடிப்பு பல இடங்களில்  நம்மை கலங்கடிக்கிறது.

இயக்குனர் ராம் :  ஒரு படத்தை எடுப்பதற்கு ஏன் இவர் இத்தனை காலம் எடுத்துக்கொள்கிறார் என்று கேட்பவர்களுக்கு அவர் தன் படம் மூலம் பதில் அளிக்கிறார். அவரின் அத்தனை உழைப்பும் படம் பார்க்கும்போது நமக்கு புரிகிறது. அவர் fast-food போல் சினிமா பரபரவென்று இருக்க வேண்டும் என்று விரும்பவோருக்கு படம் இயக்கவில்லை; உணவை ரசித்து ருசித்து உண்பது போல் சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு திரைப்படம் இயக்குகிறார்.  ஹட்ஸ் ஆஃப்! ராம் !

ஒளிப்பதிவாளர் தேனீ  ஈஸ்வர் /இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா</strong> : ஒவ்வொரு ஷாட்டையும் அத்தனை அழகாக, தெளிவாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.   இவரின் ஒளிப்பதிவுக்கு, ராமின் கதைக்கு உயிர் தந்து இருக்கிறார் யுவன். பாடல்களும் சரி; பின்னணி இசையும் சரி,  ராஜாவின் புதல்வன் புகுந்து விளையாடியுள்ளார்..

இந்த திரைப்படம் பார்க்கும்போது கண்டிப்பாக பல இடங்களில்  பாலு மஹேந்திராவின் மூன்றாம் பிறை நமக்கு நினைவுக்கு வரும். அந்த படம் எத்தகைய உணர்வுகளை நமக்குள் விதைத்ததோ அதை விட பல்மடங்கு பேரன்பு நமக்கு ஏற்படுத்தும்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ram directorial peranbu movie review starring mammootty